சிறுகதை வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வகுப்பறையின் கதவை இறுக அடைத்துகொண்டேன். மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். இத்தகைய இறுக அடைத்தல் எனக்குத் தேவையென இருந்தது. அருகாமை வகுப்புகளின் இரைச்சலிலிருந்து என் வகுப்பு மீளவும், என் சரித்திரப் போதனை அடுத்த வகுப்பிற்குக் கேட்காமல் இருக்கவும் இந்த கதவடைத்தலும் தாழ்ப்பாழ்கள் இடுதலும் எனக்கு தேவைப்பட்டிருந்தது. நான் எந்த வகுப்பையும், எந்தப் பாடவேளையையும் யோகா இல்லாமல் தொடங்குவதில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் என் வகுப்பு மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், நூறு சதம் தேர்ச்சி பெறுவதற்கும் காரணம் இந்த யோகாதான். நான் என்றேனும் ஒரு நாள் பாடம் நடத்தாமல் கூட இருந்துவிடுவதுண்டு. ஆனால் யோகா வகுப்பு நடத்தாமல் இருந்ததில்லை. நான், என் வகுப்பிற்குள் நுழைகையில் என் வகுப்பு மாணவர்கள் தாமாகவே முன் வந்து யோகா செய்யத் தொடங்கிவிடுவார்கள். யோகாவிற்கு நான் ஒதுக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள். அவ்வளவே! யோகா முடிந்ததும் அடுத்து தேச நல உறுதிமொழி. நான் கண்கள் திறந்துவைத்துகொண்டு சொல்வதை மாணவர்கள் கண்களை மூடிக...