முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருதாணிக் கவிதைகள் - சின்னவள்

என் வீட்டில் பெரியவள் , சின்னவள் என்று இருவர் இல்லை. மீரா.செல்வக்குமாரின் ' சின்னவள்  ' என்கிற கவிதைத் தொகுப்பை வாசித்ததும் என் மனைவியை பெரியவளாக்கி என் மகளை சின்னவளாக்கிக்கொண்டேன்.
சிப்பியின் வாயிற்குள் விழும் மழைத்துளி முத்தாகிவிடுவதைப் போல இந்நூலினை வாசிக்கையில் என்னையும் அறியாமல் என் மனைவியும்  மகளும் அவ்வாறு ஆகிவிட்டிருந்தார்கள்.

இந்நூல் கவிஞரின் முதல் நூல். முதல் நூலுக்குரிய  தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. நூலில் அணிந்துரை என்கிற அணிகலன்  இல்லாமல் இருக்கிறது. சிலருக்கு அணிகலன்  இல்லாத  கழுத்துதான்  அழகாக இருக்கும். அந்த வகையில் இந்நூலிற்கு அணிந்துரை என்கிற அணிகலன் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் என்னுரை இல்லாத தொகுப்பு என்பது திருகாணி இல்லாத தோடு இல்லையா! இந்தச் சுட்டிக்காட்டலை கவிஞர் ஏற்க மறுக்கக்கூடும். ஒரு வேளை மறுத்தால் சின்னவளிடம் திருத்தொண்டனாக அடிப்பணிவதைத்தவிர வேறு வழித் தெரியவில்லை எனக்கு.

சின்னவள் கவிதைகளை வாசிக்கையில் பெரியவள்களுக்கு பொறாமை வரவேச் செய்யும். அப்படியான ஈரம் கவிதைகளில். ஒவ்வொரு கவிதையும் மருதாணியைப்போல மனதில் ஒட்டிக்கொள்கிறது.

உயிராடை என்றொரு கவிதை.

கால்ச் சட்டைகள்
எதுவும்
மிஞ்சுவதில்லை
எனக்கு...

மேல்ச் சட்டைகள் சிலவும்
அபகரிக்கப்பட்டிருக்கிறது
சின்னவளால்...

நேற்றைய
ஒரு வெளியூர்
பயணத்தின் இடையே
என்ன உடை
வேண்டுமென்றேன் ...

எனக்கொன்றும்
வேண்டாம்....
நல்லதாய்
உனக்கு
எடுத்துக்கொள்
என்கிறாள்.

இக்கவிதையை வாசிக்கையில் தாத்தா கால்ச்சட்டையை உடுத்திக்கொண்டு பள்ளிச்சென்ற நினைவு எனக்குள் தொட்டில் ஆட்டியது. ஏதேனும் புதுச்சட்டை எடுத்தாயா..எனக்கேட்கும் என் அப்பா நான் 'ஆம் ' என்றதும்  என் பழைய சட்டையில்  ஒன்றை எடுத்துச்செல்லும் நிஜம்; மனதிற்குள் பசபசத்தது. கவிஞர் சின்னவளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் ஆடை உயிராடை. அதே ஆடை வாசகனுக்கும் எனக்கும்  உறவு ஆடையாகிறது.

இன்னொரு கவிதை மதிப்'பெண்'ணை பெண்ணாக உருவகப்படுத்தி மதிப்பெண்கள் பாடாய் படுத்தும் பாட்டை பாடி நிற்கிறது.

சின்னவள்
ஒருபோதும் காட்டியதில்லை
மதிப்பெண் பட்டியலை

என்ன பிரிவென்பதும்
தெரியாதெனக்கு

அவள் அம்மாவினால்
அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்

மெல்லச் சொல்லிவிட்டுப்
போகிறேன்

இனி என்னிடம் வா...
எத்தனை கையெழுத்து வேண்டும்..?

  இக்கவிதை கவிஞரை அடையாளப்படுத்தக்கூடிய கவிதையாக இருக்கிறது.


அப்பூதி அடிகள் குறித்து ஒரு கவிதை மெக்காலே கல்விமுறையினூடே மனனக்கல்வியை விமர்சிப்பதாக இருக்கிறது. அதன்வழியே அவரது  கரங்கள் சின்னவளிடம்  திருத்தொண்டனாகிறது.

 அப்பூதிகளிடம் கவிஞர் முரண்பட்டு நிற்கிறார். ஆனாலும் தொகுப்பின் வழியே  கவிஞரை அப்பூதி அடிகளாகவே பார்க்கத்தோன்றுகிறது. இருவருக்கான ஒற்றை  முரண் அப்பூதி அடிகள் தான் பெற்ற,  பார்த்த  , பயன்படுத்தும் அத்தனையையும் திருநாவுக்கரசராகப் பாவித்தார். ஆனால் கவிஞர் சின்னவளாகப் பார்க்கிறார்.

சின்னவள் கவிஞரின் முதல் குழந்தை . வாசகர்களின் இன்னொரு  தாய்.
   




.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...