முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவம்பர் புதுப்புனல் இதழில் பிரசுரமான சிறுகதை நிஷாந்தி என்கிற பணிப்பெண்

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு...
      நிஷா என்கிற நிஷாந்தி புது வரவு பணிப்பெண். இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்கவள். கேரளா பெண்களுக்குரிய நிறமும், சாயலும் கொண்டவள். மெல்லிய தேகம். உயரம் ஆறடி ஏழு அங்குலம். எடை நாற்பது கிலோ.
      சீருடை ஒன்றே அணிவாள். மேலாடை நீலமும் வெண்மையும் கலந்த பனியன். கழுத்திடத்தில் அவளுடையப் பெயரும் அதற்குச் சற்று கீழாக பெரிய எழுத்தில் கம்பெனியின் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும். கீழாடை தொடைகளை இறுகப்பிடிக்கும் லெக்கிங்ஸ். காலில் ஷு, சாக்ஸ். கைகளில் கையுறை. காதுகளில் ஒரு மெல்லிய தோடு. கழுத்தில் பாசி. மூக்குத்தி அணிந்திருக்கமாட்டாள். அதை அணிய வேண்டுமென வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.
      தாய்மொழி தமிழ். திருநெல்வேலி பாஷை. ஆங்கிலம், இந்தி, மலையாளம், உருது, தெலுங்கு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவள். இது தவிர மராட்டி, குஜராத்தி மொழிகளைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறு பணிவிடைச் செய்பவள்.
      அவளை பணிப்பெண்ணாக அழைத்துச்செல்ல விரும்புபவர்கள் முன்தொகையாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதை காசோலையாக செலுத்த வேண்டும். இத்தொகை எக்காரணம் கொண்டும் திருப்பித் தர மாட்டாது.
சம்பள விபரம் :
      மாதந்தோறும் முதல் தேதி அன்று அவளது பெயரால் எடுக்கப்பட்ட காசோலையை கம்பெனி முகவரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். மாதச்சம்பளம் ரூபாய் பத்தாயிரம். முதல் தேதி ஞாயிறு என்றால் அதற்கும் முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை காசோலை எடுக்கப்பட வேண்டும். இது தவிர ஆறு மாதத்திற்கொரு முறை மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி, போனஸ், அத்தனையும் நிஷா என்கிற நிஷாந்திக்குப் பொருந்தும்.
வார விடுமுறை மற்றும் மற்ற விபரங்கள்:
      வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு விடுமுறைக் கொடுத்தாக வேண்டும். தீபாவளி , பொங்கல் போன்ற இந்து பண்டிகைக் காலங்களில் பண்டிகை முடிந்து மறுநாளுக்கும் மறுநாள் போனஸுடன் கூடிய ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வாள். இது ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற மற்ற மதப்பண்டிகைக்கும் பொருந்தும்.
அவளது பணிவிடை விபரம் -
மு.ப 5.00 மணி
      அவள் எழுந்திருக்கும் நேரம் இது. அலாரம் வைத்துகொண்டுதான் எழுந்திரிப்பாள். அவள் வைத்திருக்கும் அலாரம் குடும்ப முதலாளி, அவரது மனைவி, பிள்ளைகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்காது. அவள் எழுந்ததும் தன் ஆடைகளைச் சரிசெய்துகொள்வாள். ஐந்து நிமிடங்கள் யோகா பயிற்சி மேற்கொள்வாள். வாடிக்கையாளர்களுக்கு தன் சேவை ஒரு போதும் கோபமூட்டும் படி இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யோகா. பிறகு முகத்தைப் புத்துணர்ச்சியுடனும் , சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள சில நறுமண, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வாள். தலைச்சீவி கொண்டை இட்டுக்கொள்வாள். நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு. குடும்பத்திலிருக்கும் அத்தனை நபருக்கும் தன் மரியாதைக்குரிய வணக்கத்தைக் குனிந்து நிமிர்ந்து சொல்வாள்.
மு.ப 5.30 மணி
      அவள் செய்யும் முதல் வேலை இந்நேரத்தில் தொடங்கும். இரவில் வைத்தப்பொருட்கள் அதனதன் இடத்தில் இருக்கிறதா....என மேலோட்டம் பார்ப்பாள். ஒரு வேளை பொருட்கள் இடம் மாறியிருந்தால் அல்லது களைந்துப்போயிருந்தால் வீட்டிற்குள் அந்நியர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை முதலாளியிடம் முறையிடுவாள்.
