முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கட்டுரை – அஞ்சல் துறை வாரம் ( 9.10.2013 – 15.10.2013 )          
                         அஞ்சல் துறையின் சிவப்பு முகம்
                                                                                       அண்டனூர் சுரா           
                           ஒரு சிறுவன்  புதிரொன்று விடுத்தான் . “ நூறு  லெட்டர்ஸ் கொண்ட  வார்த்தை அது. என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?” எனக்குத்தெரியவில்லை . அவன் சொன்னான் “ போஸ்ட் பாக்ஸ் ”! .                                                                                             
                        உலகம்  பழைய காலத்தை நோக்கி நடைப்போடுகிறது. மன்னராட்சி காலத்தில் ஒரு மன்னர் மற்றொரு மன்னருக்கு கடிதம் எழுதுவார். அதற்கு அந்த மன்னர் பதில் கடிதம் எழுதுவார். அன்றைக்கு பொதுமக்களுக்கு கடிதம் எழுத உரிமை மறுக்கப்பட்டிருந்தது.  இன்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். பதிலுக்கு பிரதமர் முதலமைச்சருக்கு  கடிதம் எழுதுகிறார். பொதுமக்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை நவீன தகவல் தொழிற்நுட்பம் மறக்கடித்து விட்டது. ஆம்! உலகம் உருண்டை தான்!
                         இந்தியாவை ஆண்ட  பட்டாணிய மன்னர் அலாவுதீன் கில்ஜி காலத்தில் இராணுவ ரகசியங்களை  கொண்டு வந்து சேர்ப்பதற்க்கென்று சில நபர்கள்  நியமிக்கப்பட்டார்கள் .  அவர்களில் சிலர் நேர்முக ஒற்றர் என்றும் , சிலர் மறைமுக ஒற்றர் என்றும் அழைக்கப்பட்டார்கள். அந்த  நேர்முக ஒற்றர்கள்தான் இந்தியாவின் முதல் தபால்காரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
                      ஷெர்ஷா (1541-45) காலத்தில் அவர்கள் “ தூதுவர் ” என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சேகரித்த தகவல்களை ஒரு இடத்தில் சேமித்தார்கள். அந்த இடம் தகவல் கிடங்கு என  அழைக்கப்பட்டது .  அக்பர் காலத்தில் ( 1556-1605 ) அந்த இடம்  சற்று முன்னேற்றம் கண்டு  தகவல் பரிமாற்றம் அளவிற்கு வளர்ந்தது. இன்றைய தபால் துறையின் முன்னோடி என்று அக்பரை சொல்லாம். தபால் துறையை  அடித்தட்டு மக்கள் வரைக்கும் கொண்டுப்போய் சேர்த்தவர்   ஆங்கிலேயர் டல்ஹௌசி பிரபு.   இந்திய தலைநகரத்தையும்  கிராமங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவது அஞ்சல்துறை . இந்தியாவில் செயல்படும் மத்திய  துறைகளில் மிகவும் பழமையான துறை அஞ்சல்துறைதான் . அதுமட்டுமல்ல உலகில் மிகச்சிறிய துண்டு காகிதத்திற்கு அதிக மதிப்பு  இருக்கிறது என்றால் அது அஞ்சல் வில்லைக்குத்தான்.
                        1965  ஜனவரி 26 . போயிங் - 707 என்கிற  விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து லண்டன் நகரத்தில் வந்து இறங்கியது. அந்த விமானத்தை பார்க்கவும் படம் பிடிக்கவும்  உலக பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்றார்கள். அந்த விமானத்திலிருந்து இறங்கினார் திரு.ஃபின்பர் கென்னி எனும் இங்கிலாந்து நாட்டுக்காரர் . அவர் பத்திரிக்கையாளர்கள் முன் தோன்றி ஒரு சென்ட் அஞ்சல் தலையைக் காட்டி “ இதை 2,00,000 பவுன்ட் மதிப்பீட்டில் இன்ஷியூர் செய்கிறேன்“  அறிவித்தார். மேலும்  “ இங்கிலாந்து நாட்டில்  நடைபெறவிருக்கிற  ஸ்டான்லி கிப்பன்ஸ் கேடலாக் நூற்றாண்டு விழாவில் இந்த அஞ்சல் தலைதான் கதாநாயகன் “ என்றும் அறிவித்தார்.  ஐரோப்பிய நாடுகளில் அந்த செய்தி  மறுநாள் தலைப்புச்செய்தியானது. அந்த அஞ்சல் தலைக்கு அப்படி என்ன சிறப்பு? . உலகின் முதல் அஞ்சல் தலை அது.
                          உலகில்  முதல் அஞ்சல் தலையை வெளியிட்ட நாடு பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய நாடான கியானா. “ நாம் கொடுக்கிறோம் , பதிலுக்கு  நாம் பெறுகிறோம்“ எனும் அதிகாரப்பூர்வமான வாசகத்துடன் அந்த  தபால்தலையை அந்த நாடு வெளியிட்டது.  அந்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டைச்  சரியாக கணிக்க முடியவில்லை  .  அந்த அஞ்சல்தலை திருடுப்போய்  பல ஆண்டுகளுக்கு பிறகு 1856 ஆம் ஆண்டு ஒரு நபர் அதை வெறும் 6 ஷில்லிங் விலைக்கு ஒருவரிடம் விற்றிருக்கிறார். பிறகு அது பல பேரிடம் கை மாறி  கடைசியாக ஒரு ஆஸ்திரேலியர் கைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அது நியுயார்க் நகரத்தில் வசதி படைத்த ஒருவர்  வீட்டில் அலங்கரிப்பட்ட கண்ணாடியில் காட்சிப்பொருளாக இருந்தது. அதை உளவாளி மூலம் கண்டறிந்தவர் கிப்பன்ஸ் (  உலகின் முதன்முதலில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ). அதை பெரிய விலைக்கொடுத்து மீட்டு வந்தவர் ஃபி்ன்பர் கென்னி . அந்த அஞ்சல் தலை  கறுப்பு வெள்ளையில் அச்சடிக்கப்பட்ட  எண்முகம் வடிவம் கொண்டதாக இருக்கிறது
                      உலகில் மக்களுக்கான முதல்  அஞ்சல் தலை எனக் கொண்டாடப்படுவது பென்னி பிளேக்  என அழைக்கப்படும் பிரிட்டிஷ்  நாட்டு அஞ்சல்தலையாகும். 1840 மே 6 அன்று  அந்த தபால் தலையை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது. அதற்கு அடுத்ததாக அஞ்சல்தலையை வெளியிட்ட நாடு பிரேசில்.
                         1688 ஆம் ஆண்டு வாக்கில்   கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது. 1766  ஆண்டு ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்ட “ இராபர்ட் கிளேவ் ” தபால் முறையை ஒழுங்குப்படுத்தினார். அவரது நிர்வாகத்தின் கீழ் முதல் தபால் போக்குவரத்து    சென்னைக்கும் , மும்பைக்கும்  இடையே  நடைப்பெற்றது. 1774 ஆண்டிற்கு பிறகு தபால் துறை  பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது . “ 100 மைல் தூரம் வரைக்கும்  2 அணா . தபாலை  உரியவரிடம் கொண்டுப்போய் சேர்க்கப்படும் “ என்கிற உறுதிமொழியுடன் மக்களுக்கான அஞ்சல் துறை செயல்படத்தொடங்கியது. அத்திட்டத்தை  உறுதிப்படுத்தும் பொருட்டு   1837 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இயற்றப்பட காரணமாக இருந்தவர் டல்ஹௌசி பிரபு அவர்கள். அந்தச்சட்டம்தான்  இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.  இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அஞ்சல் தலை என்பது  கிழக்கிந்திய கம்பெனியின் சின்னமான அகன்ற அம்பு .
