முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாற்றுச் சிறுகதை - இந்தியாவிற்கு எதிராக தொண்ணூற்றொரு பேர்


ஜுனாகத்நகரம் துக்கத்தினாலான முழுகைச்சட்டையை அணிந்திருந்தது.மக்கள் கண்களில் அரபிக்கடல்.கோபமும் ஏமாற்றமும் கலந்த விரக்தி.அத்தனைப்பேரும்கண்களை மூடி தலையைக் கீழே தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தார்கள்.முகத்தில் முறுக்குண்டிருந்தது சோகம்.மீளமுடியாத் துக்கம்.ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லை.
        ஜுனாகத் நகரம் முழுதும்அமைதி பாய் விரித்திருந்தது.இந்த அமைதி கொஞ்சம் பிடித்திருக்கவே செய்தது.இந்த அமைதி நேற்று இல்லை.நேற்றைய விடவும் அதன் முதல் நாள்... அதற்கு முதல் நாள்... போனவாரம்.... அதற்கு முந்திய வாரம்.... கடந்த மாதம்.... மருந்துக்குக்கூட இல்லை.அரபிக்கடலின் உக்கிர அலையைப்போல கலவரம் கோரத்தாண்டவமாடியிருந்தது.திடீர், திடீரென எழும்பும் இரைச்சல்.கலவரம், மொத்த நகரத்திலும் ஒரே களேபரம்!
அகிம்சைவாதிகள் இந்த திடீர் அமைதியை  பெரிதும் வரவேற்றிருந்தார்கள். இந்த அமைதி எத்தனை நாட்களுக்கு.....? புயலுக்கு முன் அமைதி என்பார்களேஅந்த அமைதியோ இது....?  அமைதி நீடிக்குமா...? இல்லை தொப்புள் கொடியைப்போல பாதியில் அறுந்துப்போகுமா...? மக்கள் மனதில் திக்,திக்! நெஞ்சிற்குள் படக்,படக்...!
ஜுனாகத் மக்கள் பாவம்! அவர்களுக்குண்டான மண் இன்று அவர்களிடம் இல்லை.மன்னன் இல்லை.ஆட்சி இல்லை.அதிகாரமில்லை. தேசமில்லை..... இத்தனையும் இருக்கிறது. பாகிஸ்தானிடம் அடமானமாக இருக்கிறது! கையை விட்டுச்சென்ற தேசம் மக்களை நோக்கி திரும்புமா...?. பஞ்சாப்,வங்காளம் போல அல்லாமல் முழுமையாகக் கிடைக்குமா...? கடல் ஓதமாக கேள்விகள் எழுகின்றன.அடங்குகின்றன.அடங்கி எழுகின்றன.
       ஜுனாகத் கோட்டை மக்களால் சூறையாடப்பட்டது.மன்னன் சுல்தானின் ஆடைகள் எரிக்கப்பட்டன.ஆபரணங்கள் அபகரிகப்பட்டன.மகுடங்கள், ஓவிய வேலைப்பாடுகள் சிதைக்கப்பட்டன.கோட்டைவாசிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தெறித்து நாலாபுறமும் தெறித்து ஓடினார்கள்.கோட்டைக்குள்பணியாட்கள் இல்லை.மனைவிமார்கள் இல்லை.இளவரசர், இளவரசி இல்லை.மந்திரிகள், ஏவலர்கள் இல்லை. கோட்டை வெறும் கூடாக  மட்டுமே இருந்தது.
அம்மா....இப்போது நாம் எந்த நாட்டின் குடிமக்கள்....?” ஒரு குழந்தை கேட்கும் கேள்விக்கு படித்த பண்டிதனால் கூட பதில் சொல்லமுடியவில்லை.
மக்கள் கிர்நார் மலை அடிவாரத்தில் கிர் காட்டின் முகப்புத்தோற்றத்தில்  குழுமி உட்கார்ந்திருந்தார்கள். கிர் காட்டின் முகப்பிலிருந்து கிர்நார் சிகரத்தை அடைய வேண்டுமெனில் ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது படிகளைக் கடந்தாக வேண்டும்.ஒவ்வொரு படிகளிலும் மக்கள் முடிச்சு முடிச்சாக உட்கார்ந்திருந்தார்கள்.காதுடன் வாய்  உரச  கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள்.
ஜுனாகத் இந்திய அரசுடன் இணையுமா...?”
.நா சபை  திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடந்தியாக வேண்டுமே...”
வாக்கெடுப்பு நடத்துவதில் தடை ஏற்படும் போலத் தெரிகிறதா...?”
பின்னே இல்லையா...?”
என்னத்தடை...?”
பாபுஜி இந்த வருடத்தொடக்கத்தில் ஒரு இந்து வெறியனால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் இல்லையா..?.”
அதற்கும் வாக்கெடுப்பிற்கும் என்ன இருக்கிறது...?”
பாபுஜீ குஜராத் மண்ணின் மைந்தர். அவர் தேசப்பிதா! அவருக்காக ஒரு வருடம் துக்கம் அனுசரிக்க வேண்டாமா....?”
குஜராத் இந்தியாவின் அங்கம். ஜுனாகத்திற்கு என்னவாம்...?”
குஜராத்திற்குள்தானே நம் ஜுனாகத் இருக்கிறது
அப்படியானால் அது வரைக்கும் நாம்....?”
“  பாகிஸ்தானின் எடுப்பார் கைப்பிள்ளைதான்
நம்மையும், நம் ஆட்சிப்பகுதியையும் இந்திய இராணுவம் மீட்டெடுத்துவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்களே...?”
சர்தார் படேல் அப்படித்தான் சொல்லிருக்கிறார். இருப்பினும் நாம் பாகிஸ்தானின் தத்துப்பிள்ளைகள்தான். மன்னன் சுல்தான், முகமது அலி ஜின்னாவிடம் சரணாகதியாகிவிட்டார். ஜுனாகத்  சமஸ்தானத்தை பாகிஸ்தானிடம் இணைத்துக்கொள்கிறேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்...”
அப்படியானால் சர்தார்ஜுயின் சபதம்...?”
“  தண்ணீரில் எழுதிய எழுத்துதான்
ஒரு பெரியவர் துள்ளி எழுந்தார்.இருக்காது.இருக்கவே இருக்காது.சர்தாரின் கொள்கைப்பிடிப்பு அரசியலை நான் நன்கு அறிந்தவன்
“  எனக்குக்கிடைத்த செவி வழிச்செய்தித்தான் நான் சொல்கிறேன்
இருக்கலாம்....நான்படேலின் நிர்வாகத்திறமையை கூடவே இருந்து கவனித்தவன். நான் சொல்கிறேன்.குஜராத் எப்படி காந்திக்கு பிறந்த மண்ணோ அப்படித்தான் படேலுக்கும்.படேல் ஓடி விளையாடிய இடம் நம் ஜுனாகத்.நீ வேண்டுமானால் பாருங்கள். ஜுனாகத்தை இந்தியாவுடன் இணைக்காமல் அவர் ