முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறைந்தப்பட்சத் தேவை ஒரு பிணம்.

மூன்று மாத வயதுடைய ஐந்து குஞ்சுகளுடன் ஒரு தாய்க்கழுகு மனிதப் பார்வைக்கு எட்டாத உயரத்தில் தன் விசாலமான இறக்கையை அகல விரித்து பறந்துகொண்டிருந்தது. தாயானதற்குப்பிறகு தன் குஞ்சுகளுடன் இரை தேடி வலசை செல்வது இதுவே முதன் முறை. ஐந்து குஞ்சுகளில் மூன்றின் கழுத்துகள் வெள்ளைப் பட்டைகளாக இருந்தன. பிணம் தின்னும் கழுகுகளில் வெண் கழுத்து கழுகுகள் ஆண் கழுகுகள். அமெரிக்காவின் தேசியச்சின்னம் அக்கழுகுதான். சூடான் நாட்டினை ஒட்டி மலைகள் சூழ்ந்த காடுகளுக்கிடையில், ஓர் உயர்ந்த மரமொன்றின் உச்சியில் கூடு கட்டி வாழ்ந்து வந்த அக்கழுகு முட்டைகளிட்டு குஞ்சுகள் பொறித்திருந்தது. ஆறு முட்டைகளிருந்து ஐந்து குஞ்சுகள் வெளிவந்திருந்தன. வெளிவந்த நாட்களிலிருந்து மூன்று மாதங்களாக அக்குஞ்சுகளுக்குத் தேவையான உணவுகள், மாமிசத் துண்டுகளைத் தேடிப்பிடித்து, ஊட்டிக்கொண்டிருந்தது அத்தாய்க்கழுகு. அக்கழுகிற்கும் அதன் குஞ்சுகளுக்கும் தேவையான உணவுகள் மனிதப்பிணங்களாக சூடானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறையக் கிடைத்தன. ஆற்றின் விளம்புகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் கேட்பாரற்று பல பிணங்கள் தண்ணீரில் மிதந்தன. அப்பிணங்கள் கழுகுகளுக்கு பெருத்தத் தீனியாக இருந்தன. ஒரு பிணத்தை அதன் கூட்டிற்கு தூக்கி வந்து தாயும் அதன் குஞ்சுகளும் தின்றுக் கொழுத்திருந்தன. பிணங்களை தன் குஞ்சுகளுக்கு கொடுத்து வளர்த்துவந்த அக்கழுகு குஞ்சுகளை அழைத்து கொண்டு தென் மேற்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. சூடான் தன் நிலம், வளம், வாழ்வாதரங்களை கழுகு தேசத்திற்கு கொடுத்ததன் பிறகு அந்நாட்டில் பசியும், பஞ்சமும், பட்டினி மட்டுமே தலைவிரித்திருந்தது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பசி, பட்டினியால் இறந்துகொண்டிருந்தார்கள். அப்படிச் சாகும் குழந்தைகளின் வீட்டை அடையாளம் கண்டு காத்திருந்து ஏதேனும் ஒரு குழந்தையை பிணமாகத் தூக்கி வந்தது. அப்படி ஒருநாள் ஒரு குழந்தைக்காக காத்திரிக்கையில்தான் தென் ஆப்பிரிக்கா புகைப்பட கலைஞர் கெவின் கார்ட்டரின் கேமராவில் சிக்கும்படியானது. வயிறு ஒட்டிப்போய் முதுகு மற்றும் விலா எலும்புகள் தெரிய , நடக்கத் தீராணியற்று, தலையை நிமிர்த்த முடியாமல் தரையோடு தரையாக குனிந்து சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்தக் குழந்தையை இரையாகப் பார்த்தக் கழுகு உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அக்குழந்தையுடன் கூடிய கழுகு புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதற்பக்கத்தில் அலங்கரித்தது. ஐம்பதாயிரம் டாலர் பரிசும் , புலிட்சர் விருதும் பெற்றது. குழந்தையுடன் கூடிய அக்கழுகினைப் படம் பிடித்து உலகின் சிறந்த புகைப்படக் கலைஞர் என அறியப்பட்ட கார்ட்டர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமாக இருந்ததும் அக்கழுகுதான். ‘குழந்தையின் துன்பத்தைப் போக்காமல் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரிசெய்து கொண்டிருக்கும் கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு அவர் ’ என பலரும் விமர்சிக்கப்போய் தானும் அக்கழுகும் ஒன்றுதானோ...! என்கிற குற்றவுணர்வு அவரைக் குடைய ஒரு நாள் இரவு தற்கொலை செய்துகொள்ளும்படியானது. இதெல்லாம் அக்கழுகுவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கும் அதன் இனத்திற்கும் தேவையான உணவு எங்கே கிடைக்கும், எத்தனை காலத்திற்குப் பிறகு கிடைக்கும், எத்தனைக் காலம் வரைக்கும் போன்ற விடயங்கள் மட்டும் அக்கழுகு தெரிந்து வைத்துகொண்டு மூக்கு வியர்க்கும் திசையை நோக்கி அக்கழுகு பறந்து கொண்டிருந்தது. தன் எடையை விடவும் மூன்று மடங்கு எடையைத் தூக்கிச்செல்லுமளவிற்கு வலுவான கால்களைக் கொண்டது. எழுபத்து இரண்டு வகை கழுகு இனங்களில் சக இனத்தை கொன்று தின்னும் அசாத்தியம் பிணம் தின்னும் கழுகுவிற்கு மட்டுமே உண்டு. கழுகின் அலகு வலுவானது. ஒரு பாறையைக் குடைந்தெடுக்கும் அளவிற்கு கூர்மையானது. கழுகின் வயதை பிரதிபலிக்கும் அளவுகோல் அதன் அலகுதான். அலகினை முற்றிலும் இழந்தால் கழுகு இறந்துவிடும். இழந்த அலகு மீண்டும் வளரத் தொடங்கினால் அக்கழுகு பிழைத்துக்கொள்ளும். அலகினை விடவும் அதன் கால்கள் வலுவானவை. அதை விடவும் வலுவானவை அதன் நகங்கள். அவை கத்திகளைப்போல கூர்மையானவை. சத்ரபதி சிவாஜி, படையெடுத்து செல்கையில் எதிராளி மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கழுகின் நகங்கள்தான். சோமாலியாவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை தூக்கிச்சென்று கண்களை மட்டும் கொத்தி விழுங்கிவிட்டு அக்குழந்தையை தன் குஞ்சுகளுக்காக பத்திரப் படுத்தி வைத்திருந்தக் கழுகினை வேட்டையாடப் போய் சோமாலியர்கள் கழுகு தேசத்தால் மிரட்டப்பட்டார்கள். கழுகு அமெரிக்காவின் அடையாளம். போர்க்கருவிகளின் அலங்காரம். ஆகவே கழுகுகளை பிடிக்கவும், கூண்டில் அடைக்கவும், வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டிப்பதால் பிணம் தின்னிக்கழுகுகளின் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல் மலைகள் சூழ்ந்த பகுதிகள், காடுகள் என்பதையெல்லாம் கடந்து