போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி செங்கடலை ஒட்டிய மேற்கு கரையோரப்பகுதிகள் அமைதிக்கொண்டிருந்தன . தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைச்செய்திகள் யாவும் போர் நிறுத்தம் பற்றிய செய்தியைத் திரும்பத்திரும்ப உறுதிப்படுத்திக்கொண்டிருந்தன . காற்றின் கற்பைக்கிழிக்கும் பீரங்கி சத்தமும், போர் விமானங்களின் உக்கிரமான உறுமலும், ராக்கெட் குண்டுகளின் டாம்பீரமும் இல்லாத கடற்கரை அதிசயமாகவும் அழகாகவும் தெரிந்தது . காகம் கரையும் சத்தமும், சிட்டுக்குருவிகளின் கீக்..கீக்.... கொஞ்சலும் கேட்கத்தொடங்கிருந்தன . நிலைக்கண்ணாடி கீழே விழுந்து எட்டுத்துண்டுகளாக உடைந்துப்போனதைப் போலதான் பாலஸ்தீனம் என்கிற புண்ணிய பூமி உடைந்து சிதறிப்போயிருக்கிறது . ரிக்டர்க்குள் அடங்காத ஒரு பேரதிர்வு வந்திருந்தால் கூட இப்படியொரு அதிர்வை அதனால் ஏற்படுத்திருக்க முடியாது . ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி என்கிற இரு நகரத்தின் முகுளத்தில் விழுந்த இரண்டு குண்டுகள் ஜப்பானியர்களின் உயிரைத்தான் குடித்ததே தவிர ஜப்பான் நிலத்தை, வாழ்வாதாரத்தை, அதன் மண்ணை, அதற்கு...