வாரத்தின் முதல்நாள், ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் போதும். உங்கள்,
எமது, நமது தொலைக்காட்சிகளுக்கு படுகொண்டாட்டம்தான். அதிலும் செய்தி சேனல்களுக்கு சொல்லவே
வேண்டியதில்லை. செய்தியோடு விளையாடி, செய்தியோடு உறவாடி, செய்தியோடு மல்லுக்கட்டும்
செய்தி, செய்தி, செய்திகள்தான்.
அதிகாலை ஐந்து
மணிக்கெல்லாம் தொடங்கும் செய்திகள் இரவு பனிரெண்டு மணியானால் ‘குட் நைட்’ அவர்களின்
வாயிலிருந்து வரணுமே......!
மணி ஐந்துக்கு
திரைச்செய்திகள்.
ஆறுக்கு வரிச்செய்திகள்.
ஏழு மணிக்கு தலைப்பு
செய்திகளுடன் கூடிய அரசியல், விளையாட்டு, உலக செய்திகள்
மணி எட்டுக்கு
அரை வட்ட அமர்வுகள்.
மணி ஒன்பதுக்கு
நேர்க்காணல்.
நேர்க்காணல், விவாதங்கள்
நடத்திடாத தொலைக்காட்சி ஒரு தொலைக்காட்சியா.... எனச் சொல்லும் அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளும்
நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தத்தொடங்கிவிட்டன.. கேள்விகளைக் கேட்கிறோம் என்கிற பெயரில்
கேள்விகளைக் கழுவிக்கழுவி ஊற்றுகின்றன. சில தொலைக்காட்சிகள் கேட்க வேண்டியக்கேள்விகளைக்
கேட்காமல் கேள்வி இல்லாத ஒன்றைப் பிடித்துவைத்துகொண்டு கேட்டுக்கொண்டிக்கின்றன. சில
தொலைக்காட்சிகள் அவர்களுக்கு நெருக்கமான அரசியல்
புலிகளைக் கூட வைத்துகொண்டு வலிக்காமல் கேள்விகளைக்
கேட்டு நிகழ்ச்சிகளை கடத்துகின்றன. எத்தனை நேர்காணல் நிகழ்ச்சிகள் இருந்தென்ன....!
திவாகர் நடத்தும் நேர்காணலுக்கு ஈடு அவர் முந்தைய வாரங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகள்தான்!
திவாகர் விட்டெறியும்
கேள்விகளில் விக்கெட் பறிக்கொடுக்காத பிரபலங்கள் யார்....? சீவி கூர்மையாகக் கொடுக்கும்
கேள்வி, எதிர் தரப்பினரைப் பதில் கூற வைக்க முடியாமல் திணறடிக்க வைக்கும் சாதூரியம்,
முக்கல், முணங்களுடன் வார்த்தைகளில் கரைய வைக்கும் திருப்பம்,...என இத்தனையையும் ஒரு
சேர கையாளும் உத்தி, அவரைத் தவிர வேறு யாருக்குக்
கிட்டும்....?
ஒரு கேள்வி. அதற்குள்
இன்னொருகேள்வி. அதைத்துளைத்து மறு,மறுக்கேள்விகள்,..என வெங்காயத்தை உரிப்பதைப்போல அல்லவா
அவர் கேள்விகளை உரிப்பார். கேள்விகளை ஊற்றெடுப்பதில் அவர் மணற்கேணி.
நேர்காணலில் அவர்
உட்கார்ந்திருக்கும் கம்பீரமே தனி அழகுதான். கேள்விகளுக்கிடையில் தாடியைத் தடவிக்கொள்வதும்,
பேட்டி அளிப்பவரைக் குறுகுறுவெனப் பார்ப்பதும், சிரிப்பதும், முகத்தைக் கோபத்துடன்
காட்டுவதும், விழிப்பதும், கண்களை மூடித்திறப்பதும்...என அவர் செய்யும் அத்தனையும்
பாமர மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். காமிக்ஸ் சித்திரம் அவருடைய முகப்பாவணையில்
நெழியும். மக்கள் கேட்க நினைக்கும் அத்தனைக்கேள்விகளையும் கொடுத்தக்கடனை தட்டிக்கேட்பதைப்போல
‘பட்’டெனக் கேட்டுவிடுவார். அவர் கேட்கும் தொணியிலும், தொடுப்பிலும் தொலைக்காட்சி நேயர்களின்
கண்கள் சின்னத்திரையில் ‘ சப்’பென ஒட்டிக்கொள்ளும்.