                        இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் அஞ்சல் துறையின் பங்களிப்பு என்பது   அளப்பரியது. தென்னாப்பாரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்துச் சேர்த்தது  அஞ்சல் துறைதான்.   காந்திஜீ உடன் ஜின்னா , படேல், இராஜேந்திர பிரசாத், நேரு , பெரியார், இராஜாஜீ ,........... போன்றவர்களை கை கோர்க்க வைத்ததும் அஞ்சல்துறைதான்.
                        பிரிட்டிஷ் அரசு நினைத்திருந்தால் அஞ்சல் துறையின் வாயிலாக காந்தியின் தலைமையிலான  சுதந்திரப் போராட்டத்தை முற்றிலுமாக முடக்கியிருக்க முடியும். ஆனால் மடித்து ஒட்டப்பட்ட பிறரது  கடிதங்களை பிரித்துப்படிக்கக்கூடாது என்கிற வாய்மொழி உத்தரவை கடைசி வரை  ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மீறவில்லை. அதனால்தான்  இன்று வரை கடிதத்தின் கற்பு போற்றப்பட்டு வருகிறது.
                        ஜாலியன் வாலாபாக் படுகொலை  சம்பவம் நடந்தேறியப்பிறகு பிரிட்டீஸ் வைஸ்ராய் அவர்களுக்கு  காந்தியடிகள்  எழுதிய  கடிதம்   இந்திய சுதந்திரப்போராட்டத்தில்  முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது .  அந்தக்கடிதத்தை இங்கிலாந்து அரசு தொடர்ந்து  பாதுகாத்து வருகிறது.   பாகிஸ்தானிலிருந்து முகமது அலி ஜின்னா, நேரு அவர்களுக்கு  எழுதிய ஒரு கடிதத்தை இந்திய அரசு பொக்கிஷமாக கருதி வருகிறது. “ என் வாழ்நாட்களில் நான் செய்த பெரிய தவறு , இந்திய தேசத்திலிருந்து பாகிஸ்தானை பிரித்ததுதான் . அதற்காக இப்போது நான் வருந்துகிறேன் “ என்கிற கடிதம்தான் அது.
                 1971 டிசம்பர் 3 ஆம் தேதி  இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென போர் தொடுக்க அதற்கு ஆதரவாக அமெரிக்கா  பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்ப , அப்பொழுது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ரஷ்யா பேரரசுக்கு எழுதிய அவசரக்கடிதம் அமெரிக்கா போரிலிருந்து  பின்வாங்கவும்  இந்தியா அப்போரில் வெற்றிப்பெற்று சுயமரியாதையை  உலகளவில் நிலைநிறுத்தவும் முடிந்தது.
                     2000 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல்நாள் குஜராத் புஜ் நகரத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பூகம்பத்தில் இரண்டு கைகளையும் இழந்த ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி கால்களால் ஒரு ஓவியம் வரைந்து அதை  அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தாள். இந்தியாவின் அழைப்பினை ஏற்று  அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த பில்கிளிண்டன் அந்தக் கடிதத்துடன் இந்த சிறுமியை சந்தித்து அவளுக்கு ஆறுதல் கூறினார்.
                    கல்கத்தா நகரத்திலிருந்து ஒரு கல்லூரி மாணவி பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கும் பொருட்டு ஒரு கடிதம் எழுதினாள். தான் எதிர்காலத்தில் மேயர்  தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் ஒருவேளை நான் கல்கத்தாவின் மேயரானால் நகர முழுமைக்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச திரைப்பட சுவரொட்டிகளை  கிழித்தெறிய அவசரச்சட்டம் கொண்டு வருவேன் என்றும் எழுதினாள். அந்தக்கடிதம் பற்றி மேற்கு வங்கம் அரசுடன் பேசிய இந்திராகாந்தி  கல்கத்தா முழுமைக்கும் ஆபாச சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க கோரி அவசர சட்டம் இயற்ற நிர்ப்பந்தித்தார்.