இப்பொழுது சமவெளி பக்கம் படையெடுக்கத் தொடங்கி விட்டிருந்தன. இலங்கை உள்நாட்டு போரின் போது வானத்தில் பறந்த போர் விமானங்களை விடவும் இவ்வகை கழுகுகள் அதிகம். போபாலில் நடந்தேறிய சயனைடு கசிவு கோரச்சம்பவத்தின் போது இந்தியாவில் குடியேறியக் கழுகுகள் பேரன் , பேத்திகள் எடுத்து ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வலசைச் சென்றன. அவ்வாறு வலசைச் சென்ற கழுகின் கொள்ளு, எள்ளுப் பேரன், பேத்திகள்தான் இப்பொழுது ஆலவட்டமடிக்கும் தாயும், அதன் குஞ்சுகளும். மனித அரவம் சற்றும் தென்படாத இடங்களில் கூட்டமாக வாழக்கூடிய கழுகுகள் மனிதர்களால் பார்க்க முடியாத உயரத்தில் பறந்துகொண்டிருந்தன. மனிதப்பிணமே அதற்கு பிடித்த உணவு. மனித குடலையும், ஈரலையும் தின்னுகையில் அதற்குள் அத்தனை ஆரவாரம் பீறிட்டு எழும். உயரத்தில் பறந்து கொண்டிருந்த கழுகுகளின் இறக்கைகள் மற்ற கழுகுகளை விடவும் நீள, அகலத்தில் பிரமிப்பைக் கொடுத்தன. ஒரு மனிதன் கால் நீட்டிப் படுக்கும் அளவிற்கு இறக்கையின் நீளமிருந்தது. புறாவின் இறகினைப்போல அடர்த்தியான மயிர்களைக் கொண்ட இறகு கழுகுவுடையது. இரண்டிற்குமான ஒரு வித்தியாசம் புறாவின் இறகு மிருதுவானது. கழுகின் இறகு ஒரு விலங்கின் தோளினை அறுக்குமளவிற்கு அரமிக்கது. எதையும் கொத்திக்கிழிப்பதற்கு உகந்தது அதன் அலகு. கீழ் அலகு தசையைக் குத்திப் பெயர்க்கக் கூடியதாகவும், மேலலகு கொத்திக் கிழிப்பதற்கு உகந்ததாகவும் இருந்தது. அரை கிலோ மாமிசத்தை ஒரே கொத்தில் கொத்தி கிழித்து விழுங்குமளவிற்கு அதன் அலகு குறுகி வளைந்திருந்தது. மின்னல் வேகத்தில் பறக்க அதன் வாலும் இருநூறு கல் தூரம் வேகத்தில் இறங்கி இரையைத் தூக்கிச் செல்லுமளவிற்கு அதன் குதிக்கால்களும் இருந்தன. மீன் , தன் குஞ்சுகளைக் கண்களால் வழிநடத்துவதைப்போல கழுகு அதன் நிழலில் குஞ்சுகளை வழிநடத்திக்கொண்டிருந்தன. அதற்கான இரையை அதுவே தேடிக்கொள்ளும் வரைக்கும் இந்த கண்காணிப்பை நீட்டிக்கக் கூடியது. தாயின் நிழலைக் குஞ்சு அறியும். பாம்பின் கால் பாம்பு அறிவதைப்போல! தாயின் நிழல் தன் மீது விழுமாறு குஞ்சுக்கழுகுகள் பார்த்துகொண்டன. தாய் திரும்புமிடத்தில் நிழல் திரும்பியது. நிழலைப்பார்த்து குஞ்சுகள் திரும்பின. கழுகளின் மொழி இறக்கைகளில் இருந்தன. இறக்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு மொழி இருப்பதை குஞ்சுகள் அறிந்திருந்தன. வலது பக்க இறக்கை அசைந்தால் , இடது இறக்கை வேகமாகத் துடித்தால், வேகமாக அடித்துகொண்டால், உதறினால்.....