‘ இம்...அதற்காக....?
, ஓகோ...’
‘ அப்படியா...’
‘ இது சரி....?’
எனக் கேள்விகளின் ஊடே நுழைவார், குடைவார். கடைந்தெடுப்பார். அவரது கேள்வித்தொடுப்பில்
எதிர் தரப்பினர் ரன் அவுட் ஆவார்கள். அல்லது யானை, ராணி நகர்வுகளுக்கிடையில் மாட்டிக்கொள்ளும்
சதுரங்க ராஜாவைப்போல ஒரு வழியுமின்றி முழிப்பார்கள்.
இது திவாகர் பங்கு
பெறும் கடைசி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்தை
நோக்கி இடம் பெயரப்போவதை சின்னத்திரை திரை மறைவுகள் கிசுகிசுப்பதைக் கேட்க முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை விலைக்கொடுத்து வாங்கும் அளவி்ற்கு அவருக்கு விலை பேச
முன் வந்திருக்கின்றன.
நிழல் தொலைக்காட்சியைப்
பொறுத்த வரைக்கும் அவர் பங்கு பெறும் கடைசி
நிகழ்ச்சி இதுதான். இது அவருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தெரிந்த ஒருவழி உண்மை.
திவாகர் பங்கு பெறும் கடைசி நிகழ்ச்சியில் ஒரு பிரபலமான ஒரு நபரை பேட்டி எடுக்க வைத்துவிட
வேணும் என அத்தொலைக்காட்சி நிறுவனம் முனைப்புக்காட்டியது. அதன் மூலம் இத்தொலைக்காட்சியை
வேறொரு அமர்விற்கு கொண்டுப்போய் டிஆர்பி மதிப்பைக் கூட்டிவிட வேண்டும் என தாயம் உருட்டியது.
இன்றைய நேர்காணல்
நிகழ்ச்சியில் திவாகர் சந்திக்க இருக்கும் நபர் சல்மாபானு.
சல்மாபானு , இதுநாள்
வரை எந்தத் தொலைக்காட்சியிலும் தன் முகத்தைக்
காட்டாதவர். வெளி உலகிற்கும், அவரது ரசிகர், ரசிகைகளும் தன்வரலாற்றை விளக்கப்போவது
இதுதான் முதன் முறை. இதற்கும் முன் எத்தனையோ தொலைக்காட்சிகள் அவரது அலுவலகக் கதவைத்
தட்டியும், ஒற்றைக்காலில் நின்று காத்திருந்தும் அவரது சம்மதத்தை எந்த நிர்வாகத்தாலும்
பெற முடியவில்லை. நிழல் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளிக்க முன் வந்தது ‘ உலகத் தொலைக்காட்சி
வரலாற்றில் முதன் முறையாக.....’ என நீட்டி, விளிக்குமளவிற்கு பரபரப்பை ஏற்றிருந்தது.
சல்மாபானு சாதி,மதம்
மறுப்பாளர். சாதி மறுப்புத் திருமணத்தை தன் ஆதரவாளர்களின் துணையோடு நடத்திவைப்பவர்.
கலப்பு மணம் தம்பதிகளுக்காக நீதி மன்றம் முற்றத்து வரைக்கும் சென்று நீதியையும், நிதி
உதவிகளையும் பெற்றுக்கொடுப்பவர்.
சாதி மறுப்புத்
திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவப்படுகொலைக்கு முதல் கண்டன அறிக்கை அவரிடமிருந்துதான்
வரும். படுகொலைகள் நடக்கும் பொழுது வாய் பொத்திய, கண் மூடிய, காது அடைத்த குரங்குகளாகிவிடும்
ஆளும் ,, எதிர்க்கட்சிகளின் செய்கைகளை முச்சந்தி வரைக்கும் கொண்டுச்சென்று முகத்திரையைக்
கிழித்தெடுப்பார். இதையெல்லாம் தாண்டி அவரொரு நல்ல எழுத்தாளர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
போராளி. சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றவர். விருது தொகைகளைக் கலப்பு மணத்
தம்பதிகளுக்காகச் செலவு செய்பவர்......
