என் நண்பர் ஒருவர் உலகத்தில் நடக்கும் கூத்துகளைப்பார்த்து ‘ சிரிய்யா...சிரிய்யா....’ என்றார். எப்படிய்யா சிரிக்க முடியும்...?. சிரிய்யா...சிரிய்யா....என்கையில் எனக்கு சிரியா நாடு அல்லவா நினைவிற்கு வருகிறது.
சிரியாநாடு கொண்டிருக்கும் இன்றைய தட்ப வெப்பம்‘ போரும் போர் நிமித்தமுமானது’. சிரியா நாட்டில் போருக்கு எதிராக கருத்துச்சொன்னவர்கள் கூட படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.அதில் ஒருவர் ட்ரூஸ்.இவர் மதக்குரு தலைவர். இவர் உக்கிர போர் நிகழ்த்தும் ஐஎஸ் தீவிரவாதத்தின் மீதும் அதை எதிர்க்கொள்ளும் சிரியா அரசின் மீதும் அதிர்ப்தி தெரிவித்திருந்தார். அவரையும் அந்த உக்கிரப்போர் விட்டு வைக்கவில்லை.
சிரியாவில் போர் முடிவிற்கு வருகையில் சிரியாவில் வசிக்க யாரும் இருக்கமாட்டார்கள் எனத்தெரிகிறது.பாதிபேர் கொல்லப்பட்டிருப்பார்கள் இன்னும் பாதிபேர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக்கப்பட்டிருப்பார்கள்.
மொத்தத்தில் சிரியா, நாடு என இருந்தும் வாழத்தகுதியில்லாத நாடாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அந்த நாட்டில் சிக்கிண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நினைத்தால், வாழும் நாட்டை விட்டு வாழ நாடு தேடும் அவர்களின் தேடலை நினைக்கையில் அழுகைதான் வருகிறது.
ஐரோப்பியர்களின் இதயம் இரும்பாலும் அவர்களின் மூளை எந்திரத்தாலும், அவர்களின் தவம் ஏகாதிபத்தியத்தாலும் ஆனது என்பார்கள்.அத்தகையவர்களின் மனதில் ஒரு பூகம்பத்தை நிகழ்த்தி மனமாற்றத்திற்கு இடமளித்திருக்கிறது
ஒரு புகைப்படம். துருக்கி கோஸ் தீவின் கடற்கரையில் கரை ஒதுங்கிய அய்லான் குர்தி என்கிற மூன்று வயது குழந்தையின் சடலம் அது.
வியட்நாம் - அமெரிக்கா பனிப்போர். இராணுவமும் நெருப்புக்கோரமும் பின் துரத்த ஒன்பது வயதுடைய ஒரு குழந்தை அழுதுகொண்டு நிர்வாணமாக சாலையில் ஓடி வந்தக்காட்சி அமெரிக்க அண்ணனை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்ததைப்போல...
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அமெரிக்கா விட்டெறிந்த குட்டிப்பையன், குண்டு பையன் என்கிற இரண்டு குண்டுகளால், ஒரு ஜப்பான் சிறுமி தான் எப்படியும் பிழைத்துகொள்வேன் என்கிற நம்பிக்கையுடன் அவள் செய்ய நினைத்து கடைசியில் முடியாமல் போன ஆயிரம் காகிதக்கொக்குகளில் ஒரு கொக்கின் சித்திரம் இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவர்களின் மனச்சாட்சியை ஒரு குடைவு குடைந்ததைப்போல.....
ஆண்டர்சன் என்கிற அமெரிக்க பெருமுதலாளியால் மத்தியப்பிரதேசம் போபாலில் நடந்த அணுஉலை விபத்தில் மண்ணும், காற்றும்,நீரும், வானமும் ஏன் நெருப்பும் கூட நஞ்சாக மாறி இலட்சத்தி்ற்கும் மேற்பட்டவர்கள் அணு உலை விபத்தில் பாதிப்பிற்குள்ளாக , அதில் ஒரு குழந்தையின் விழிகள் வெளிப்பிதுங்கி மண்ணில் புதைக்கப்பட்ட காட்சி அணுவின்பால் அரசியல் கொண்டிருக்கும் நாடுகளின் மனச்சாட்சியை ஒரு உலுக்கு உலுக்கியதைப்போல....
சிரியா நாட்டில் கடற்கரையில், வீட்டில், பால்வாடியில்.....மணல் வீடு கட்டி, கிச்சுக்கீச்சு மூட்டி, கொலை கொலையா முந்திரிக்கா,...எனவிளையாடித்திரிய வேண்டிய ஒரு குழந்தை துருக்கி கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய அவலத்தைஎன்னவென்று சொல்வது...!
