‘ தலித்’ என்னொரு தலைப்பில் ஒருவர் சிறுகதை எழுதி ‘இதுதான் தமிழ்நாடு ’ என்றார். அக்கதையின் தலைப்பை ‘ பீகாரி’ என மாற்றி ‘இதுதான் இந்தியா’ என்றேன்.
மநுதர்மத்தின்
படி ஊருக்கொரு சேரி தேவை. இந்தியாவின் சேரி பீகார். பீகார் மீதான இந்தியப் பார்வை இது.
இந்தியாவில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் தோற்றுவாய் பீகார்தான். இந்தியாவில் அதிகமான சாதிகளையும், சாதிகளுக்குரிய பிசுபிசுப்புகளையும் கொண்ட மாநிலம் அது.
‘ மதம் பெரிதா....சாதி பெரிதா....?’ - சந்தேகமே
வேண்டாம். மதம்தான் பெரியது. ஆம்! அது நேற்றைய வரைக்கும். இன்றைக்கு சாதிதான் பெரியது.
மதத்தை அடித்தளமாகக் கொண்ட ஆளும் பிஜேபி கட்சியை சாதியை அடித்தளமாகக் கொண்ட லாலு என்கிறப்பிம்பம் வீழ்த்திருக்கிறது. போரில் தலைமையை விடவும் தளபதி முக்கியம். பீகார் சட்டசபைத் தேர்தலில் தலைமை நிதிஷ். தளபதி லாலு!
நேர்நில்.
இப்பொழுது நிதிஷ்குமாரும்,
லாலு பிரசாத் யாதவும் ஒருசேர நிற்பதாக வைத்துகொள்ளுங்கள். இருவரின் உயரமும் அளக்கப்படுகிறது. நிதிஷ்குமாரை விடவும் லாலு பிரசாத் ஓர் அங்குலம் உயரமானவர். அடுத்து இருவரும் கைக்குலுக்கிக்கொண்டு ஆரத்தழுவிக்கொள்கிறார்கள்.லாலுவை விடவும் நிதிஷ்குமாருடைய கரங்கள் இரண்டொரு அங்குலம் நீளமானவை. கணிதத்தில் உயரத்தை விடவும் நீளம் முக்கியம். அரசியலில் மூளையை விடவும் இதயம் முக்கியம். பீகார் சட்டசபைத் தேர்தல் மற்ற மாநிலங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் அரிச்சுவடி இது!
தேர்தலில் தொகுதிகளின் இடங்களைப் பங்கீடு செய்தவர் நிதிஷ்குமார். அந்த நேரத்தில் மாநில முதலமைச்சராக
இருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 47 இடங்கள். தனக்கும் உனக்கும் என தலா 101 இடங்கள் . அப்படியானால் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் இருக்கட்சிகளும் சம பலத்துடன் கூடிய கட்சிகள் அப்படித்தானே....? ஆனால் இல்லை. அப்படிதான் என நம்ப வைத்ததிலும், ஏற்றுக்கொள்ள வைத்ததிலும் நிதிஷ்குமாரின் நீண்ட கை சூத்திரம் வெற்றிப்பெற்றிருக்கிறது.
பீகாரிகள் ‘கை’ களின் கையசைப்பிற்கு தலையாட்டும் மாநிலமாகத்தான் இந்திராகாந்தி காலம் வரைக்கும் இருந்தது. இந்த தலையாட்டி பொம்மை அரசியலுக்கு முற்றுப்புள்ளியையும், ஆச்சரியக்குறியையும் ஒரு சேர குட்டு வைத்தவர் ‘ ஜெயப்பிரகாஷ் நாராயணன்’. 1975 ஆம் ஆண்டு வாக்கில் நான்கு பெரியக்கட்சிகளான ஷ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம்,சோசலிஸ்டு, லோக்தளம் ஆகிய கட்சிகளை இணைத்து ‘ ஜனதா கட்சி’ என்கிற அமைப்பொன்றை உருவாக்க அதிக சிரத்தை எடுத்திருந்தார் அவர். ஆனால் அரசியலின்
இரு துருவங்களான லாலு- நிதிஷ் இணைவதிலும் மற்றொரு இருவேறு துருவங்களான லாலு - ராகுலை ஓர் அணியில் கொண்டு வருவதிலும் ஜெயப்பிரகாஷ் நாராயணனை விடவும் கைத்தேர்ந்தவறாக இருந்திருக்கிறார் நிதிஷ். இதன் அடிப்படையில்தான் மகாக்கூட்டணி அமைக்கப்பட்டது. அது வெற்றியும் பெற்றிருக்கிறது. இவ்வெற்றி யாருக்கானது....? என்பதுதான் இன்றைய மகாக்கேள்வி.