நமது நிழல் தொலைக்காட்சியில்
சல்மாபானு கொடுக்கும் பிரத்யேகமானப் பேட்டி. இன்று இரவு ஒன்பது மணிக்கு. நேரடி ஒளிப்பரப்பில்.
காணத் தவறாதீர்கள்.....சோப்பு, பற்பசை, பனியன் விளம்பரங்களுக்கிடையிலும் வரி செய்திகளாகவும்
முன்அறிவிப்புகள் ஓடிக்கொண்டிருந்தன.
சல்மாபானு எதையும்
, எப்பொழுதும் எதிர்த்தரப்பினரின் முகம் முறிய தன் எழுத்துகளால் விமர்சனம் செய்துவிடக்கூடியவர்.
சரியானதை சரி என்றும் தவறை தவறென்றும் ‘பொட்’டெனப் போட்டு உடைப்பவர். ஒரு வார இதழில்
வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர்களின் கேள்விகளையே பதிலாக சொல்லி
அசத்தியவர். அவருடைய எழுத்து மட்டுமல்ல அவருடைய மாற்றுக்கோண சிந்தனைகளும், சாதி மறுப்புத்
திருமணங்களுக்கான ஆதரவும், போராட்டமும் பல நேரங்களில் மெய்ச்சிலிர்க்க வைத்திருக்கிறது.
அவர் உதிர்த்த சில வாசகங்கள் சமுதாயத்தையும் தனி நபரையும் நாசி விடைக்க கோபமூட்டிருக்கின்றன. சல்மாபானு தன் குரலைப் பத்திரிக்கைகளில் எழுத்துகளாகவும்,
தொலைக்காட்சிகளில் குரலாகவும் மட்டுமே பதிவு செய்து வந்தார். பத்திரிக்கை புகைப்படக்
கலைஞர்களிடம் அவர் தன் முகத்தைக்காட்டியதில்லை.
சல்மாபானுவின்
நலம் விரும்பிகள் அவரை ஒரு புரியாத புதிராகவே பார்த்து வந்தார்கள். அவருடைய முகத்தை
வெளி உலகிற்கு காட்டாமல் ஆமையைப்போல உள் இழுத்துக்கொள்வதற்கானக் காரணத்தை பலவாறு கயிறு திரித்தார்கள். அவல் தின்றார்கள். அத்தனை
யூக, உத்தேச புரிதல்களுக்கானப் பதில்கள் இந்த நேர்காணலில் கிடைத்துவிடும் என பலரும்
பேசிக்கொள்வதைப் பரவலாகக் கேட்க முடிந்தது..
நிழல் தொலைக்காட்சி
நிறுவனத்தார்கள் படப்பிடிப்பு அரங்கத்தை இதுவரைக்குமில்லாத ஒரு மாறுபட்ட கோணத்தில்
வடிவமைத்திருந்தார்கள். யூ டியூப்களில் எத்தனையோ பேர்கள் பார்க்கப்படவும், , வாட்ஸ்அப்பில்
எத்தனையோ பேரிடம் பகிரப்படவும் இருக்கிற நிகழ்ச்சிக்கான உள்ளரங்கத்தை அதிக சிரத்தை
எடுத்து அலங்கரித்தார்கள். பேட்டி கொடுப்பவர், எடுப்பவர் இருவருக்கும் சுழலும் நாற்காலிகளைக்
கிடத்திருந்தார்கள். சல்மாபானுவின் ரசணையை அறிந்து அவருக்குப்பிடித்தமான நிறத்தில்
தளத்தையும் சுவர்களையும் வடித்தார்கள்.
திவாகர் நேர்காணல்
நிகழ்ச்சிக்குத் தயாரானார். வழக்கம் போல கோட், சூட்., ஷீ அணிந்திருந்தார். . நேர்காணல்
இரவு நேர நிகழ்ச்சி. என்பதால் கண்களைப் பறிக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப ஆடைகளை அணிந்துகொண்டார்.
ஒரு ஆளுயர கண்ணாடி முன் நின்றுகொண்டு அவரை அவர் சரிசெய்துகொண்டார். சிரித்துகொள்வதும்,
கைகளை நேர்த்தியாக அசைப்பதும், கழுத்தில் கட்டிக்கொள்ளும் ‘டை”யை இழுத்துவிட்டுக்கொள்வதுமாக
இருந்தார்.