                 நாடு விடுதலை அடையும் பொழுது இந்தியாவில் மொத்தம் 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் 552 சமஸ்தானங்களை படேல் அவர்கள் கடிதத்தின் வாயிலாக இணைய வைத்தார் . காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் உடனடியாக இணைய காரணம் ஹரிசிங் என்கிற மன்னன் வல்லபாய் படேல் அவர்களுக்கு எழுதிய அவசர கடிதம்தான்.
                  உலக நாடுகளில்  தபால் வில்லைகளில் அதிகமாக இடம்பெற்றத் தலைவர் மகாத்மா காந்தி.   தபாலை முதலில் விமானத்தில் அனுப்பி  புரட்சிச் செய்த  நாடு நம் இந்தியாதான் . 1911 பிப்ரவரி – 18 அன்று  6500 கடிதங்களுடன் அலகாபாத்திலிருந்து   நைனிடால்  நோக்கிச் சென்றது.   ஏர் மெயில் என்கிற  தபால் வில்லையை வெளியிட்ட முதல் நாடு, அட்ஹிஜிவ் ( adhesive ) வில்லை என அழைக்கப்படக்கூடிய   பின்புறம் பசையுடன் கூடிய  வில்லையை வெளியிட்ட நாடு என அஞ்சல் துறையில் பல்வேறு சாதனைகளை இந்தியா செய்துள்ளது.
                      இன்று “ எனது அஞ்சல் தலை “ என்று  ஒரு  புதுத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது.  இதன்படி காந்தி , அம்பேட்கர், அன்னை தெரஸா, அண்ணா, நேரு ............... இடம்பெற்ற வரிசையில்  சராசரி இந்தியக்குடிமகன்களின் முகம் பதித்த  அஞ்சல்தலையை வெளியிடும் திட்டம் அது .  உத்திரப்பிரதேசம் , மகாராஷ்டிரா , டெல்லி மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட  இத்திட்டம் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுகிறது.  அத்தகைய சிறப்புமிக்க இந்திய அஞ்சல்துறை  வருமானத்தில் குன்றி , தற்காலிக  ஊழியர்களைக்கொண்டு தத்தளிப்பதை  ஒரு சராசரி இந்தியனால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை . கணினி , கைப்பேசி போன்ற தொழ்நுட்ப வரவுகள் கடிதம் எழுதும் பழகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடடது.
                       தபால் பெட்டி சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டிருக்க காரணம் என்ன? என்கிற கேள்விக்கு பெரும்பாலோர் சொல்கிற பதில்  மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் சிவப்பு நிறத்திற்கான அலைநீளம் அதிகம். ஆனால் இதற்கு மற்றொரு காரணம் ஒன்றுண்டு . தபால் துறை “ நிர்வாகத்தின் இதயம் “ அன்றைய ஆட்சியாளர்கள் கருதினார்கள். இந்தியாவின் மிகப்பழமையான துறை என அடையாளப்படுத்தக்கூடிய அஞ்சல்துறையின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. வறுமையின் நிறம் சிவப்பு  என்பது சான்றோர் வாக்கு.  அதனால்தான்  அஞ்சல் பெட்டிகளும் அஞ்சலகங்களும் சிவப்பு நிறத்தில்  காட்சியளிக்கிறதோ! 
                             ஒருவர் சொன்னார் “ எனது தகப்பனார் கடிதம் கொடுத்துதான் பலருக்கு அரசாங்க உத்யோகம் கிடைத்திருக்கிறது.” அதற்கு மற்றொருவர்  “ உன் தகப்பனார் மந்திரியா? ” “ இல்லை  தபால்காரர் ”.
                                                                                                                அண்டனூர் சுரா ( எழுத்தாளர் )
                                                                                    மண்டேலா நகர்
                                                                                    கந்தர்வகோட்டை
                                                                                    புதுக்கோட்டை மாவட்டம்
                                                                                                            613301

                                                            தொடர்புக்கு 958565 - 7108

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...