கடற்கரையில் ஓடி விளையாடி களைத்துப்போய் தூங்குவதைப்போல காட்சியளிக்கும் அக்குழந்தை ஒரு வேளை கண்விழித்து தேடத்தொடங்கினால் குழந்தையின் கண்கள் ஏங்கும் அமைதி எங்கேனும் தென்கூடுமா....? தன் மகனை அள்ளுகையில் அப்துல்லாவின் மனம் எப்படி துடித்திருக்கும்....
மனைவியை இழந்து, மூத்த மகனை இழந்து மூன்றே வயதுடைய இக்குழந்தையையும் இழந்திருக்கும் அவரது இதயம் அதற்கு மேலும் துடித்திருக்கவா செய்யும்....?
துருக்கி டோகன் செய்தி நிறுவனத்தைச்சேர்ந்த பெண் புகைப்பட கலைஞர் நிலுபர் டெமிர், அவர்குப்புற தூங்குவதைப்போன்ற அக்குழந்தையை படம் பிடிக்கையில் அவரது இதயம் மட்டுமா கலங்கியிருக்கும். அவரது காமிராவும் கண் கலங்கவே செய்திருக்கும்....
ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொள்ள முடியாத நாட்டில் நாம் இருந்தென்ன...? இறந்தென்ன...? அடச்சீ! தீவிரவாதமாம்... விளக்கெண்ணெய்யாம்...!
மக்களை கொன்று குவித்தப்பின் நாடு எதற்கு...? மதமெதற்கு.....? தலைவன் எதற்கு....? ஆட்சி எதற்கு....?
இந்த தீவிரவாதம், துப்பாக்கி, குண்டு, மிரட்டல்,... அகதிகளை உருவாக்கத் தெரிந்த அளவிற்கு அமைதியை ஆக்கத்தெரியவில்லையே ஏன்....?இலங்கை உச்சக்கட்ட போரின் போது ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடல் வழியில் தப்பியோடியவர்களில் பலர் கரை சேரவுமில்லை.நாடுதிரும்பவுமில்லை.இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளின் எண்ணிக்கையா அதிகம்...? ஊகூம்... மாய்ந்துப்போன அப்பாவிகளின் எண்ணிக்கையே அதிகம்.
வங்க தேசம் - பாகிஸ்தான் விடுதலை போரின் போது வங்கத்தேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த வங்க தேசத்து மக்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் வேலையை இன்னும் தொடங்கவேயில்லை வங்கதேசம்.
தமிழக அகதி முகாம்களில் ஈழத்தமிழ்கள் படும் அவஸ்தைஏழு கண்டத்திற்குள் அடங்காதவை.பாலஸ்தீனத்தில் அகதிகள் முகாம்களிலும் குண்டு வீசவே செய்கிறது. ஆசியா என்பது பெரிய கண்டம் அல்ல. பெரிய அகதி .
அழகிகளே விபச்சாரிகள் என்கிற நிலை மாறி அகதிகள் விபச்சாரிகளாகி வயிற்றைக்கழுவும் அவலத்தை என்னவென்று சொல்வது...?
‘ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோட குடும்பங்களிலிருந்து இரண்டு குழந்தைகள் ஜெர்மனி ரயில் நிறுத்தத்தில் இறக்கிவிடப்பட்டிருந்தார்கள்’ பகீர் என்கிறது.
‘ஆப்பரிக்கா ஐரோப்பியா கண்டங்களுக்கு இடையிலான முள்வேலியைத் தாண்ட முடியாமல் மாய்ந்துபோகும் ஆப்பிரிக்க குடிமகன்கள் கட்டு்க்குள் அடங்கவில்லை’ இதயம் அறுபடுகிறது.
‘ ஈழத்தமிழ்களே....
எங்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்...’ என ஆஸ்திரேலியா நாடு கொக்கறிப்பதற்கும், ‘இதற்கு மேலும் வங்க தேசத்து அகதிகளை இந்தியாவிற்குள் வைத்துக்கொள்ள முடியாது’ என இந்தியா கெடு விதிப்பதற்கும் ,‘ மராட்டி....மராட்டியர்களுக்கே....’ என மராட்டியர்கள் உரிமைக்கொண்டாடுவதற்கும் ‘ தலித் சமுதாயமே..... நீ எமக்கு அடிமை செய் அல்லது செத்துப்போ.....’ என குடிசைகளை கொழுத்தும் தமிழக சாதி கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது...?ஒரு கத்தரிக்காயுமில்லை.அவர்கள் உச்சரிக்கும் மொழி மட்டும்தான்!‘தமிழகத்தில் குடிசை என்பதே இல்லாத மாநிலமாக்குவதில்....’ பெரும் வேலையை ஆதிக்க சாதிகள் செய்துகொண்டிருக்கிறது.
