‘எங்கள் சாதிச்சங்கத் தலைவரின் மீது கொலைப்பழி சுமத்தி கைது செய்திருக்கும் இன்ஸ்பெக்டரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.....’
தெரு, மூத்திரச்சந்து, குட்டிச்சுவரென எங்கும் ஒட்டிக்கிடந்த சுவரொட்டிகள் காவல்துறைக்குச் சொந்தமான ‘பளே சிவப்பு’ சுவற்றிலும் ஒட்டியிருந்தன. வெளிரிய மஞ்சளில் சிவப்பு எழுத்துகளளான சுவரொட்டிகள் அவை. இருபதுக்கு பத்து அளவிலான பதாகை ஒன்று மூன்று சாலைகள் சந்தித்துகொள்ளும் முச்சந்தியில் விசாலமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அவர்களது சாதி, குலப்பெருமைகள் மயங்கொலி, சந்திப்பிழைகளுடன் அச்சாகியிருந்தன. ஆண்ட வம்சம் ஆன்ட வம்சம் என்றும் குலப்பெருமை குளப்பெருமை எனவும் இருப்பதைக்கண்டு அந்த ஊரில் தமிழ்ச்சாதிக்காகக் கோபப்பட யாரும் இல்லாமல் இருந்தார்கள்.
இவைதவிர எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் கண்களில் படும்படியான பதாகைகள் சாலைகள் , சந்திப்புகள், திருப்பங்களில் வைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் அவர்களது சாதிக்கான அகோர நிறத்துடன் கூடிய கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இத்துடன் நான்கிற்கு மூன்று அளவிலான செவ்வக சுவரொட்டிகள் வேறு.
சுவரொட்டியின் இருபுற விளிம்புகளிலும் சாதித்தலைவர்களின் பிம்பம் இருந்தன. அதன் கீழே காவல் துறையே....என பெரிய எழுத்துகளில் விளித்திருந்தது. சுவரொட்டிகளை ‘ரொட்டி’யாக நினைத்து சிற்றுண்டி தின்னும் காளைகள் அச்சுவரொட்டிகளில் ஒன்றையேனும் கிழித்து மேய்ந்ததாகத் தெரியவில்லை. அச்சுவரொட்டியில் இருந்த அகோரமானப் பற்களைக் காட்டி சீறும் சிங்கங்களைப்பார்த்து அக்காளைகள் மிரண்டுப்போயிருக்க வேணும்.
சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் என்ன சாதாரணப்பட்டவர்களா....?. அவர்கள் ஆண்டப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். மன்னர் குல வேந்தர்கள் என பறைச்சாற்றிக்கொள்பவர்கள். யார், யாரெல்லாம் தென்இந்தியாவை ஆண்டவர்கள் என பட்டியல் தயாரித்து அத்தனைப்பேரும் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் என தன் மார்பில் பச்சைக்குத்திக்கொள்பவர்கள். மக்களாட்சிக்கு ஏங்குகிற மக்கட்களுக்கிடையில் இவர்கள் மன்னராட்சிக்கு சிவப்புக்கம்பளம் விரிப்பவர்கள். இத்தனை ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரத் துறைமார்கள் நம் சாதிக்காரர்களாக இல்லாமல் போயிவிட்டார்களே....என வயிற்றிரைச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்பவர்கள். அவர்கள் முகவரி தமிழ்சாதி அல்ல. ஆண்ட சாதி.
நாங்கள் வீ.......ரப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ’ என்பதற்கான முழக்கம்தான் இந்தச் சிங்கம். பிரபலமான ஓவியர்கள் பிரசித்திப்பெற்ற நாவலுக்காக வரையப்பட்ட மழிக்கப்படாத மீசை ஓவியங்களை பதாகைகளின் பின்புலத்தில் இருக்க வெளியே முகத்தை கடு,கடுவென...வைத்துகொண்டு பதாகைகளின் நான்குபுற விளிம்புகளிலும் அவரவர் பெயருடன் அச்சாகியிருந்தார்கள். பதாகைகளின் நடுவில் மனுசன் நிழலே படக்கூடாது என காட்டில் வாழும் பிடரி மயிர் சிங்கங்களும் அதன் குருளைகளும் முகத்தை ‘ ஆ....’வென அகோரமாக பற்களைக் காட்டிக்கொண்டிருந்தன.