மு.ப 6.00 மணி
      சமையல் எரிவாயு அடுப்பைப் பற்ற வைப்பாள். எரிவாயு அடுப்பில் மட்டுமே சமைக்கத் தெரிந்த அவளுக்கு விறகு அடுப்பையோ, ஸ்டவ் அடுப்பையோ கொடுத்து அவளை சமைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. சமையலில் முதல் வேலையாக நேற்றைய இரவு சமைத்த உணவுப்பொருட்கள் எதுவும் மீதமிருந்தால் அவைகளைச் சூடு செய்வாள். அதன்பின் தேனீர், காஃபி தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்குவாள். யார், யாருக்கு எவ்வளவு சீனி, டிக்காசன், சூடு என்பதை அவளிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். தேனீருக்கும், காஃபிக்கும் தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்துவாள். நன்றாக ஆற்றி அவரவருக்கு தேவையானச் சூட்டில் அதிகப்பட்ச மரியாதையுடன் அதை அவர்களிடம் நீட்டுவாள். முதலில் குழந்தைகளுக்கும் அதன்பிறகு படிப்படியாக வயதில் மூத்தவர்களுக்குமாக அவளுடைய  பணிவிடை தொடரும்...
மு.ப.7.00 மணி
      அன்றையத் தினசரிகளை அவள் வாசித்துக் காட்டுவாள். முதலில் தலைப்புச் செய்திகளாக வாசிப்பவள் பிறகு மாவட்டச் செய்திகளையும், உள்ளூர் செய்திகளையும் முடித்ததன் பிறகு தேசிய, உலகச் செய்திகளுக்குச் செல்வாள். அரசியல் செய்திகளில் அவள் அவ்வளவாகக் கவனம் செலுத்த மாட்டாள். ஆனால் விளையாட்டுச் செய்திகளுக்கு கூடுதல் நேரம் எடுத்துகொள்வாள்.
மு.ப. 7.30 மணி
      சமையல் தொடங்கும் நேரம் இது. அடுப்பில் சமையல் பாத்திரங்களை வைத்துகொண்டு காய்கறிகளை நறுக்கத் தொடங்குவாள். காலை உணவிற்கு சப்பாத்தி, இட்லி, தோஸை, பொங்கல், இடியாப்பம், ஊத்தாப்பம் இவற்றில் எதாவது ஒன்றினைச் சமைப்பாள். யாரேனும் ஒருவருக்கு மட்டும் வேறொரு உணவு வேண்டுமென்றால் அவருக்கு மட்டும் பிரத்யேகமான உணவைச் சமைத்துக்கொடுக்க முன் வருவாள். அதே நேரம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணவை சமைக்க அவள் சம்மதிக்க மாட்டாள். ஏனெனில் குடும்பத்தார்கள் ஒரே உணவை சேர்ந்து உண்பது ஒன்றே குடும்ப ஒற்றுமையையும், சந்தோசத்தையும் கூட்டும் என்பதால் அப்படியொரு முடிவை அவள் எடுத்திருக்கிறாள். காலையில் மட்டன், சிக்கன் சமைக்க அவளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
      உங்கள் உடம்பிற்கு கறி உணவு எப்பொழுது தேவைப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து குறித்த நேரத்தில் உங்களை அவள் கறி வாங்கி வர உத்தரவு இடுவாள். கெட்டுப்போன, அழுகிய, இறந்த மாமிச உணவுகளாக இருந்தால் அதை வெளியே விட்டெறிந்துவிடுவாள். இத்தகைய பண விரயத்தைத் தவிர்க்க மட்டன் வாங்கி வரச் செல்கையில் அவளை கூட அழைத்துச் செல்வது நல்லது.
      இது தவிர யாரேனும் உடல் நலிவுற்றிருந்தால் அவர்களைக் கவனிக்கும் பொருட்டு கஞ்சி சமைப்பது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொடுப்பது போன்ற பணிவிடைகளைச் செய்வாள்.