அகதியைப் பற்றி வாய்க்கிழிய பேச முடிந்த நம்மால் ‘ நாம் ஒருவனை அடிக்கும் பொழுது , திரும்ப அடிக்க முடியாத ஒவ்வொருவனும் அகதிதான் ’ என நம்மால் ஏன் உணர முடியவில்லை...? அகதிகளை கையாள்வதில் நாம் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில்தான் நிற்கிறோம். பாதி குதிரையும், பாதி மனிதனுமாகக்கொண்ட கிரேக்க இதிகாசம் சென்டார் விலங்காக நிற்கிறோம்.
தட்ப வெப்பம் மாறுபடுகையில் வாழத்தகுந்த இடத்தை நோக்கி தேடுவரும் பறவைப்போன்றவர்கள்தான் மனிதர்களும்.வேடந்தாங்கள் வேண்டுமாம்.அகதிகள் வேண்டாமாம். அகதிகள் பாவம்! அவர்கள் தேர்ந்தெடுக்கும் நாட்டை தொடர்ந்து வாழ நிலம் கேட்கவில்லை.‘ உங்களின் காலைப்பிடித்து கேட்டுக்கொள்கிறோம். எங்கள் நாட்டில் நடைந்தேறும் உக்கிரப்போரில் தலையீட்டு அமைதியைத் தேடித்தாருங்கள். அதுவரைக்கும் உங்கள் நாட்டில் ஏதேனும் வாழத்தகுதியற்ற பாலைவனம் இருந்தால் கொடுங்கள்..’ என்றுதான் கேட்கிறார்கள்.
உலகில் முதலில் அகதிகளை உருவாக்கிக்கொடுத்த பெருமை ஐரோப்பிய அண்ணன்களைச் சாரும். இன்றைய போலீஸ் அண்ணன் அமெரிக்கா கிரேட் பிரிட்டன் உருவாக்கித்தந்த அகதி நாடு அல்லவா அது! அவர்கள் தன் எல்லைகளை இரும்புக்கரம் கொண்டு மூடுகையில் அவர்களை நினைத்து முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை.
உலகில் அகதிகளுக்கு முழு அடைக்கலம் கொடுக்க சட்டத்தில் இடம் வகுத்திருக்கும் ஒரே நாடு நார்வே.நிதி நிலை அறிக்கையில் முப்பது விழுக்காடு அகதிகள் முகாம்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது. இதற்கு மற்ற ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ‘ அய்யய்யோ....’ என்கிறது.
‘நீ அகதிகளுக்கு இடம் கொடுக்கப்போய் அவர்கள் எங்கள் நாட்டிற்குள்ளும் நுழைகிறார்கள்’ எனக் கடுஞ்சினம் கொள்கிறது.உண்மையில் இன்று ஒரு நாட்டின் பிரஜைகளை விடவும் நாடற்ற அகதிகள் அதிகம்.
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 3.64 இலட்சம் பேர் ஆவார்கள் என்கிறது ஐ,நா பெருமன்றம். இதுவரை கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 3000 பேர்.கண்ணிற்குத் தெரிந்து..... தெரியாமல் எத்தனையோ....
அகதிகளைப்பற்றி எந்த நாடும் பெரிதாக கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஐரோப்பியாவில் தத்தளிக்கும் இரண்டு இலட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் என ஐ.நா சபை அகதிகள் பிரிவு தலைவர் அன்டோனியா கேட்டுக்கேட்டு அசந்துபோய்விட்டார். யாரும் ஒரு நாடும் மனக்கதவைத் திறந்ததாகத் தெரியவில்லை.
மத்தியத்தரைக்கடல் வழியே வெளியேறும் அகதிகளில் பலர் கிரிஸ் , துருக்கி நாடுகளில் அடைக்கலம் தேடுகிறார்கள். அவைகள்தான் கடற்கரை நாடுகள். சிலர் மெல்ல இடம் பெயர்ந்து ஜெர்மன், பிரான்ஸ் , இத்தாலி நாட்டிற்குள் நுழைகிறார்கள் கையூட்டுக்கொடுத்து. ஜெர்மன் , பிரான்ஸ் ஓரளவு அகதிகளை அனுமதிக்கிறது. அவர்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்படுகிறது.இத்தாலி பழைய பாசிச முகத்தைக்காட்டுகிறது.
