முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கலைச்செல்வி -  நெனப்பு
 இன்றைய சிறுகதை ஊடகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக கால் ஊன்றிருக்கும் எழுத்தாளர் இவர். இவர் பெண்பால் எழுத்தாளர்கள் பெண்ணிய வாழ்வியல் கூறுகளை மட்டுமே ஆழ , அகலத்துடன் எழுதுவார்கள் என்கிற சூத்திரப் பின்னலை கத்தரிக்கும் படியான எழுத்து இவருடையது. எல்லாருக்குள்ளும் இருக்கும் பசியைப் போல எல்லாருக்குமான எழுத்து இவருடையது. மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உணர்வுகளையும் இவரது கதைகள் உரக்கப் பேசக்கூடியது. இவரது சமீப சிறுகதைத் தொகுப்பு ‘ இரவு’. அதிலொரு கதை நெனப்பு.
 அண்ணன் தங்கை இருவருக்கிடையில் படரும் பாசம், இடையில் மெல்லிய விரிசல், இருவரின் தரப்பிலும் ஆழப்படியும் ஏக்கம், ஏதேனும் ஒரு தருணத்தில் இருவரும் ஒன்று சேர மாட்டோமா என்கிற ஏக்கத்துடன் இக்கதை தன் பரப்பை விரித்துச்செல்லும். இக்கதையை வாசிக்கையில் அவரவர் உடன்பிறப்புகள் ஒரு கணம் நினைவிற்கு வந்து ஆழ்மனதை தரைத்தட்டவே செய்யும்.
 இக்கதையை வாசிக்கையில் எனக்கு கிழக்குச்சீமை திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு பாடல்வரி நினைவிற்கு வந்தது. ‘ அணில் வால் மீசைக்கொண்ட அண்ணன் உன்னை விட்டு ; புலி வால் மீசைக்கொண்ட புருசனோட போய் வரவா....’ என்கிற வரிதான் அது.
 இக்கதையின் கருவும் ஏறக்குறைய அதேதான். அண்ணன் இலகுவானவராக இருக்கிறார். புருசன் வழக்கம் போல மீசை முறுக்கி. அவளது பிறந்த வீட்டில் குடும்ப நிகழ்வில் பந்தி நடைபெறுகிறது. ‘ விருந்துன்னா விருந்தாடிவளுக்கு கொண்டாட்டம்தேன்....’ என அண்ணியார் சொல்லிவிடுகிறார். இச்செய்தி அவரது காதில் விழுந்து விட துண்டை உதறி தோளில் கிடத்திக்கொண்டு கிளம்பி விடுகிறார். ஆண்களுக்கு கோபம் வரும் நேரமே ‘ சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தானே...’ இதற்கு மேல் இங்கு இருந்து விருந்து சாப்பிடுவது மரியாதை இல்லையென மகளை அழைத்துகொண்டு மனைவியிடம் ‘ வாரதுன்னா வா....ணொண்ணந்தேன் வேணுமின்னா அங்கிட்டு இருந்துக்க....’ எனக் கிளம்பி விடுகிறார்.
 மனைவி புருசனுடன் ஓடி வருகிறாள். மனைவி மரகதம். அண்ணன் துரைராசு. புருசன் சின்னய்யா. இவர்களைச் சுற்றும் சிலந்தி வலைச்சுற்றும் இக்கதை ஒரு புள்ளியில் குடும்பம் இணைந்து சுபம் பெறுகிறது.
 இக்கதையின் சிறப்பு பெண் அவஸ்தைகளை சொல்லிருக்கும் இடங்கள்தான். இத்தகைய கதைகளில் பெண் வலிகளைச் சொல்கையில் செயற்கைத்தனம்
தலைத்தூக்கச்செய்யும். ஆனால் இவர் பெண் வலியுடன் அண்ணனின் நகர்வை இடம்பெறச் செய்து கதைக்கு உயிரூட்டிருக்கிறார். எழுத்தின் உயிர் அதை வாசிக்கும் ஆண்களையும் உணர வைத்துவிடுகிறது.
 மரகதத்துக்கு மாதாந்திர ஒதுக்கம். சற்று அதிகமாகவே வலி தரும் விஷயம். ‘ பொட்டப்புள்ள இதுக்கலெ்லாம் ஆ...ஊன்னு கெடந்தா நாளக்கு பெரசவ வலிய எப்படி பொறுப்ப...?’  என அவள் அம்மா கண்டிக்கும் இடமும்
 ‘ இந்தாடீ....கக்கூசுக்கு போய்ட்டு தண்ணீ ஊத்தாமயே வந்துட்டீயா....?’  ‘ எங்கிட்ட சொல்லி தொலைச்சிருந்தா நானாது ஊத்தி வுட்டுருப்பன்ல்ல...ஒங்கண்ணங்காரன் கக்கூசுக்கு போனவன் இதென்னாமா ஒரே ரத்தமா கெடக்குன்னு பதறிக்கிட்டு ஒடியாந்தான்....என்னான்னு சொல்ல சொல்ற...?’ என அம்மா கிசுகிசுப்பும் கதையின் ஓட்டத்தில் மையம் கொண்டு அழுத்தம் கொடுக்கின்றன. இக்கதையின் மைய கருவோட்டம் இதுதான்.
 அண்ணி - நாத்தனார் உறவு முறை புனிதமானது. பல நாத்தனார்களுக்கு அக்கொடுப்பினை கிடைப்பதே இல்லை. ஆனால் இக்கதையில் இருவருக்குமிடையேயான பந்தம் பசபசக்கிறது. ஏக்கத்தைத் திணிக்கிறது.
 பொதுவாக பெண் எழுத்தாளர்கள் தன் வலியை மட்டுமே எழுதிச்செல்வார்கள் என்கிற பாதி உண்மைக்கலந்த நிதர்சனத்தை அவர் முதல் தொகுப்பிலேயே கடந்துவிட்டாலும் சமீப இவரது எழுத்துகள் யாவும் உயிரின் வலிகளைப் பேசுவதாகவும் உணர வைப்பதாகவும் இருந்து வருகிறது. கலைச்செல்வி இளம் எழுத்தாளர்கள் வரம்பிற்குள் இவர் வயது இடம் பெறாது என்றாலும் எழுதத் தொடங்கியக் காலத்தைக் கணக்கிடுகையில் இவரது எழுத்து கல்லூரி வயதொத்த இளமையானது. அதே நேரம் தாய்மைக்கொள்ளும் முதிர்ச்சியானது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...