ஒரு முறைக்கு பல
முறை கேட்கப்போகும் கேள்விகளை மனதில் நிறுத்தி ஓடவிட்டார். கேட்கப்போகிற கேள்விகளையும்,
கேட்கும் தொனிகளையும் மெறுகேற்றினார். மெல்லிய குரலுடைய அவர் வார்த்தைகள் பிசிறு இல்லாமல்
சரியான மீட்டரில் வந்து விழ முன்னோட்டம் பார்த்துகொண்டார்.
திவாகர் எதிர்த்தரப்பிலிருந்து
வரக்கூடிய கேள்விகளையும் பதில்களையும் புத்திசாலித்தனத்துடன் கையாளக்கூடியவர். பிரிட்டிஷ்
ஆங்கிலம் தேர்ந்தவர். தென் இந்திய மொழிகள் அத்தனையையும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி.
பேட்டிக்கொடுக்க வருபவர்களின் விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்து வைத்துகொண்டு அதற்குத்
தகுந்தவாறு பௌலிங் செய்பவர். விக்கெட் எடுப்பவர். வாதத்தை முடிப்பவர்.
இத்தொலைக்காட்சியில்
நான் நிகழ்த்தும் இந்த கடைசி நேர்க்காணல் இதுதான் என்பது அவருக்குள் திண்மமாக உறைந்துபோயிருந்தது.
தன் கேள்விக்கணைகளால் மக்கள் மத்தியில் எதாவது ஒருவகையில் சலனத்தை ஏற்படுத்தி விட வேண்டும்
என்பதில் அவர் வேர்ப்பிடிப்பு கொண்டிருந்தார்.
சல்மாபானு அவருடைய
கடிகாரத்தைப்பார்த்தார். இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே அவர் நிலைய அரங்கிற்கு வந்திருந்தார்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பூச்செண்டு கொடுத்து நிலைய ஊழியர்கள் அவருக்கொரு
வரவேற்பளித்தார்கள். அந்நிகழ்ச்சியைத் தயாரிப்பாளர் சம்பத்குமார் அவரை இன்முகத்துடன்
வரவேற்றார். அவருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
சல்மாபானு அமைதியாக
அவருக்குரிய இருக்கையில் உட்கார்ந்தார். அவரை நோக்கி பலரும் கேள்விக்கணைகளை விட்டெறிவதைப்போலிருந்தது.
அவரைச்சுற்றிலும் கழுகுப்பார்வைகளாகத் தெரிந்தன. நிகழ்ச்சிகளில் கேட்கப்போகும் கேள்விகளை
ஒரு வாரத்திற்கு முன்பே அவருக்கு கொடுத்திருந்தார்கள். அக்கேள்விகளுக்கு அவர் தயாரித்து
வைத்திருந்த பதில்களை ஒரு முறை எடுத்து பார்த்தார். கேள்விகளும் கேள்விகளுக்கு அவர்
தயாரித்து வைத்திருந்த பதில்களையும் பார்க்கையில் அவருக்கு சிரிப்பு வந்தது. உள்ளூரச்
சிரித்துகொண்டார். ஓரிரு கேள்விகளின் பக்கம் கண்கள் செல்கையில் அவருடைய கண்கள் சிவந்தன.
சில கேள்விகள் ஒரிரு வார்த்தைகளிலும், பல கேள்விகள் சுருக்கமான விடைகளாகவும், ஓரிரு
கேள்விகளுக்கு வலியுடன் கூடிய பதிலாகவும் அவர் தயார்ப்படுத்திருந்தார். அத்தனைக்கேள்விகளுக்கும்
தைரியாமானப் பதில்களை அவர் தயாரித்து வைத்திருந்தாலும் அவருக்குள் ஒரு தயக்கம் இருக்கவே
செய்தது.
அவருடைய வாகன ஓட்டியும்
காப்பாளினியுமான லதாவைக்கூப்பிட்டார். லதா அவருடைய அழைப்பை ஏற்று ஓடிவந்தார்.
‘ என் செய்கை சரிதானா.....?’
எனக்கேட்டார்.
‘ இதில் என்னம்மா தயக்கம்...நூறு சதவீதம் சரி. உங்களைப்
பற்றிய பல்வேறு யூக, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவொரு வாய்ப்பு. இந்நிகழ்ச்சியின்
வாயிலாக உங்களைப்பற்றிய நீண்டக்காலப்புதிர்கள் அவிழ்க்கப்பட இருக்கிறது....’ என சொல்லிக்கொண்டே
அவருடையக் கைகளைப்பற்றிக் குலுக்கினார்.