போராட்டம் முளைப்பாரி விட்டிருந்தது. தலையில் சாதித்துண்டை கட்டிக்கொண்டு நாக்கைத் துறத்திக்கொண்டு ஒருவர் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து மற்றவர்கள் பின்னணிக்குரல் கொடுத்துகொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்களின் பலரும் வழக்கம் போல உணர்ச்சி மொழிகளிலேயே பேசிக்கொண்டிருந்தார்கள். அறிவு மொழியில் பேசுபவர்களின் கைக்கு போயிருந்த ‘மைக்’ சட்டென பிடுங்கப்பட்டன.
‘ பனைமரத்தில வௌவாலா...? எங்களுக்கிட்டச் சவாலா...?’
‘ விடுதலை செய்...விடுதலை செய்.....எங்கள் சாதித் தலைவரை விடுதலை செய்...’
‘ ஒழிக...ஒழிக....போலீஸ் அராஜகம் ஒழிக....’
அவர்களது போர்க்குரல் காவல் நிலையத்தை நோக்கியும், காவல் துறையினர்க்கு எதிராகவும் இருந்தது. அவ்வூர் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஒரு பெண் அதிகாரி என்பதால் அவர்களது கொக்கறிப்புகளில் கேலியும் கலந்திருந்தன.
அந்த காவல் நிலையத்தில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் ப்ரியா உட்பட மொத்தம் ஒன்பது பேர் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள். இருவர் சப் - இன்ஸ்பெக்டர் மூன்று பேர் கான்ஸ்டபிள், மூன்று ஏட்டுகள். பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் வேலி. ஆனால் அந்த காவல் நிலையத்தில் எட்டு ஆண் காவலர்களுக்கும் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் பாதுகாப்பு வேலியாக இருந்தார்.
இன்ஸ்பெக்டர் ப்ரியாவை ஒரு சாதிச்சங்கம் தூற்றிப்பேசியதில் ஒன்றிரண்டு காவலர்களுக்கு பிடித்திருந்தது. உச்சந்தலையில் சந்தோசம் பீறிட தொண்டைக்குள் ‘ கக்கே...பெக்கே....’ எனச் சிரித்தவாறு இருந்தார்கள். அவர்களின் சிரிப்பு வெளியே கேட்கவில்லை என்றாலும் அவர்களின் அகம் முகத்தில் தெரிந்தது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பயத்தில் அட்ரீனல் சுரக்க ‘ பக்...பக்.....’ என நின்றுகொண்டிருந்தார்கள்.போராட் டம் கலவரமாக வெடித்துவிடுமோ....அப்படி வெடித்தால் கலவரக்காரர்கள் என ஓரிருவரைச் சுட்டுத்தள்ள அப்பாவிகள் யாரேனும் கிடைப்பார்களா....? தப்பித்தவறி வசதிப்படைத்தவர்களை , சாதி ஆதிக்கம் கொண்டவர்களை சுட்டு விட்டால் கிடைக்கிற பதவி உயர்வு கூட கிடைக்காமல் போய் விடுமே... என்கிற பயம் அவர்களை ஆட்டி வைத்தது. அக்காவல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்களில் இரண்டு பேர் போராடிக்கொண்டிருக்கும் சாதிச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் இருப்பு காவல் நிலையத்திற்குள்ளும் செவிகள் போராட்டக்களத்திலும் இருந்தது. ‘அவர் ஆடாவிட்டாலும் அவர் சார்ந்த சாதி அவருக்குள் ஆடிக்கொண்டிருந்தது’.