என ஒவ்வொரு அசைவிற்கும் ஒவ்வொரு கற்பிதங்களைக் குஞ்சுகள் அறிந்து வைத்திருந்தன. குஞ்சுகள் பறந்துகொண்டே பூமியைக் கூர்ந்து கவனித்து வந்தன. அதன் பந்து முனைக் கருவிழிகளில் விழும் பிம்பங்களை தாயிடம் இறக்கை அசைவுகளால் பகிர்ந்துகொண்டன.. ‘ ஒரு குளம் தெரிகிறது....’ ‘ குளத்தில்....?’ ‘ நிறைந்த தண்ணீர் இருக்கிறது’ ‘ அதற்குள்...?’ ‘ மீன்கள் துள்ளிக்குதிப்பது தெரிகிறது’ ‘ மீன்கள் மட்டும்தானா....?’ ‘ கரையில் ஒன்றிரண்டு கொக்குகள் நிற்பது தெரிகிறது’ ‘ வேறு...?’ ‘ குளத்தில் நான்கு கரைகள்..’ ‘ கரைகளில்...?’ ‘ ஒரு கரையில் பெண்கள் குளிக்கிறார்கள்....’ ‘ இன்னொன்றில்....?’ ‘ ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கின்றன...’ ‘ பிறகு...?’ ‘ இன்னொரு கரையில் சிறுவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். மற்றொன்றில் தாமரைகளும், அல்லிகளும் பூத்து குலுங்குகின்றன..’ தாய்க்கழுகு அதன் புத்திசாலி குஞ்சுகளை நினைத்து மகிழ்ந்தது. ஆனந்தத்தில் இறக்கைகளை வேகமாக அடித்துகொண்டன. ‘ வேறு என்னவெல்லாம் தெரிகிறது...?’ ‘ எங்கும் பச்சைமயமாக இருக்கிறது...’ ‘ பச்சையில்....?’ ‘ ஒன்று முளை விடும் பச்சையாகவும் மற்றொன்று அறுவடைக்காலப் பச்சையாகவும் தெரிகின்றது’ தாயும் அதன் குஞ்சுகளும் வட்டமிட்டவாறு வெட்டவெளியை வலம் வந்தன. அதன் கண்கள் கீழ்நோக்கி ஒரு புள்ளியில் குவிந்திருந்தன. . எங்கும் பச்சையும் மஞ்சள் கலந்த நிறப்பிரிகை. தங்கம் முளைத்த நெற்மணிகள். வானுயர்ந்த தென்னை, தேக்கு, பனை மரங்கள். மலை அளவிற்கு பெரிய வைக்கோல் போர். அதன் மீது காக்கைக்குருவிகள். சிறுவர், சிறுமிகள் அதைச்சுற்றி ஓடி ஒழிந்து விளையாடுவது தெரிந்தது. களத்து மேட்டில் பெண்கள் சூழ்ந்திருந்தார்கள். ஒரு தரப்பினர் கதிர்களை அறுக்க , வேறொரு தரப்பினர் நெற்களைத் தூற்ற, அள்ள, அளக்க, சாக்கில் நிரப்ப, வண்டியில் ஏற்ற,...என இருந்தனர். எங்கும் மனிதத் தலைகள். அத்தனைத் தலைகளும் உயரத்தில் பறந்த கழுகுகளுக்கு இரைகளாகவேத் தெரிந்தன. பூமித்தாயின் கன்னத்தில் விழுந்த மச்சமாக உளுந்து குவியல் இருந்தது. அதையொட்டி கத்தரி, வெண்டை, தக்காளி, தட்டை, பாசி பயிறுகள் தெரிந்தன. அறுவடை முடிந்த நிலத்தில் மந்தைகளாக ஆடுகள், மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. மாடுகள் பல இன வகை கொம்புகளைக் கொண்டிருந்தன. அலை கொம்பு. ஆட்டுக்கொம்பு. காடு பார்த்தக்கொம்பு. கிளிக்கொம்பு, குத்துக்கொம்பு, கூடு கொம்பு, கொள்ளி கொம்பு. இதுதவிர அபூர்வமான சுருட்டை, பூ, பொத்தை, மட்டி, மாடக்கொம்புகளும், முன் கொம்பு, விரி கொம்புகளுடன் கூடிய மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு காளை ஒரு பசுவை விரட்டுக்கொண்டிருந்தது. ஒரு ஆடு நான்கு குட்டிகளுக்கு