ஜுனாகத்நகரம் துக்கத்தினாலான முழுகைச்சட்டையை அணிந்திருந்தது . மக்கள் கண்களில் அரபிக்கடல் . கோபமும் ஏமாற்றமும் கலந்த விரக்தி . அத்தனைப்பேரும்கண்களை மூடி தலையைக் கீழே தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தார்கள் . முகத்தில் முறுக்குண்டிருந்தது சோகம் . மீளமுடியாத் துக்கம் . ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லை . ஜுனாகத் நகரம் முழுதும்அமைதி பாய் விரித்திருந்தது . இந்த அமைதி கொஞ்சம் பிடித்திருக்கவே செய்தது . இந்த அமைதி நேற்று இல்லை . நேற்றைய விடவும் அதன் முதல் நாள் ... அதற்கு முதல் நாள் ... போனவாரம் .... அதற்கு முந்திய வாரம் .... கடந்த மாதம் .... மருந்துக்குக்கூட இல்லை . அரபிக்கடலின் உக்கிர அலையைப்போல கலவரம் கோரத்தாண்டவமாடியிருந்தது . திடீர் , திடீரென எழும்பும் இரைச்சல் . கலவரம் , மொத்த நகரத்திலும் ஒரே களேபரம் ! அகிம்சைவாதிகள் இந்த திடீர் அமைதியை பெரிதும் வரவேற்றிருந்தார்கள் . இந்த அமைதி எத்தனை நாட்களுக்கு .....? புயலுக்கு முன் அமைதி என்பார்களேஅந்த அமைதியோ இது ....? ...