இந்திய அரசியலின் துருவ நட்சத்திரம் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அவரது சீடராக அரசியல் களத்தில் வலம்வந்தவர் லாலுபிரசாத். அப்போது அவர் யாதவ் அல்ல. வெறும் ‘பிரசாத்’தான். ‘யாதவ்’ பிற்பாடு சாதி ஓட்டு வங்கி அரசியலுக்காக அவருக்கு அவரே வைத்துகொண்ட வால். அன்றைய அரசியல் சதுரங்கத்தில் இந்திரா தேசியக்காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பதம் ஜனதா கட்சி. அக்கட்சி தேசிய அளவில் கட்டமைக்கப்பட்ட இடம் பீகார். இந்திராகாந்தியின் அவசர நிலை பிரகடனத்திற்கு சமபலத்தில் ஈடு கொடுத்தக் கட்சி அது. அக்கட்சிதான் தகவமைப்பால் நாக்கில் திரிசூலத்துடன் பாரதீய ஜனதா என்கிற பெயரில் இந்தியாவின் மக்களவையை மிருக பலத்துடன் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. மக்களவையை மட்டும் ஆளுவது முழு
ஆட்சியல்ல. மக்களவையில் இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி மாநிலங்களவையிலும் ஆங்கே
பொசியணும். டெல்லி ‘கை’க்கும் கொடுக்கவில்லை, தனக்கும் கொடுக்கவில்லை. ஒரே வழி பீகார்.
நிதிஷ் 220 , லாலு பிரசாத் 242 பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுகளின் சாராம்சத்தை பிரதமர்
நரேந்திர மோடி வெறும் 30 கூட்டங்களில் ஜெயபேரிகை
கொட்டடா...கொட்டடா...கொட் எனக் கொட்டினார். பொதுவாக நரேந்திர மோடி அவர்கள் தகவல் தொழிற்நுட்பத்தை
முறையாகக் கையாள்பவர். இத்தேர்தலில் அறிவியல் நுணுக்கத்தையும் பயன்படுத்தினார். மரபுவழி,
ஜீன், குரோமோசோம்,.... இப்படியாக. தமிழக அரசியல்வாதிகளைப்போல பீகார்வாதிகள் முதுகு
வளைய கும்பிடுவதில்லை. பெரிதென கும்பிட்டு ‘பொத்’தென் விழுபவர்கள் அல்ல அவர்கள். நாக்கை
வளைத்துப் பேசுவதோடு சரி.
ஒட்டுமொத்த இந்தியாவில் ஜனதாக்கட்சி என்பது பாரதீய ஜனதா. ஆனால் பீகாரில் அது ஐக்கிய ஜனதாத்தளம், ராஷ்டிரிய ஜனதாத்தளம், லோக் ஜனதா தளம் , பாரதீய ஜனதா என பிரிகைநிலை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகள் ஒன்றிலிருந்து மற்றொன்று என பிரிகை அடைவதைப்போல பீகாரில் ஜனதாக்கட்சி!