மு.ப 8.00 மணி
      அனைவரையும் குளிக்க வைக்கின்ற நேரமிது. முதலில் குழந்தைகளும் அடுத்து பெண்களும், அடுத்ததாக ஆண்களும் குளிக்க வேண்டும். குழந்தைகளாக இருந்தால் அவளே குளிர்ப்பாட்டி, துவிட்டி, மின்விசிறியில் தலைமுடிகளை உலர வைப்பாள். குழந்தைக்கேட்கும் ஆடைகளை அணிவித்து தலை சீவி, பொட்டு வைத்து பள்ளி வயது குழந்தையாக இருந்தால் அக்குழந்தைக்குத் தேவையான சாப்பாடு, சினாக்ஸ், ஹோம் ஒர்க், புத்தகங்களை எடுத்து வைப்பாள்.
      பெண்கள் குளிக்கையில் சில உதவிகளைச் செய்ய தயங்க மாட்டாள். குறிப்பாக, மஞ்சள் தேய்த்துக்கொடுப்பது, முகத்திற்கு சோப்பு போடுகையில் தண்ணீர் முகர்ந்துக்கொடுப்பது, தலைக்கு சாம்பு தேய்த்து முடிகளை நீவி விடுவது, துவட்டி விடுவது போன்ற பணிகளைச் செய்வாள். ஆண்கள் குளிக்கையில் முதுகு தேய்த்துவிடும் வேலை ஒன்றை மட்டுமே செய்வாள்.
மு.ப 9.00 மணி
      உணவு பரிமாறும் நேரம் இது. இடுப்பில் டவல் ஒன்றைக் கட்டிக்கொண்டு கையில் பாலித்தீன் உறையுடன் உணவு பரிமாறுவாள். நிஷா என்கிற நிஷாந்தி என்பவளின் சிறப்பே உணவு பரிமாறுவதுதான். யார், யார்க்கு என்ன உணவு பிடிக்கும், எவ்வளவு பிடிக்கும் என்பதை வாடிக்கையாளர் சாப்பிடும் விதத்தை வைத்தே கணித்துவிடுவாள். சாப்பிடுகையில் புரை ஏறினால் உச்சந்தலையைத் தட்டுவாள். தண்ணீர் கொடுப்பாள். ஒருவேளை உணவில் உப்பு, மிளகு, சர்க்கரை கூடக் குறைய இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டாள்.
மு.ப 9.30 மணி
      சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்து , கழுவி அதனதன் இடத்தில் வைக்கும் நேரமிது. சமையலறையை ஈரத்துணிக்கொண்டு துடைப்பாள். சமையல் மிச்சமிருந்தால் அதை சரியாக அப்புறப்படுத்துவாள். திட, திரவ , மக்கும், மக்காத கழிவுகளை அததற்குரிய குப்பைத் தொட்டிகளில் கொட்டுவாள்.
மு.ப 10.00 மணி
      அவளை அவள் புத்துணர்ச்சி செய்துகொள்ளும் நேரமிது. ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வாள். அவள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அந்நியர்கள் யாரும் அவளுடைய அறைக்குள் நுழையக்கூடாது.
மு.ப 11.00 மணி
      வீட்டின் கூரையை ஒட்டடை அடிப்பாள். தரையைத் துடைத்தெடுப்பாள்.இந்நேரத்தில் யாரும் வீட்டிற்குள் வருவதோ அல்லது வீட்டினை விட்டு செல்வதோ கூடாது. ஒரு வேளை இதை மீறினால் கோபித்துக்கொள்ளச் செய்வாள்.
மு.ப 12.00 மணி
      மதிய உணவிற்காக சமையல் தொடங்கும் நேரம் இது. காய்கறிகளை உப்புத்தண்ணீரில் கழுவி எடுப்பாள். காய்கறிகளின் கலோரி வீணாகாமல் இருக்க அததற்குரிய சைஸில் நறுக்குவாள். முதலில் கூட்டுப்பொரியல்களையும், அடுத்து சாம்பார் ரசத்தையும் கடைசியில் சாதத்தையும் சமைப்பாள். காய்கறி பாதியளவு வேகுவதுதான் நல்லது என்பதால் அவ்வாறே சமைத்து எடுப்பாள். முழுவதுமாக வெந்த காய்கறிகள்தான் வேணும் என்றால் அதனை அவளிடம் முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும்.