பால் ஊட்டிக்கொண்டிருந்தது. அவை புற்கள் தந்த நிலத்திற்கு விசுவாசமாக சாணியைக் கொடுத்து புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு காளையின் தலையின் காக்கை இருந்தது. இன்னொன்றின் தலையில் கரிச்சான் குருவிகள் இருந்தன. ஒரு பசு வாலைத் தூக்கி மூத்திரம் பெய்தது. ஒரு காளை பசு அரையின் பிளவில் நாசியை வைத்து கிளிர்ச்சி ஊட்டியது. பசு முகத்தில் வெட்கம். வெளியிடும் ‘புஸ்..புஸ்...’ காற்று நாசியைத் தகித்தது. பசு வெட்கத்தால் முறுக்கிண்டு ஓடியது. காளை, ஓடும் பசுவை விடாது விரட்டியது. ஓட, ஓட பசுவிற்கு சுகமாக இருக்கிறது. விரட்டவிரட்ட காளைக்கு பசி எடுக்கிறது. நாவில் சுரக்க வேண்டிய உமிழ்நீர் பசுவின் பின் பக்க அரையில் சுரந்தது. காளை அதற்குள் எழும் தாகத்தை அரையில் தணித்தது. நாசியின் வெதுப்பில் பசுவின் அரைசுரப்பு. இரண்டு கால்களையும் தூக்கி பசுவின் பிட்டத்தில் வைத்தது காளை. பசுவின் மீது அதன் முன்னங்கால்கள் மெல்ல , மெல்ல ஊர்ந்தன. காளையின் உறுமலும் பசுவின் சிணுங்களும் ஒரு புள்ளியில் குவிய , வயிறு நிறைந்த உணர்வு பசுவிற்கு. ஒரு மாதப் பசியை தணித்தச் சுகம் காளைக்கு. தாய்க்கழுகு கேட்டது. ‘ வேறென்ன தெரிகிறது....?’. ‘ நிறையத் தெரிகிறது..’ என்றவாறு குஞ்சுகள் தரையைப் பார்த்தன. சிறுவர், சிறுமிகள் கடலைக்கொல்லைக்குள் திருட்டுத் தனமாக நுழைந்தார்கள்.. சுற்று முற்றும் பார்க்கிறார்கள். மெல்ல உட்காருகிறார்கள். கடலைக்கொடிகளைப் பிடுங்காமல் வேரினைச்சுற்றிய மண்ணைக்கிளறி அதன் வேரிடத்தில் இருக்கும் கடலைகளை ஆய்ந்து அவரவர் கால்ச்சட்டை பைக்குள் நிரப்பிக்கொண்டு புழுதி பறக்க ஓடுகிறார்கள். சோள விதை தோல் உடைந்து முளை விடும் அரவம் ‘டப்...டப்....’எனச் சன்னமாகக் கேட்கின்றன. தென்னைகள் ஒன்றுடன் ஒன்று உரசி கைக்குலுக்கி நலம் விசாரித்துகொள்கின்றன. சவுக்குகள் எப்படியும் வானத்தைத் தொட்டுவிட வேணும் என்கிற உத்வேகத்தில் வானோக்கி வளர்ந்திருக்கின்றன.. ‘ வேறு என்னத் தெரிகிறது....?’ ஒரு பக்கம் உழவர்கள் காளைகள் பூட்டிய ஏரில் ஆழ உழுகின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இயந்திரம் கொண்டு நிலத்தை அகல உழுகிறது. குறுக்கு மறுக்காக வரப்புகள். வரப்புகளைக் கழித்து புதிய மண் வரப்பில் சாத்தப்பட்டிருக்கிறது. பூப்படைந்த பெண்ணின் முகக்களை வரப்பிற்கு. தலைக்குப்புறப் பாய்கிறது தண்ணீர். ஒருவர் கிணற்றில் இரண்டு மாடுகளைப் பூட்டி சாலில் தண்ணீர் இரைத்தபடி இருக்கிறார். ஒரு பக்கம் காவிரியின் கடை மடை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னொரு பக்கம் ஊரணியின் ஓடம். இதுதவிர மின் இயந்திரங்கள் தண்ணீரை