முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொக்கரக்கோ.....



“ இங்கே நிற்கின்ற நூற்றுக்கணக்கான பேர்களில் யார் முன்னால் செல்வது ?“
“ அவர் ?”
“ அவர் வேண்டாம் ”
“ அப்ப நான் ? ”
“ நீங்களும் வேண்டாம் ”
“ வேறு யார்?”
“ நான் போகிறேன் ”
“ நீங்களா ?”
“ ஆமாம் நானேதான்”
“ சரி போங்கள் ”
“ என்னை தொடர்ந்து எல்லோரும் வாருங்கள்”
“ வருகிறோம். வருகிறோம்”
“ சப்தம் கூடாது ”
“ ஆமாம். கூடாது. கூடாது ”
“ அதோ நாய்கள் !. ஜாக்கிரதை”
“ உஷ்................!”
“ நாய்களின் கண்களில் பட்டுவிட்டால் நம் கதி அதோகதிதான் ”
“ வேகமாக நடங்கள். யாரும் பார்த்துவிடப்போகிறார்கள்“
“வரப்பில் பார்த்து நடந்து வாருங்கள். ஈரத்தில் கால்களை வைத்துவிடாதீர்கள்“
“ விளைநிலத்திற்குள் இறங்கி விடாதீர்கள். ”
“ இது விளைநிலம் அல்ல. விலை நிலம் ”
“ அப்படியானால் இந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு போகலாமே?“
“ வேண்டாம். இதைவிட நல்ல இடங்களெல்லாம் இருக்கின்றன ”
“ நல்ல இடங்கள் என்றால்?”
“ ஆற்றுப்படுகை, கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், மலை , காடு ”
“ காடு என்றால் இடுகாட்டையும், சுடுகாட்டையும் சொல்கிறீர்களோ ?”
“ தலைவா.......இவருக்கு வெளியுலமே தெரியவில்லை ”
“ ஹக்.ஹக்.ஹக்..................”
“ காடு என்றால் வனம்.  சந்தனம், சுந்தரம் , தேக்கு மரங்கள் விளைந்து நிற்கும் நிலம் ”
“ அப்படி சொல்லுங்கள் ”
“ நாம் வந்து போகும் சுவடுகள் யாருக்கும் தெரியக்கூடாது”
“ அப்படியே தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுத்திட கூடாது”
“ அப்படியே காட்டிக்கொடுத்தாலும் நான்தான் என ஒத்துக்கொள்ளக்கூடாது”
“ ஆமாமாம் . எதற்கும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும் ”
“ அதோ பாருங்கள்!  யாரோ ஒருவர் வருகிறார் ”
“ நல்லவேளை அவரிடம் மாட்டிக்கொள்ளத்தெரிந்தோம்”
“  வேறு பாதையில் சென்றுவிடுவோம் ”
“ நான் அதைத்தான் சொல்ல நினைத்தேன்”
“ அதோ ஒரு வரப்பு தெரிகிறது. அதில் போங்கள்”
“ அதில் போய் ?”
“ கிழக்கு புறமாகச்சென்று அப்படியே மேற்கு பக்கம் திரும்பி  வடக்கு போங்கள்”
“  அந்த பாதையில்தான் நான் போய்கொண்டிருக்கிறேன். நீங்கள் சத்தம் போடாமல் என் பின்னால் வாருங்கள்“
“ ஒரு நிமிடம் ”
“ என்னது ? ”
“ அதோ ஒரு கொட்டகை ! “
“ ஆமாம் தெரிகிறது. அதற்கு என்னவாம்”
“கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு செல்லலாம்”
“ செல்லலாம்தான். அதற்குள் விடிந்து விடுமே“
“ மணி எத்தனை ?“
“ ஒரு மணி ”
“ஒரு மணியாகி விட்டதா? மணியானதே தெரியவில்லை. “
“ அப்படியென்றால் இங்கே நிற்க வேண்டாம். போய் விடுவோம்”
“ எவ்வளவு நேரம்தான் நடந்துக்கொண்டே இருப்பதாம்? “
“ இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் எனக்கு வேண்டியப்பட்டவரின் கல்குவாரி வரும் . அங்கே இளைப்பாறிக்கொள்ளலாம்“
“ நான் சொல்வதைக்கேளுங்கள். என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது. கொஞ்சநேரம் இந்த கொட்டகையில் ...............................”
“ இதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இவரை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று”
“ புதிதாக வந்தவர்.  அதான்  அவருக்கு  கால்கள் கடுக்கின்றன.  கொஞ்ச நேரம் அவருக்காக  இந்த கொட்டகையில் நின்றுவிட்டுதான் செல்வோமே“
“ சரி.சரி வாருங்கள்“
“ மெதுவாக , மெதுவாக “
“ யார் யாரோ படுத்திருக்கிறார்கள். அவர்களை மிதித்து எழுப்பிவிடாதீர்கள்”