பி. ப 1.00 மணி
      மதிய உணவு பரிமாறுவாள். முதலாளிக்கு கை அலம்பத்  தண்ணீர் கொடுத்து அன்புடன் அழைப்பாள். கைகளைச் சோப்பிட்டு கழுவுகிறீர்களா என்பதைக் கவனிப்பாள். ஒரு வேளை அவ்வாறு கழுவவில்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டாள். கைக் கழுவும் முறையுடன்தான் கை கழுவ வேண்டும். ஒரு வேளை தெரியவில்லையென்றால் அதனை சொல்லிக்கொடுக்க முன் வருவாள்.
பி.ப 2.00 மணி
      மதிய உணவு முடிந்து அரை மணி நேரம் தூங்குவது உடல் நலத்திற்கு நல்லது. ஆகவே அனைவரும் தூங்கும்படியாக ஒரு கதையொன்றைச் சொல்வாள். கதையென்றால் ஓர் ஊர்ல...,ஒரு நாட்டுல....போன்ற கதைகள் அல்ல. பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள். உதாரணத்திற்கு கல்கி, கு.அழகிரிசாமி, ராஜநாராயணன், அகிலன், புதுமைப்பித்தன், பிரபஞ்சன், பொன்னீலன், கந்தர்வன், அழகியப்பெரியவன், மேலாண்மை பொன்னுசாமி,....இவர்கள் எழுதிய கதையொன்றை சொல்லித் தூங்க வைப்பாள். மொழிபெயர்ப்பு கதைகளையும் அவள் அவ்வபோது சொல்லக்கூடும். அசாமி எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி, மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், உருது எழுத்தாளர் சைனீ, அன்வர்கான், ஒரியா எழுத்தாளர் கோபிநாத் மெகந்தி, இந்தி எழுத்தாளர் உஷா மகஜன், தெலுங்கு எழுத்தாளர் லாசா பிரபாவதி, வங்காள எழுத்தாளர் மகேஸ்வதா தேவி,கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகர்,...இப்படி பலரின் கதைகளையும் அழகாக சாராம்சம் குன்றாமல் சொல்லி தானொரு சிறந்தக் கதைச்சொல்லி என்பதைக் காட்டுவாள்.
பி.ப 2.30 மணி
      துணிகளைத் துவைக்கும் நேரமிது. வாசிங் மிஷினில் அவள் துவைத்தாலும் காலர், கை மடிப்பு, பாக்கெட் போன்ற இடங்களில் கைகளால் அழுக்குகளை தேய்த்தெடுக்க தவறமாட்டாள். துணிகளை மெல்லப்பிழிந்து உதறி கொடியில் காயப்போடுவாள்.
பி.ப 3.00 மணி
      முதல்நாள் துவைத்த துணிகளை இஸ்திரி செய்து மடித்து வைக்கும் நேரமிது.
பி.ப 4.00 மணி
      வீட்டைச் சுற்றிலுமிருக்கும் மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவாள். தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க சொட்டு நீர் பாசனத்தை மேற்கொள்வாள். பூஞ்செடி மற்றும் அழகு செடிகளில் அதிக கவனம் செலுத்துவாள். ஒவ்வொரு இலைகளாகப்பார்த்து அதில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அதைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்கும் வேலையைச் செய்வாள். மல்லிகைப் பூக்களைப்பறிப்பாள். பூத்தொடுப்பாள். சரமாகத் தொடுக்கும் பூக்களைக் கொண்டு பூஜையறையில் இருக்கும் சாமிகளுக்கு சூட்டுவாள். வீட்டில் பூச்சூடும் பெண்களின் கூந்தலில் சூட்டி அழகுப்பார்ப்பாள்.
பி.ப 4.00 மணி
      அவள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் நேரமிது. சதுரங்க சாம்பியனான அவளுடன் சதுரங்கம் விளையாடுவது நல்லப் பொழுதுப்போக்காக அமையும். அவளுடன் பந்தயம் கட்டியும் விளையாடலாம். விளையாடத் தெரியாதவர்களுக்கு அவள் சொல்லிக்கொடுக்கவும் செய்வாள். என்னதான் அவள் சதுரங்க சாம்பியனாக இருந்தாலும் குழந்தைகளுடன் விளையாடுகையில் குழந்தைகளை வெற்றிப்பெறச் செய்து அவள் தோற்றுப்போகச் செய்வாள்.