வாறி இரைக்கின்றன. லாரிகள் நின்று மூச்சு வாங்கி நெல் மூட்டைகளைத் தன் முதுகில் சுமந்துகொள்கின்றன. இயந்திரங்கள் நெற்கதிர்களை அடித்து வைக்கோல், நெற்கள் எனத் தனித்தனியே பிரிக்கின்றன. நிலங்களைச் சுற்றிலும் மயில், மைனா, குருவிகள். எலி வளை, நண்டு வளை பாம்பு வளையென வயற்காடுகள் முழுவதும் வளைகளாக இருக்கினறன. . மொத்த நெல்லையும் நின்று நிதானித்து உருவி தின்னுகிறது மயில். தானொரு தேசிய பறவை என்கிற அகங்காரம் அதற்கு. ஒரே ஒரு நெல்லை மட்டும் வாயில் கவ்விக்கொண்டு ஓடி ஒழிகிறது அணில். உயரத்தில் பறந்த கழுகுகளுக்கு ஓடும் அணில் தெரிகிறது. அது ஓடும் திசையில் கழுகின் பார்வையும் ஓடுகிறது. உரங்களை மலையைப்போல குவித்து மண்வெட்டியால் கலந்து கூடையில் அள்ளி விட்டெறிகிறார் ஒருவர். இன்னொருவர் மருந்து தெளிக்கிறார். ஊர்கள் இருக்கின்றன. வீடுகள் தெரிகின்றன. தெருக்கள் வரிசையாக இருக்கின்றன. சாலைகள் வளைந்து நெழிந்து செல்கின்றன. சாலைகளில் தானியங்கள் காய்கின்றன. காக்கைக்குருவிகள் போட்டிப்போட்டுக்கொண்டு மேய்கின்றன. ஒரு மூதாட்டி அவற்றை விரட்ட முடியாமல் விரட்டிக்கொண்டிருக்கிறாள். ‘ அம்மா....என் இறக்கை அளவிற்கு பச்சையாக ஒன்று தெரிகிறதே அது என்னவாம்...?’ ஒரு குஞ்சு தாயிடம் கேட்டது. ‘ அதுதான் வாழை’ ‘ அதற்கு அடுத்து என் கால்களைப்போல வளர்ந்திருக்கிறதே அது....?’ ‘ அது தேக்கு’ ‘ என் கண்களைப்போல குமிழ் குமிழாக தெரிவது...?’ ‘ அது கத்தரி’ தாயும் அதன் குஞ்சுகளும் வயல்களில் தெரிவதை ஒவ்வொன்றாக பார்த்துகொண்டு வந்தன. ஓரிடத்தில் அதன் மூக்கு வியர்த்தது. அந்த இடத்தில் தன் இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து வட்டம் கட்டி, தரையைக் கூர்ந்து கவனித்தன. கண்ணுக்கு எட்டியத் தொலைவு பச்சைகளுக்கிடையில் ஓர் புள்ளியில் தார் பாலைவனம் அளவிற்கு வறட்சி தெரிந்தது. புல் , பூண்டுகள் முளைக்காமல் வறட்சித் தட்டியிருந்தது. தாய்க்கழுகும் அதன் குஞ்சுகளும் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு உடம்பை மேலும் குறுக்கி ஏவுகணைகளைப்போல அதை நோக்கி கீழே இறங்கின. கால்களை விசாலமாக நீட்டி, ஆறாயிரம் அடியிலிருந்து மேல் நோக்கி நீண்டிருக்கும் ஆழ்த்துளை குழாயின் மீது உட்கார்ந்தன. இப்போதைக்கு அக்கழுகுகளுக்குத் தேவை ; குறைந்தது ஒரு பிணம்! .

கருத்துகள்

  1. ஒரே பத்தியில் முழுதாய் ஒரு கதை
    படிப்பதற்குக் கடினமாய் இருக்கிறது நண்பரே
    பல சிறு சிறு பத்திகளாக பிரித்துப் பதிவிட்டால்
    படிப்பதற்கு எளிமையாக இருக்கும் என
    எண்ணுகின்றேன் நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...