காவல் நிலையத்திற்கு வெளியே கூப்பிடும் தூரத்தில் ஒரு பொதுத்திடலில் திடீர் பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் சாதிச்சங்கத்தார்கள் வீராப்புடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் தலையில், கையில், கயிற்றில், வேட்டியில் பினாயில் ஊற்றி கழுவினாலும் போகாத சாதி அடையாளங்கள் அப்பியிருந்தன. காலை ஒன்பது மணிக்கெல்லாம் கூடத்தொடங்கியக்கூட்டம் ஒரு மணி வாக்கில் உச்சநிலையை எட்டியிருந்தது.
அப்பொதுவெளியில் ஈழ உக்கிரப்போரின் போதுகூட இப்படியொரு கூட்டம் கூடியதில்லை. மதுவை ஒழிக்க, மொழியைக்காக்க, அரிசி விலை, பருப்பு விலை, தக்காளி விலை, பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு எதிராக,...இவ்வளவு பேர் கூடி தன் எதிர்ப்புகளைக் காட்டியதில்லை.
‘ விடுதலை செய்...விடுதலை செய்.... எங்கள் தலைவரை விடுதலை செய்....’
‘ அடக்காதே....அடக்காதே....ஆண்ட வம்சத்தை அடக்காதே.....’
‘ நினைக்காதே...நினைக்காதே....ஆளு ம் வம்சத்தை அடக்க நினைக்காதே...’.
‘மைக்’கை இறுகப்பிடித்துக்கொண்டு போர்க்குரல், கர்ஜனை, வீர வசனங்களுடன் இளைஞர்கள் முழங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் தலையில் சாதி கறைத்துண்டு கட்டப்பட்டிருந்தன.
இதே இடத்தில் நேற்றைக்கு முந்தையத்தினம் இது தொடர்பான வேறொரு ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. இவ்வளவு கூட்டமில்லை. இத்தகைய கரைச்சல் இல்லை. வன்முறைத் தூண்டும் பேச்சு இல்லை. அத்தனைப்பேருடைய மூச்சிலும் கண்ணீர் சொரிந்திருந்தது. பேச்சில் விம்மல், துக்கம், ஏக்கம், நீதிக்கெஞ்சல் தழும்பியிருந்தது.
‘ஏ....புள்ள என்ன தப்பு செஞ்சான். உன் சாதிப்பொண்ண காதலிச்ச ஒன்னத்தவிர.....’
‘அடப்பாவிகளா.... ஓம் பொண்ண என் புள்ள பத்திரமாத் திருப்பிக்கொடுத்திட்டான்....ஏ புள்ளிய உங்களால திருப்பித்திர முடியுமா..... ?’
‘ ஏம்புள்ள உன் பொண்ணக் காதலிச்சானு வெட்டிக் கொண்ணுட்டீங்க. எனக்கு நீதி வேணும்...நியாயம் வேணும்.... அதுக்கு காரணமானவங்களைக் கைது செய்யணும்....’
தலையை விரித்துக்கொண்டு ‘ மடேர்....மடேர்.....’ என தலையில் அடித்துகொண்டு அழுததை இன்னும் கொஞ்ச நேரம் பார்த்தால் பார்க்கிற கண்கள் அவிழ்ந்துப் போய்விடும்.
இருக்கிறவனுக்காக போராடுகிற போராட்டமும், இல்லாதவனுக்காக போராடுகிற போராட்டமும் ஒன்றாகி விடுமா என்ன....?. முந்தைய நாள் போராட்டம் நீதிப்பிச்சைக்கேட்டு. இந்தப் போராட்டம் சாதிப்பிச்சைக்கேட்டு.
இரண்டு போராட்டங்களும் அந்த ஊரின் தட்ப வெப்பம், காலநிலையை,... அசாதாரண நிலைக்கு மாற்றியிருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தரும் அபிமானமாக அந்த காவல் நிலையம் இருந்தது. காவல் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அசாதாரணச் சூழ்நிலை நிலவியது. காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கி மிடுக்காக நடந்து நிலையத்திற்குள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரியா. எனது காலடிகள் எனது பெருமையென காலடித்தடம் அவர் பின்னே ஓடிக்கொண்டிருந்தது. போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்கும், தொடுப்பும் அவரது நடையில் இருந்தது.