இப்படிப்பட்டவர்களின் பாசிச முகத்தை , துருக்கியில் கரை ஒதுங்கிய சிரியா குழந்தை அய்லானின் புகைப்படக்காட்சி மனமிரங்க வைத்திருக்கிறது.
எகிப்து நாட்டைச்சேர்ந்த கோடிஸ்வரர் ‘நக்விப் சவிரிஸ்’ இத்தாலி நாட்டிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘
இத்தாலி நாடு கொண்டிருக்கும் யாரும் வாழ முடியாத குட்டிக்குட்டி தீவுகளில் ஒன்றேயொன்றை மட்டும் விலைக்கு கொடுங்கள். அதை நான் அகதிகள் வாழ தகுதியுள்ள நாடொன்றாக மாற்றிக்கொடுக்கிறேன் ’ என்கிறார்.
ஈரான் நாட்டைச்சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் என்பவர் தனக்குக்கிடைத்த எழுபத்து நான்கு இலட்சத்தை தற்போது சிரியா, இராக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்த அகதிகளின் நலனுக்காக அந்தப்பரிசுத்தொகையை வழங்கியிருக்கிறார்.
எல்லையில் கம்பி வேலி அமைத்து அகதிகளை தடுத்து நிறுத்திய சிலி அரசு வேலியை தளர்த்திருக்கிறது.
ஹங்கேரி அரசு ,அகதிகள் நாட்டிற்குள் நுழையவும், ரயிலில் பயணம் செய்யவும் தடை விதித்திருந்தது. தற்போது அவர்களை பேருந்தில் அழைத்துசென்று ஓர் அரண்மனையில் தங்க வைக்கும் வேலையை செய்திருக்கிறது.
ஆஸ்திரியா நாடு ஒரு படி மேலேபோய் அகதிகள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாக எங்கள் நாட்டிலேயே தங்கிக்கொள்ளலாம் என்றிருக்கிறது.இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு அதிக அளவு அகதிகளை எதிர்கொண்டிருக்கிறது.
பின்லாந்து நாட்டின் அதிபர் ஜுஹா சிபிலா அவரது அரண்மனையை அகதிகளுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார்.
ஜெர்மன் நாட்டில் குடியேறிய ஒவ்வொரு அகதிகளின் கையிலும்,பையிலும், கொடியிலும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் புகைப்படமிருக்கிறது.
‘ஜெர்மனிடம் அடைக்கோரும் அகதிகள் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறோம். இதற்கான வரம்பு எதையும் நிர்ணயி்க்கவில்லை.எங்களால் முடிந்த வரை எல்லோரையும் வாழ வைப்போம்’ என்றிருக்கிறார் ஜெர்மன் பிரதமர். இதற்கிடையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ‘ அகதிகளை ஐரோப்பிய நாடுகள் சரிசமமாக பகிர்ந்துக்கொள்வோம்’ என்றிருக்கிறது. அர்ஜென்டினா அகதிகளை தன் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அகதிகளுக்கு இடம் கொடுப்பது ஒன்று மட்டுமா... ஓர் அரசின் வேலை. அத்துடன் அவர்களின் பணி முடிந்து விடுகிறதா...? அவர்கள் நிரந்தரமாக, அமைதியாக, வாழ அவரவர் நாட்டை திருப்பிக்கொடுக்க வேண்டாமா....?
ஈழத்தமிழ் கவிதை ஒன்று உண்டு.‘ அப்பாவிற்கு கனடா பிடிக்கும். அம்மாவிற்கு சிங்கப்பூர் பிடிக்கும்.அண்ணனுக்கு மலேசியா பிடிக்கும். எங்கள் எல்லோருக்கும் நாங்கள் விட்டுவந்த ஈழத்தமிழ் தேசம்தான் பிடிக்கும்...’அட...சொர்க்கமே என்றாலும்.... அவரவர் ஊரைப்போல வருமா....?
உணர்வுக்குமதிப்பளிக்கிறேன்
பதிலளிநீக்குஆண்ட தமிழினம் அகிலமெங்கும் அகதிகளாய் அலையும் அவலம். என்று தணியும்...?
பதிலளிநீக்குayya niraiya vasikkirinka
பதிலளிநீக்கு