ஐக்கிய ஜனதா தளமும், பாரதீய ஜனதாவும் மதவாத அரசியலின் கட்டமைப்பைக்கொண்டது. ஐஜத மிதமானப்போக்கு. பாஜக தீவிரப்போக்கு ! ராஷ்டிரிய ஜனதா தளமும் லோக் ஜனதாத்தளமும் சாதிப்பிடிப்புகளைக் கொண்ட கட்சிகள். லோக் ஜனதாத்தளம் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக உருவெடுத்தக் கட்சி. இக்கட்சியை நிறுவிய ராம்விலாஸ் பாஸ்வான் ஒரு நாடாளுமன்றத்தேர்தலில் இந்தியாவில் மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கின்னஸ் சாதனை படைத்தவர். ஆனால் மறுதேர்தலில் அந்தச்சாதனையை முறியடிக்கும் வகையில் படுமோசமானத் தோல்வியைத் தழுவியவர். அவரது அரசியல் ஆடுகளம் லாலு பிரசாத் யாதவையும் அவரது கட்சியையும் எதிர்க்கொள்ளுதலே. இன்று அவர் பாரதீய ஜனதாக்கட்சி கூட்டணியில் ஒரு முக்கிய அமைச்சர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்கு இடையூறாகவும் சாதியை, மநுதர்மத்தை கட்டமைக்கும் பாரதீய ஜனதா கட்சியில் அவர் ஐக்கியமாகியிருப்பது ஒரு அரசியல் முரண். ஆகையால்தான் அக்கட்சி வெறும் இரண்டு இடங்களை மட்டும் பெற முடிந்திருக்கிறது. அவரது தவறான இடப்பெயர்வால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் பாஸ்வானை விடவும் லாலு வெற்றிக்கு கைக்கூடியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய ‘ ஜனதாக்கட்சி’ வழியில் பீகாரின் முதலமைச்சர் ஆனவர் லாலு. அவரது முன்னேற்றத்திற்கு பக்கபலமாக நின்றவர் நிதிஷ்குமார். லாலு துணுக்குப்பேச்சுக்காரர். பாமரத்தோற்றமுடையவர். நிதிஷ் அறிவு ஜீவிகளுடன் வலம் வந்தவர். தேசிய அரசியலில் தேர்ந்தவர்.
இருவரும் ஜெயப்பிரகாஷின் சீடர்கள் என்றாலும் வயதில், அனுபவத்தில் மூத்தவர் லாலு.
1990 ஆம் ஆண்டு வி.பி. சிங் ஆதரவில் ஜனதா தளம் ஆட்சியைப்பிடித்தது. ரகுநாத்ஜாவதான் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. கடைசி திருப்பத்தில் லாலு பிரசாத் முதலமைச்சர் பதவியை ஏற்றார். அதற்கு பக்கபலமாக நின்றவர் நிதிஷ்குமார்.
இன்று நிதிஷ்குமார் முதலமைச்சர் பொறுப்பேற்க லாலு பக்கபலமாக நிற்கிறார்.
இன்றும் ஊழலைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் பீகார் மக்களின் தலைவர் லாலுதான். பசுவும், மாட்டிறைச்சியும்தான் இந்தத் தேர்தலின் பிரதான மையம். பசு மாட்டிறைச்சி எதிராகக் குரல் கொடுத்தவர்களில் எத்தனைப்பேர் பசு வளர்க்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் லாலு அவரது வீட்டில் பசு மந்தை வைத்திருப்பவர். பசுவை உண்மையாக நேசிப்பவர். அவர் ரயில்வே துறை மந்திரியாக
இருந்தபொழுது பசுவின் வாலை உருவி வணங்காமல் அவர் நாடாளுமன்றத்திற்குள் சென்றதில்லை.
இத்தேர்தலில் பசு , மாட்டிறைச்சி பற்றிய கொக்கறிப்புகளுக்கு பதில்
சொல்ல வேண்டிய இடத்தில் ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ் இருந்தும் எதிர்த்தரப்பு சீண்டல்களுக்கு
கோமியம் ( தீர்த்தம்) தெளித்தவர் லாலுதான். இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பசுவை விடவும் சிறுபான்மை , தாழ்த்தப்பட்ட மக்களை அதிகம் நேசிப்பவராக லாலு கவனிக்கப்பட்டார். பசு மாட்டிறைச்சி எதிர்க்குரல்களை பக்குவமாகக் கையாண்டார். பாஸ்வான் காட்டிருக்க வேண்டிய எதிர்ப்புக்குரலை லாலு குரலில் கேட்க முடிந்தது. மனிதனை வெறுப்பதும், கடவுளை அதன் அடையாளத்தை ( பசு) வணங்குவதுமே இந்து மதம் என்பதை அவரது சாதி வரம்பிற்குள் நின்றுகொண்டு எதிர்தரப்பு வாதங்களை
பௌண்டரிக்கு திருப்பியதில் அவர் வெகுவாக வெற்றிக்கண்டிருக்கிறார். சென்சுரி எடுக்க
வாய்ப்பிருந்தும் 81 இடங்களைப் பிடித்திருக்கிறார்.