பி.ப 5.00 மணி
      தேனீர், காஃபி தயாரிக்கும் நேரமிது. கூடவே எள்ளு, கொள்ளு, அவல், கொண்டைக்கடலை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவிழ்த்து சுவைப்பட செய்துகொடுப்பாள்.
பி.ப 6.00 - 8.00  மணி
      குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தும் நேரமிது. குழந்தைகளை மிக அருகினில் உட்கார வைத்து அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பாள். பிரிட்டிஷ் இங்கிலிஷ், அமெரிக்கன் இங்கிலிஷ் இரண்டிலும் தேர்ந்தவள் என்பதால் குழந்தையின் விருப்பத்திற்கேற்ப அவள் சரியான உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தைக் கற்பிப்பாள். பொதுஅறிவு கேள்விகளையும் அன்றைய தினத்து வரலாற்று, அறிவியல் கேள்விகளைக் கேட்டு குழந்தைகளின் நுண்ணறிவை வளர்த்தெடுப்பாள்.
பி.ப 8.00 மணி
      இரவு உணவு நேரம். இரவு உணவை அவள் மிதவான உணவாகவே சமைத்து எடுப்பாள். இடியாப்பம், சப்பாத்தி, இட்லி, பூரி போன்ற உணவுகளையும் அதற்கேற்ற சைடீஸ்டுகளையும் செய்துக் கொடுக்கும் அவள் அதை மிதமான சூட்டுடன் பரிமாறுவாள். மேகி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் அவளுக்கு சமைக்கத் தெரியாது.
இரவு 9.00 மணி
      குழந்தைகளுடன் பேசி சிரித்து விளையாடுவாள். பெரியவர்களிடம் அன்றையத் தினத்து சந்தோஷம் மற்றும் கசப்பானச் சம்பவங்களைக் கேட்டு முடிந்தால் அதற்கானத் தீர்வுகளைச் சொல்வாள்.
இரவு 9.30 மணி
      குழந்தைகளைத் தோளில் கிடத்திக்கொண்டு தட்டிக்கொடுத்தவாறு தாலாட்டுப்பாடுவாள். தாலாட்டு குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் படியாகவும் , எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் வகையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்வாள். தூங்கியக் குழந்தைகளை அவர்களுக்குரிய இடத்தில் படுக்க வைப்பாள்.
இரவு 10.00 மணி
      பெரியவர்களைத் தூங்க வைக்கும் நேரமிது. குடும்பத் தலைவர், தலைவிகளின் கால்களைப்பிடித்துவிடுவாள். மின்சாரம் நிறுத்தப்பட்டால் விசிறி விடுவாள். மனதிற்கு சாந்தமான பாடல்கள், கதைகளைக்கூறுவாள். எம்.எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, ஏ.ஆர் ரகுமான்,...மெல்லிசைப் பாடல்களைப் பாடி குறித்த நேரத்திற்குள் தூங்க வைப்பாள்.
இரவு 10.30 - 11.00 மணி
      பாத்திரங்களை கழுவி வைப்பாள். மீத உணவுகளை அதற்குரியக் தொட்டியில் கொட்டுவாள். சமையலறையை ஈரத்துணிக்கொண்டு துடைப்பாள். சமையல் எரிவாயுவை நிறுத்துவாள். மின்சார விளக்குகளை நிறுத்தி ஜீரோ வோல்டு விளக்கை  குறிப்பட்ட அறைகளில் ஒளிர விடுவாள். அன்றையத் தினத்தின் கடைசியில் அவளைப் படைத்தவர்களுக்கு நன்றி கூறும் அவள் ‘குட் நைட்’ சொல்லிக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்துக்கொள்வாள்.
                                          ####
நிஷா என்கிற நிஷாந்தியின் நேர்முகக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு...
      வாடிக்கையாளர்  திருமூர்த்தி எழுதிக்கொள்வது....
