‘ எ த்தனை ஆடைகள் இருந்தென்ன.....லெக்கிங்ஸ் அணிவது தனி சுகம்தான். லெக்கிங்ஸை வடிவமைச்சது யாருனு கண்டுப்பிடிச்சு அவருக்கொரு விருதுக்கொடுக்கணும். என்ன சொல்றே நீ.....?’ என்றவாறு யாரிடமோ அவள் அலைபேசியில் அலாவிக்கொண்டிருந்தாள் கண்மணி. ‘வறுமை நிறம் சிவப்பு அல்ல. லெக்கிங்ஸ்’ இது வறுமைக்கு அவள் வகுத்திருக்கும் இலக்கணம். ஒரு சேலை எடுக்கும் விலையில் பத்து லெக்கிங்ஸ் எடுத்துவிடலாம் என்பது அவளது சமீப பொருளாதாரக் கண்டுபிடிப்பு. குட்டைப்பாவாடை அணிந்து டென்னிஸ் விளையாடும் சானியா மிர்ஸா அக்காவிற்கு இரண்டு மூன்று லெக்கிங்ஸாவது எடுத்து அனுப்பி வைக்க வேணும் என்பது அவள் கொண்டிருக்கும் இலட்சியங்களில் ஒன்று. சேலை அணிந்து போட்டி நடனமாடிய பார்வதிதேவி ஒற்றைக்காலைத்தூக்கி காதின் அணிகலனைக் கலட்ட முடியாமல் சிவபெருமானிடம் தோற்றுப்போனவளுக்கு லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்து அந்தப்போட்டியை மறுபடியும் நடத்திப்பார்த்திட வேணும் என்பது அவளது மற்றொரு இலட்சியம். ...