அவர்கள் பேசிக்கொள்ளும் அரவம் முன்னே விடவும் பலமாகக் கேட்கத் தொடங்கின. அவர்கள் ஊர்க்கதைப் பேசி, நாட்டு நடப்புகளைச் சுற்றி ‘ஜோஸ் மார்ட்டி’ எனும் போராளியை வட்டம் கட்டினார்கள். ஒருவன் சொன்னான் ‘ பிறந்தால் ஜோஸ் மார்ட்டி போல் பிறக்க வேண்டும்’ மற்றொருவன் ‘ அவர் அப்படி என்ன செய்து விட்டார்....?’ முதலானவன் இரண்டாவது நபர் மீது எரிந்து விழுந்தான். அடிக்கக் கையை ஓங்கினான்.‘ நல்லக்கேள்வி கேட்டாயடா நீ... அவரை மட்டும் இந்த சண்டாள ஸ்பானியர்கள் விட்டு வைத்திருந்தால் இன்றைக்கு அமெரிக்கர்கள் நம்மிடம் இப்படி வாலாட்டுவார்களா....? அமெரிக்கர்களின் வாலை அவன் ஒட்ட வெட்டியிருப்பான்.....’ கரும்புத் தோகையால் வேயப்பட்ட குடிசைக்குள் இருந்தபடி அவர்கள் ஜோஸ் மார்ட்டி நிகழ்த்திய சாகசத்தை கர்ஜனையோடுப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அவர்களது பேச்சு உரத்தக்குரலிலும் சில இடங்களில் நிறுத்தி மெல்லமாகவும் இருந்தது. அவர்கள் ஏஞ்சல் பண்ணையாரின் இரவு நேரக் காவலர்கள். ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்துகொண்டு கதைப்பேசுவதும்...