      நிஷா என்கிற நிஷாந்தியை ஒரு இலட்சம் முன்பணம் செலுத்தி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பணிவிடை செய்ய அழைத்து வந்தேன். நீங்கள் எனக்குக்கொடுத்த உறுதிமொழி மற்றும் நேர அட்டவணையின் படி அவள் அன்றாட வேலைகளைச் செய்து வந்தாள். ஆனால் நேற்றைய இரவு சரியாக 10.15 மணியளவில் அவளது வேலையை அவள் சட்டென நிறுத்திக்கொண்டாள். அதன் பிறகு நான் எவ்வளவு கட்டளை இட்டும் அவள் அவளது வேலையைத் தொடர்வதாக இல்லை. இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.
       நிஷா என்கிற நிஷாந்தி வாயிலாக என்னிடம் நீங்கள் திட்டமிட்டு ஒரு இலட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறீர்கள். இதுதவிர அவளுக்கான மாதச்சம்பளத்தையும் பெற்றிருக்கிறீர்கள். .உங்கள் மீது நான் இ.பி.கோ 320 ஜீரோ ஆக்ட் 17(ஏ) இன் படி வழக்கு தொடர இருக்கிறேன். அதன் மூலம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க இருக்கிறேன். இந்நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் என் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் அளிக்க வேண்டுமாய் கேடடுக்கொள்கிறேன்.
                                    #####
வாடிக்கையாளர் திரு. திருமூர்த்தி அவர்களுக்கு....
      நிஷா என்கிற நிஷாந்தியின் திடீர் வேலை நிறுத்தத்திற்கு அவளது நேரடிக் கண்காணிப்பாளர் என்கிறவன் முறையில் தாங்களிடம் பகீரங்க மன்னிப்புக்கோருகிறேன். எங்களிடமிருந்த பணிப்பெண்களில் மிகவும் அழகானவளும், புத்திசாலியுமானவள் நிஷா என்கிற நிஷாந்திதான். அவளது திடீர் வேலை நிறுத்தம் உண்மையில் உங்களைப்போன்று எனக்கும் மன வருத்தம் அளிக்கவே செய்கிறது. நீங்கள் விரும்பினால் அவளை நாங்கள் திரும்ப அழைத்துக்கொண்டு உஷா என்கிற  உஷா தேவி அல்லது பானு என்கிற பானுப்பிரியா இவர்களில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை விருப்பமில்லை என்றால் நீங்கள் கோரும் ஒரு கோடி ரூபாயை நஷ்ட ஈடாகத் தரவும் இருக்கிறேன்.
      நிஷா என்கிற நிஷாந்தியின் திடீர் வேலை நிறுத்தத்திற்கானக் காரணத்தை ஆராய்கையில் இதனால் இருக்கலாம் என எங்களால் ஊர்ஜிதப்படுத்த முடிகிறது. அவளைப்பற்றியும் அவளது பணியைப் பற்றியும் கால அட்டவணையாகக் கொடுத்த எங்கள் கம்பெனி ஒரே ஒரு குறிப்பை வாடிக்கையாளர்களின் மீதான அதீத நல்லெண்ணத்தின் அடிப்படையில் குறிப்பிடாமல் விட்டிருந்தோம். அதை நான் இப்பொழுது தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நிஷா என்கிற நிஷாந்தி உலகத் தரச்சான்று பெற்ற ரோபோ. இரவு பனிரெண்டு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை ஏற்றிக்கொள்ளும் மின்னேற்றத்தைக் கொண்டு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியவள். அவளது அனைத்துச் செயல்பாடுகளுக்குமான மென்பொருள் மற்றும் மின்பொருளை அவளது அந்தரங்க உறுப்புகளில் அமைத்திருந்தோம். ஒரு வேளை அவளது அந்தரங்க உறுப்புகளின் மீது உங்களது கை சீண்டிருக்குமேயானால் அவளது அன்றாடப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.
      ஒரு வேளை அத்தகைய முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் இந்நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அதாவது 27.01.2030 அன்றைய தினத்தின் ஐந்து மணிக்குள் எங்களிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ மன்னிப்புக்கோர கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் ரோபோ சட்டம் 2025, பெண் ரோபோக்களின் பாதுகாப்புச் சட்டம் - 2029 ஷரத்து 22(பி) இன் படி உங்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்படும் என்பதை இந்நோட்டீஸ் வாயிலாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

                                         

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...