கான்ஸ்டபிள், ஏட்டுகள் மூவரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ‘சலியூட்’ அடித்து நிமிர்ந்தார்கள். நெஞ்சுக்கு கீழே வெளியே தள்ளிப்போயிருந்த வயிற்றுப்பொதியை ‘சடக்’கென ஒரு இழு இழுத்து வெளியே விட்டார்கள்.
இன்ஸ்பெக்டர் ப்ரியா மரியாதையை ஏற்றுகொண்டு நடந்தவராக இருந்தார். நேற்றைக்கு வரைக்கும் அவரை ஒருவிதமான சவால்கள் சூழ்ந்திருந்தன. அது அவருக்குள் பதற்றத்தைக் கொடுத்தன. ஒரு கல்லூரி வாலிபவனை பட்டப்பகலில் வெட்டிக்கொன்றவன் யாரெனக் கண்டுப்பிடித்தாக வேண்டிய அவசரக்கதியில் அவர் இருந்தார். தலைக்கு மேல் தொங்கிய கத்தியைப்போல அந்தச்சவாலை அவர் எதிர்நோக்கியிருந்தார். தன் மகனைப் பறிக்கொடுத்தவள் வாயிலும்,வயிற்றிலும் அடித்துகொண்டு கண்ணீர் கம்பலையுடன் ஒரு புகார் கொடுத்தவுடன் கொலையாளியைத் தேடும் முனைப்பில் அவர் இறங்கியிருந்தார். கொலையாளி பற்றியத் தேடுதல், அவன் விட்டுச்சென்ற தடயம், காலடி, சமிஞ்கை,...என எத்தனையோ சவால்கள் அவர் முன் இருந்தன. யாராலும் சந்தேகம் கொள்ள மாட்டாத ஒரு நபரை அவர் அடையாளம் கண்டிருந்தார். அவனை நெருங்குவதற்குள் அவர் எத்தனையோ ஓட்டுவங்கி அரசியல் தடையைத் தாண்டியிருந்தார்.
இன்றையத்தினம் அவருக்கு வேறொரு சவால் எதிர்நோக்கியிருந்தது. கொலையாளி இவன்தான் என உறுதி செய்தாக வேண்டிய சட்டப்பிடியில் அவர் இருந்தார்.
அவன் முழிக்கும் முழி, அவனது முறைப்பு, விரைப்பு, பின்புலம்,.....என அத்தனையையும் வைத்து அக்கொலையை செய்தது அவன்தான் என உறுதிப்படுத்த வேணும். கொலை செய்யப்பட்டவரின் கையில் இருந்த ஒரு பிடி தலை மயிர் ஒன்று போதும். கொலையாளி இவன்தான் என ஓங்கி ஓர் அறை அறைந்துச்சொல்ல. கொலைச்செய்தவனை பிடிப்பதா முக்கியம்.... அவனது வாக்குமூலத்தை கறப்பது அல்லவா முக்கியம்.....
இன்ஸ்பெக்டர் ப்ரியாவைச்சுற்றி சக காவலர்கள் சீருடையில் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பதற்றம் தொற்றியிருந்தது.
‘ கைதி எங்கே....?’
‘ லாக்கப்பில் இருக்கார் மேம்’
‘ இருக்கானா....இருக்காரா.....?’
‘ இருக்கா...’ என்றவாறு அவர்களது உதடுகள் முணுமுணுத்தன.
இன்ஸ்பெக்டருக்கு நாசி விடைக்க கோபம் வந்தது. ‘அடச்சீ......கொலையே செய்தாலும் அவனுக்கு ‘அவர்’. என்ன கருமாந்திரம் பிடித்த துறைடா இது....எச்சிலைக் காறித் துப்பினார்.
‘ ஊருக்குள்ள வாத்தியார் போனால் மக்கள் எப்படி பேசிக்கிறாங்கத் தெரியுமா.... வாத்தியார் வருகிறார். அதுவே நாமப்போனால்..... போலீஸ்க்காரன் வருகிறான்... ஏன் இபப்டி...? இப்ப நீங்க ஒரு அக்யூஸ்ட்க்கு ‘ ர்’ போட்டீங்களே... அதனாலதான்....’