சல்மாபானு, திவாகர்
முன் முகத்தை கறுப்புத்துணியால் மூடிக்கொண்டு ஒரு சௌதி அரேபியா பெண்ணைப்போல உட்கார்ந்திருந்தார்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் சம்பத்குமார் நேரடி ஒளிபரப்பு வேலைகளில் தயாரானார். போக்கஸ்
விளக்குகளை ஒளிரவிட்டார். கட்டை விரலை உயர்த்தி சமிக்கைக் காட்டினார். திவாகர் பக்கம் கேமரா திரும்பியது.
‘ நேயர்களே...இன்றைய
நேரடி ஒளிப்பரப்பில் விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடுபவரும், சாதி மறுப்பு திருமணத்தி்ற்கு
ஆதரவு அளிப்பவருமான சமூகச்சேவகி, எழுத்தாளர் சல்மாபானு அவர்களிடம் நேர்காணல் நடத்த
இருக்கிறோம். அவர்களை நமது நிழல் தொலைக்காட்சி நேயர்களின் சார்பாக வரவேற்கிறோம்......’
சல்மாபானு இன்முகத்துடன்
கேமராவைப்பார்த்து கும்பிட்டார்.
நேர் முகம் தொடங்கியது.
‘சல்மாபானு, உங்கள்
குழந்தைப்பருவத்தைப்பற்றி சொல்லுங்கள்...?’
‘ நான் குழந்தைப்பருவத்தில்
மிகவும் அழகாக இருந்தவள். என்னுடைய அப்பா தோல் வியாபாரம் செய்தவர். ஆகவே நாங்கள் ஒரே
இடத்தில் நிரந்தரமாக வாழ்வதற்கான சூழல் ஏற்படவில்லை. இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தோம்.
அவருடைய இடம் பெயர்தலுக்கு ஏற்ப என்னுடைய பள்ளிச்சூழல் மாறிக்கொண்டே இருந்தது. இதன்மூலம்
எனக்கு நிறைய தோழிகள் கிடைத்தார்கள்.’
‘ நீங்கள் ஒரு
எழுத்தாளர். அதற்காக நிறைய பரிசுகளும், விருதுகளும் வாங்கியிருக்கிறீர்கள். இந்த எழுத்துப்பணி
எப்பொழுது தொடங்கியது...?’
‘ பள்ளியில்’
திவாகர் மீட்டர்
அளவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மில்லி மீட்டர் அளவிலேயே பதில் சொல்லியிருந்தார்.
அவரது குறுகத் தறித்தப்பதில் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு பந்துக்கு நான்கு
ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்த ஏமாற்றத்தைத் தந்தது.
ஓரிரு நொடிகள் நீளும் பதிலுக்காகக் காத்திருந்து அடுத்தக்கேள்விக்குத் தாவினார்.
‘ நீங்கள் எத்தனையோ
சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். உங்களை அதை நோக்கித் தூண்டியது
எது?’
‘ சமுதாயம். மக்கள்.
சில ரகசிய மனிதர்கள் அவ்வளவே. அதற்கு மேல் நான் எதையும் சொல்லவோ, யாரையும் சுட்டிக்காட்டவோ
விரும்பவில்லை.’
‘ நீங்கள் சிடுசிடு
பேர் வழியா....?’
‘ கிடையாது. நான்
இயல்பானவள். எப்பொழுதும் சாந்த மனநிலையில் இருக்கக்கூடியவள்’
‘ உங்கள் படைப்புகளையும்,
உங்களது பேட்டிகளையும் வாசிக்கையில் நீங்கள் ஆண்களிடமிருந்து முரண்பட்டவரைப்போலவும்,
ஆண்களின் மீது பகைமை பாராட்டுவர் போலவும் தெரிகிறதே....?’
‘ நானொரு பெண்ணியவாதி
என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவ்வளவே...’
திவாகர் அவருடைய கடிகாரத்தைப்பார்த்தார். ஒரு மணி
நேர நிகழ்ச்சி கால் மணி நேரத்திற்குள் முடிந்து விடுமோ என நினைக்கையில் அவருக்குள் பயம் தொற்றியது.
‘ அப்படியானால்
உங்களுக்கு ஆண் நண்பர்களே இல்லை. அப்படித்தானே....?’