“ ஒருவர் மீது ஒருவராக எத்தனைப்பேர் படுத்திருக்கிறார்கள். ! பார்க்கவே வியப்பாக இருக்கிறது“
“ ஆமாம். வியப்பாகத்தான் இருக்கின்றது ”
“ கொட்டகைக்குள் யாரோ ஒருவர் மட்டும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு  உட்கார்ந்திருக்கிறார் . உங்களுக்கு  தெரிகிறதா?“
“ ஆம் தெரிகிறது ! அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டாம்”
“ அவர் யாரென்று பார்க்க வேண்டாமா?  நீங்கள் இருங்கள். நான் கேட்கிறேன்”
“  யாரது ? ”
“ -----------------------”
“ ஒரு பதிலும் வரக்காணோமே . யாரது ?“
“ நீங்கள் யார் ? “
“ நான் கேட்ட கேள்வியைதான்நீகேட்டிருக்கிறாய்? ”
“ இல்லை. இல்லை. நான் கேட்க நினைத்த கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் ”
“நீ யாரென்று சொல். பிறகு நாங்கள் யாரென்று சொல்கிறோம்”
“நான் இந்த இடத்தின்சொந்தக்காரன். இந்த இடம் எனது பெயரில் இருக்கிறது“
“அப்படியானால் உங்களுக்கு  வணக்கம் . வணக்கம் “
“  வணக்கம். இப்படி வாருங்கள். உட்காருங்கள் ”
“ பிறகென்னஏன் நிற்கிறோம்? வாருங்கள் உட்காருவோம் ”
“  இந்த இடத்தை விற்கிற யோசனை எதுவும் இருக்குங்களா?“
“  ஏன் வாங்கிற மாதிரி இருக்கீங்களா?“
“இடம் பத்து வேலி அளவிற்கு இருந்தால் வாங்கிக்கொள்கிறோம் . ஒரு காலேஜ் , மருத்துவமனை கட்டிவிடலாம் . அந்த அளவிற்கு இருக்குமா ?“
“ ஹீ ஹீ ஹீ  “
“ ஏன் சிரிக்கிறீர்கள் ?”
“ இது வெறும் எட்டடி நிலம்தாங்களே . அதுவும் புறம்போக்கு இடத்தை வளைத்து பட்டா  மாற்றி வைத்திருக்கிறேன் “
“ அப்படியானால்  இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இதற்கும் பக்கத்தில் கல்குவாரி, நிலக்கரி சுரங்கம் , ஆற்றுப்படுகை எதுவும் இருக்குங்களா?“
“ ஏன் வாங்கப்போறீங்களா ? ”
“ முடிந்தால் வாங்குவோம்.“
“ முடியலை என்றால் ?”
“ சுரண்டுவோம் ”
“ காட்டுகிறேன். எனக்கு எவ்வளவு தருவீர்கள் ? “
“ லாபத்தில் பத்தில் ஒரு பங்கு  ”
“ சரி . அப்படியானால் என் கூட வாருங்கள்.  ”
அமாவாசை வானம். முகத்தில் அறையும் இருட்டு. நடு ராத்திரி. மரங்கள் அசையவில்லை.கிளைகள் , இலைகளில் நித்திரை சுருக்கங்கள். ஊர் நிசப்தமயம். வடக்கு திசையை நோக்கி , அகோரப் பற்களை காட்டியபடி “அவ், அவ் “ என எகிறும் நாய்கள். தூரத்தில் நரிகளின் ஊழையிடும் சத்தம் . ஆந்தை எழுப்பும் வி்க்கல் ஒலி வேறு.
“ அதோ பாருங்கள். ஆயிரக்கணக்கான பேர் நிம்மதியாக தூங்குகிறார்கள் ”
“ சோம்பேறிகள் ”
“ இதோ பாருங்கள் . நூற்றுக்கணக்கான பேர் ஆடை விலகியது கூட தெரியாமல் படுத்திருக்கிறார்கள் ”
“ அப்பாவிகள் ”
“ அய்யய்யோ ! ”
“ என்னது ? ”
“ வெள்ளி முளைத்து விட்டது  ”
“ அப்படியானால் பொழுது விடியப்போகிறதா?”
“ ஆமாமாம் ”
“ எனக்கு ஒரு சந்தேகம் ”
“ எதுவாக இருந்தாலும் வேகமாக கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறோம் ”
“ இத்தனைப்பேர் நிம்மதியாக உறங்கிக்கிடக்கையில் நாம் மட்டும் ஏன் இப்படி அலைந்து திரிய வேண்டும் ?”
“ காரணம் இருக்கிறது ”
“ என்ன காரணமாம் ?”
“ அவர்கள்  அப்பாவி மக்கள் ”
“ பிறகு  நாம் ? “
“ முன்னாள் மந்திரிகள் ”
“ என்ன  சத்தத்தையும் காணோம் ? ”
“ .....................”
கொக்கரைக்கோ ...............
காலை புலர்ந்து விட்டது. பேய்கள் பகலில் பேசிக்கொள்வதில்லை.

அண்டனூர் சுரா
மண்டேலா நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை - மாவட்டம்
613301

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...