தேசிய அரசியலை வசீகரிப்பதில் லாலுவை விடவும் நிதிஷ் தேர்ந்தவர். நிதிஷ் வாஜ்பாய் ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர். அவரது உயரத்தை சமப்படுத்தும் வகையில் லாலு அதேப்பொறுப்பை மன்மோகன் சிங் - I ஆட்சிக்காலத்தில் ஏற்று நிதிஷ் சாதனையை சமப்படுத்திருக்கிறார்.
இருவரும் பீகார் மாநிலத்தின் இரு வேறு கால முதலமைச்சர்கள். இருப்பினும் நிதிஷை விடவும் லாலுதான் பீகார் மக்களுக்கான நம்பிக்கை வித்து. காரணம் இருக்கிறது.
லாலு பிரசாத் கட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாரதீய ஜனதாக்கட்சி வளர்த்தெடுத்த தத்துப்பிள்ளை
நிதிஷ். பாஜக விரிக்கும்
பந்திப்பாயில் என்றைக்கும் முதல் இடம் நிதிஷ்குமாருக்குத்தான். மதவாத பார்வையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம் முயன்றிருக்கிறது. ஆனாலும் அக்கட்சி
ஒருபோதும் பாஜகட்சியிலிருந்து விலகி நின்றதில்லை. இவ்விரு கட்சிகளுக்கிடையேயான அணுக்கரு பிளவு என்பது நரேந்திர மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு பிறகு வந்ததே! அப்பிளவு பொக்ரான் அணுகுண்டு அளவிற்கு
வெடித்ததிற்கு காரணம் நரேந்திர மோடியேதான்! இன்றும் நிதிஷ் பாஜக கட்சிக்கு எதிரானவர் அல்ல. அவர் ரயில்வே அமைச்சராக வாஜ்பாய் காலத்தில் இருந்த பொழுது அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர் என்ற வகையில் அவர் மோடியிடம் முரண்பட்டிருக்கிறார் அவ்வளவே!
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ,... போன்ற மாநில மக்கள் முப்பது ஆண்டுகளாக ஒரே மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கொரு முறை ஆட்சி மாற்றத்தால் தங்களை ஒரு முறை துடைத்துக்கொள்வது.
அந்தப்பட்டியலில் பீகாரும் இணைந்திருக்கிறது. அப்படிப்பார்க்கையில் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இத்தேர்தலில் தோற்றிருக்க வேண்டியக்கட்சி. ஆனால் வெற்றிப்பெற்றிருக்கிறது. காரணம் லாலுவின் பிம்பம்.
பாஜக, ஐஜத,ராஷ்டிரிய ஜனதாத்தளம் , காங்கிரஸ் ஆகியக்கட்சிகள் தனித்து நின்றிருந்தால் ஆட்சி அமைக்குமளவிற்கு ஏறக்குறைய இடங்களை வென்றிருக்கும் கட்சியாக லாலுவின் கட்சி உருவெடுத்திருக்கும். இத்தேர்தலின் பிரதான நோக்கம் ஊழலை களைவது அல்ல. மதவாதத்தையும், அதன் ஆணி வேரையும் அறுப்பது ஒன்றே !
நிதிஷ்குமார் இந்துத்துவாவிடம் கைக்கோர்த்தவர் . ஆட்சியில், பொறுப்பில் தாமரையின் மீது அமர்ந்து
வீணை மீட்டவர். ஆனால் லாலு அப்படிப்பட்டவர்
அன்று. அவர் எந்தச்சூழ்நிலையிலும் பாஜக மற்றும் அதன் கொள்கையுடன் நெருங்காதவர். அத்வானியின் ரத யாத்திரை பயணத்தை
தடுத்து நிறுத்திய ஒரே இந்திய அரசியல்வாதி லாலுதான்! லாலுவின் அத்தகைய செய்கைக்கு எதிர்ப்பு
தெரிவித்தவர் நிதிஷ். தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் இல்லையா! இருப்பினும் அதைத் தொடர்ந்து
வந்தத் தேர்தலில் லாலு பெரிய வீழ்ச்சியைச்
சந்தித்திருந்தார். காரணம் ஊழல் , குடும்ப ஆதிக்கம். இன்று அக்கட்சி மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பெரிதென இல்லை. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளிடமும் முரண்பட்டிருக்கிறார்.
ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் எதிரான வாக்கை மற்றொரு மாநிலக்கட்சியால்தான் அறுவடைச்செய்ய முடியும். நிதிஷ் ஊழலற்ற ஆட்சியை கொடுத்திருந்தாலும் நிறைவேற்றப்படாத, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நிறைய மிச்சம் வைத்திருக்கிறார். அவரது வாக்குறுதிகளில் ஒன்றான
கழிப்பறையற்ற பள்ளிக்கூடங்களை அவரால் உருவாக்க முடியவில்லை. இப்படியாக.....அவ்வகையில் நிதிஷ் மீதும் கொஞ்சம் அதிருப்தி இருக்கத்தான் செய்தது. ஒருவேளை அனைத்துக்கட்சிகளும் அவரவர் சொந்தப்பலத்தில் நின்றிருந்தால் நிதிஷ் மீதான அதிருப்தி வாக்குகள் லாலுவிற்கே கிடைத்திருக்கும். போதாக்குறைக்கு மத்திய அரசு கடைப்பிடிக்கும் இந்துவா கொள்கை மீதான அதிருப்தி வாக்குகள் வேறு. பீகார்வாசிகள் பொதுவாக காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டவர்கள்.
இதையெல்லாம் வைத்துப்பார்க்கையில் பலமான கட்சியாகவும், ஆட்சி அமைக்கப்பட வேண்டியக் கட்சியாகவும் வந்திருக்க வேண்டிய கட்சி ராஷ்டிரிய ஜனதாத்தளம். இருப்பினும் கிடைத்திருக்கும் தொகுதிகளின் அடிப்படையில் பெரியக்கட்சி ராஷ்டிரிய ஜனதாத்தளம் ( ஐஜக 71, ராஷ்டிரிய ஜதளம் 80) .
நிதிஷ்
தனக்கும் உனக்கும் என நூற்றி ஒன்று இடங்களை பங்கீடு செய்யும் பொழுது தேர்தல் முடிவிற்கு
பிறகு மந்திரி சபையை தீர்மானிக்கும் பலத்தை
அவர் பாதியை இழந்துவிடுவார் என்பது அரசியல் ஆரூடம். இன்று நிதிஷ் அலங்கரிக்கும் முதலமைச்சர்
நாற்காலியின் இரண்டே முக்கால் கால்கள் லாலுவிற்கானது. அதைக்கொண்டு பார்க்கையில் இதிலிருந்த ஐந்து ஆண்டுகளுக்கு பீகார் மாநிலத்திற்கு இரண்டு முதலமைச்சர்கள். ஒருவர் மக்களின் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். மற்றொருவர் சட்டத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
பீகாரிகள் ஒரு பெரியப்புரட்சியை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
ஊழல் களைய வேண்டிய இடத்தில் ஊழலையும், மதவாதம் வேரறுக்க வேண்டிய இடத்தில் மதவாதமும் காலம் தாழ்த்தாமல் களையப்படவும் வேரறுக்கவும் செய்திருக்கிறார்கள்.
ஸ்காட்லாந்து நாட்டைச்சேர்ந்த வரலாற்று அறிஞர் டேவிட் ஹ்யூமினின் பிரபல வாசகம் இது ‘ ஐரோப்பிய எழுச்சியில் கடவுளுக்குப் பங்கில்லை. மத அற்புதங்கள் நகைப்பிற்குரியவை ’.
அந்த வாசகத்தை இங்கு சற்று திருத்தி வாசித்துக்கொள்கிறோம். ‘ பீகார் எழுச்சியில் கடவுளுக்குப் பங்கில்லை’ . அட கடவுளுக்கு மட்டுமா......?
நிச்சயமாக கடவுளுக்குப் பங்கில்லை
பதிலளிநீக்குநல்ல அலசல்.
பதிலளிநீக்குமிக நல்ல அரசியல் கட்டுரை
பதிலளிநீக்குமிக நல்ல அரசியல் கட்டுரை
பதிலளிநீக்கு