சல்மாபானு வசைப்பாடுவதைப்போல
பெரிதெனச் சிரித்தார். சுழல் நாற்காலியில் அரை வட்டமடித்தார். ‘ ஏன் இல்லை...! எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.
என் அப்பா என்னுடைய ஆகச்சிறந்த நண்பர். இப்பொழுது அந்த இடத்தில் என் தம்பி’
‘ இவர்களை விடுத்து
பிற நண்பர்களைக் கேட்கிறேன்...?’
சல்மாபானு சில
நிமிடங்கள் அமைதியாக இருந்தார். கேள்வித்தொடுக்கும் திவாகரை ஊடுறுவிப் பார்த்தார்.
‘ ஆம்...எனக்கொரு
ஆண் நண்பன் உண்டு. நான் அவரை காதல் கூட செய்திருக்கிறேன்’
அவரது பதில் தன்
கூட்டை தானே உடைத்துக்கொள்வதைப்போன்றிருந்தது. பெண்கள் தான் பழகிய ஆண் நண்பர்களைப்பற்றியும்,
காதலனைப்பற்றியும், காதலின் தோல்வியைப்பற்றியும் பேசுவது ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள்
நுழைய முயற்சிப்பதைப்போன்றது. எத்தனைப்பெண்கள் இப்படி தன் காதலை பகீரங்கப்படுத்த முன்
வந்திருக்கிறார்கள்....? தன் கேட்கும் கேள்வியால்தான் இது நிகழ்ந்திருக்கிறது. தன்னை
ஒருமுறை மெச்சிக்கொண்ட திவாகர் ‘டை’யை ஒரு முறை இழுத்துவிட்டுகொண்டார்.
திவாகர் அடுத்தடுத்தக்
கேள்விகளுக்குள் போக தயங்கினார். அவருடைய காதலைப்பற்றியும், காதல் வரைந்த கோலங்களைப்பற்றியும்
பல கேள்விகள் இருந்தது.
‘நீங்கள் ஏன் இன்னும்
திருமணம் செய்துகொள்ளவில்லை....?’
‘நீங்கள் உங்கள்
காதலருடன் படுக்கையில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா....?’
‘நீங்கள் காதலித்த
காதலனை நினைக்கையில் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது...?’ இப்படியான கேள்விகள் அவர் முன்
இருப்பதை அவரால் பெருமையாக நினைக்க முடியவில்லை. பெண்களின் அந்தரங்கத்திற்குள் ஆண்கள்
நுழைவது அவனுக்கு அவனே வளை விரித்துக்கொள்வதைப்போன்றது அல்லவா! ஏன்தான் இந்நிகழ்ச்சிக்கு
ஒப்புக்கொண்டோமென இருந்தது கடைசி மாத ஊதியக் காசோலையில் கூடுதலாகக் கிடைக்கப்போகும்
பூச்சியங்களுக்காக இப்படியொரு இந்நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டிருக்கிறேனே....? என்பதை
நினைத்து அவர் மனதிற்குள் புழுங்கினார்.
திவாகர் ஐந்து
வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் பணியாற்றியவர். எதையும் செய்திகாளக பார்க்கும்
நுணுக்கம், செய்தியாக்கும் திறமையால் அப்பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு பெரியதொரு அர்ப்பணிப்பைச்
செய்தவர். ஊதியப்பிரச்சனை, பணி அனுபவம், தினசரியின் வளர்ச்சி இவற்றை கோடிட்டு அப்பத்திரிக்கையிலிருந்து
விலகி இந்தத் தொலைக்காட்சியில் சேர்ந்திருந்தார்.
‘ சல்மாபானு....
உங்களைக் கவர்ந்த அந்த ஆண் நண்பர் யாரென்று சொல்லலாமா....?’
சல்மாபானு திவாகரை
ஒரு கணம் ஏறிட்டுப்பார்த்தார். ஒரு நிமிடம் பதிலற்று நிசப்தமாக இருந்தார்.
‘ ஆம்...சொல்கிறேன்.
அவன் யுவராஜ். அவன்தான் என் நண்பன். அவனைத்தான் நான் காதலித்தேன்’
‘ எத்தனை வருடங்கள்
காதலித்தீர்கள்...?.’
‘ கல்லூரியில்
படித்த ஐந்து ஆண்டுகள்’
‘ உங்கள் காதல்
எப்படி முறிந்தது...?’