அவரைச்சூழ்ந்திருந்த காவலர்கள் விறைப்பாக நின்றுகொண்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தவண்ணமிருந்தார்கள்.
‘ தமிழ்ல இலக்கியம் படிச்சிருக்கீங்களா.....அவர் அவனைப்பாடினார்...அவர் என்பது புலவர். அவன் என்பது மன்னன். ஆனால் இங்கே.... அவர் என்பது குற்றவாளி. அவள் என்பது நான். வெட்கமாக இருக்கு.
நான் இந்த ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டரா ஜாயின்ட் பண்ணுனப்ப இந்த ஊர்க்காரங்க என்னை எப்படி விசாரிச்சிருக்காங்கத் தெரியுமா....?. புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் என்னச் சாதிப்பொண்ணு...?. இந்த வேலையில் நான் சேர்வதற்கு முன்னாடி எனக்கு என்னவெல்லாமோ கனவு இருந்தது. இப்ப என்னால நினைச்ச எதையும் சாதிக்க முடியல.....இப்ப....ஏந்தான் இந்த வேலைக்கு வந்தோமென இருக்கு.....’
அவருடைய மேசையில் அன்றைய தின தினசரிகள் இருந்தன. விரித்து மாவட்டச் செய்திகளில் பார்வையை ஓடவிட்டார். கொலையாளி கைது பற்றிய ஒரு செய்தி வந்திருக்கிறதா...எனத் தேடினார். ஒரு தினசரியிலும் வந்திருக்கவில்லை. அவரது முகம் சட்டென இறுக்கத்திற்கு உள்ளானது. தலையில் இருந்த தொப்பியை எடுத்து மேசையின் மீது வைத்தார். கோப்புகளைப் பார்த்தார்.
ஒரு ஏட்டு தலையில் கவிழ்த்திருந்த தொப்பியை சரிசெய்துகொண்டு ஒரு அடி எடுத்து வைத்து முன்னால் வந்தார். ‘ மேம்.... ’
‘ ம்...?’
‘ லோக்கல் எம்.எல்.ஏ பேசினார்....உங்க மொபைல் சுவிட்ஸ் ஆப்பில் இருந்ததாம் ....’
கோப்பிலிருந்து பார்வையை எடுத்த ப்ரியா ‘ என்னவாம்....?’ எனக்கேட்டார்.
‘ எப்.ஐ.ஆர்....போடாம பார்த்துக்கிறச் சொன்னார்...’
அவருடைய உதடுகள் விரிந்து சுருங்கின. ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டார்.
‘ தேவைப்பட்டால் உங்களையும் எப்.ஐ.ஆர்ல சேர்ப்போமெனச் சொன்னீங்களா....?’
‘ மேம்.....?’
‘ சொல்லிருந்திருக்கணும்....!’
அடுத்து ஒரு ஏட்டு காலடி முன்னே எடுத்து வைத்து ஒரு சல்யூட் வைத்துவிட்டு சொன்னார் ‘ சேர்மன் பேசினார் மேம்....’
‘ என்னவாம்....?’
‘ எல்லா வசதியும் செஞ்சிக்கொடுக்கச்சொன்னார்....’
‘ எங்களுக்கு ஒரு வசதியும் வேண்டியதில்லைன்னு சொன்னீங்களா....?’
‘ மேம்...?’
‘ சொல்லிருந்திருக்கணும்....!’
அவரது முகம் விகாரமெடுத்தது. அவரது பார்வைக்கு நேராக நேதாஜியின் புகைப்படம் இருந்தது. அவரது மிடுக்கையும், நிமிர்ந்த நெற்றியையும் உள்ளூர ரசித்தார். அவருக்குள் இளரத்தம் பாய்ந்தது. தொப்பியை மிடுக்காக சரிசெய்து கொண்டு எழுந்தார். இரண்டு மிடறுகள் தண்ணீர் பருகினார். கைக்குட்டையால் வாயைத் துடைத்துகொண்டார்.
‘ எனக்கு நேற்றையிலிருந்து ஏகப்பட்ட டார்ச்சர்....கைதியை விடுவிக்கச்சொல்லியும், எப்.ஐ.ஆர் போட வேண்டானு சொல்லியும். ஒரு கொலையாளிக்கு நான் முதல் மரியாதைக்கொடுக்கணுமாம்..... ஏன்னு கேட்டால் சாதிக் கௌரவமாம்.. ஆண்டப்பரம்பரையாம்.
என்னை எல்லோரையும் போல பணத்துக்கும் மிரட்டலுக்கும் அடி பணிந்திடுவேனென நினைக்கிறான்கள். நான் அப்படியானவள் அல்ல. நான் அந்த கைதியை விடப்போறதில்லை. அந்தக் கொலையைச் செய்தவன் இவன்தான்.. இவனை நான் என்னச்செய்றேன் பார்...இவனை முட்டிக்கு முட்டி தட்டி உண்மையைக் கறந்து கோர்ட்ல ஒப்படைச்சு, அக்கச்சாட்சி ஆதாரங்களோடு அவனைச் சிறைக்குள் தள்ளி மகனை இழந்து நிற்கும் அந்தத் தாயின் கண்ணீரை நான் துடைக்கவில்லை என்றால் நான்......’ என்றவாறு அவர் லத்தியைச்சுழற்றிக்கொண்டு லாக்கப்பிற்குள் நுழைந்தார்.
லாக்கப்பிற்குள் அவன் கூனிக்குறுகி தலைக்குனிந்து உட்கார்ந்திருந்தான். லத்தியை அவனது தாவங்கொட்டைக்கு கொடுத்து நிமிர்த்தி முகத்தைப்பார்த்தார்.
நேற்றைக்கும் முந்தைய தினம் கைது செய்யப்பட்டவனல்ல. இவன் வேறொருவனாக இருந்தான்.
அருமை... கொஞ்சம் அலைன்மென்ட் மாத்துங்க அய்யா
பதிலளிநீக்குதமிழக நிர்வாகம் அறிவான ,தன்னலமற்ற,நாட்டுப் பற்றுள்ள அரசியல் வாதிகளிடமிருந்து கட்டப் பஞ்சாயத்து தாதாக்கள் கைக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.உண்மையானவர்கள் அரசாங்க வேலையில் நீண்டநாள் தாக்குப் பிடிக்கமுடியாது என்பதற்கு மற்றுமொறு உதாரணம் உங்கள் கதை.
பதிலளிநீக்குஇதற்கு முடிவுதான் என்ன?
மக்களை அறியாமையிலேயே வைத்திருப்பதுதான் இன்றைய அரசியல்.
கதை என முத்திரை உள்ளதால் கதை எனவே எடுத்துக் கொள்வோம், பழுதில்லை. ஆனால் இந்தக் கதை இன்றைய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக காவல் துறையின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது; ஆனால் அது அவர்கள் சுயமாகச் செயல்படும் வரைதான். இவர்களுக்கும் மேலாக நினைத்துக் கொண்டு தங்கள் எல்லை எதுவென புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்து கொண்டும் எல்லை தாண்டியோ தர்ம நியாயங்களைக் குழி தோண்டிப் புதைக்க இவர்கள் காவல் துறையை நிர்ப்பந்திக்கும் போதுதான் மனிதம் மறைந்து போகிறது. கற்பனையே ஆனாலும் சிந்திக்கத் தூண்டும் அரிய வகை கற்பனை.
பதிலளிநீக்குநிசத்தின் நிழல். சாதிய அரசியல் தலையீடு தலைவிரித்தாடும் வரை இதுபோன்ற தகிடுதத்தங்கள் தவிர்க்க முடியாதவையே. அருமையான நடை. ஆழமான கருத்து. வாழ்த்துகள் சுரா.
பதிலளிநீக்குநல்ல திருப்பம் இறுதியில்
பதிலளிநீக்கு