‘யுவராஜ்விற்கு
ஒரு தங்கை இருந்தாள். அவள் மாற்றுச் சாதிப்பையனைக் காதலித்தாள். அவளது காதலைத் தெரிந்துகொண்ட
நான் அவர்கள் இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொள்ளவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும்
நான் காரணமாக இருந்தேன். இந்த விடயம் என் யுவராஜ்விற்குத் தெரியவந்தது. அவனது ஜாதி
கௌரவத்தில் கீறல் விழுந்துவிட்டதாக என்னுடன் அவர் சண்டைப்பிடித்தான்....’
‘ அத்துடன் உங்களுடைய
காதல் முறிந்து விட்டதா....?’
‘ இல்லை....அதற்குப்பிறகும்
எங்கள் காதல் நீடித்தது நான் என் படுக்கையில் இடம் கொடுக்கும் வரை’
இருவருக்குமிடையில்
சற்று நேரம் நிசப்தம் நிலவியது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள். அவர்கள்
இருவரையும் கேமரா பார்த்தது. மக்கள் பார்த்தார்கள்.
‘ பிறகு காதல்
எப்படி முறிந்தது...?’
‘ என்னைத் திருமணம்
செய்து கொள் என்றேன்...அவன் என் ஜாதியைக் கேட்டான். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளலாம்
என்றேன். அவன் மறுத்தான். நான் அடம் பிடித்தேன். அவன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை
விட்டான். ஒரு சீசாவை எடுத்தான். திறந்தான். என் முகத்தில் அடித்தான். ஆசிட்...’
கேமரா சல்மாபானு
பக்கம் திரும்பியிருந்தது. அவர் தன் முகத்தை மூடியிருந்த கறுப்புத் துணியை மெல்ல அகற்றினார்.
அவருடைய முகம்
அழகு இழந்திருந்தது. முகம் பார்க்க அகோரமாகவும், விகற்பமாகவும் இருந்தது. கன்னங்களில்
மடிப்பு விழுந்தும், கருத்தும், அவருடைய மூக்கு அறுவைச்சிகிச்சைக்கு உள்ளாகி சிதைந்துப்
போயிருந்தது. அவளுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் தாரையாக வழிந்தது.
‘ அதன்பிறகு அவன்
என்ன ஆனான்......?’
‘அவன் காவல்த்
துறையினரின் தேடப்படும் குற்றவாளியானான்.’
‘ கண்டுப்பிடித்து
கைது செய்தார்களா....?’
‘ இல்லை. பதினைந்து
வருடங்கள் அவர்களின் கண்களில் சிக்காமல் ஒளிந்திருந்தான். அவனது ஜாதி ஆதிக்கத்தால்
கடைசி வரைக்கும் அவனிடம் காவல் துறையினரால்
நெருங்க முடியவில்லை’
‘ அவனை சமீபத்தில்
பார்த்திருக்கிறீர்களா.....?’
‘ ஆம்....அவன்
தற்போது வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவனைப்போல் காட்டிக்கொண்டிருக்கிறான். இன்றைய பிரபலமான நபர்களில் அவனும் ஒருவன்....’
திவாகர் திடுக்கிட்டார். அவருடைய முகம் இறுக்கத்திற்கு
உள்ளானது. உட்கார்ந்திருந்த இருக்கையை விட்டு சட்டென எழுந்தார். அவருடைய உதடுகள் பரிதவித்தன.
‘ நீங்கள் சல்மாபானு
அல்ல. சகுந்தலா...?’ என்றவாறு அவரை குறுகுறுவென வெறித்தார்.
‘ ஆமாம்..! .நான்
சகுந்தலாதான். நீ மட்டும் திவாகரா என்ன....? நீ யுவராஜ். .என் வாழ்க்கையைச் சீரழித்தவன்...
போலீஸ்க்காரர்களால் தேடப்படும் குற்றவாளி நீ....’
கேமரா, நேயர்களை
மொத்தமாக விழுங்கி தன் டிஆர்பி புள்ளியை வர்க்கத்தில் உயர்த்திக்கொண்டிருந்தது.
கடைசி மூன்று பத்திகளில் மிகவும் வித்தியாசமாகக் கொணர்ந்து முடித்தமை பதிவுக்கு முத்தாய்ப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு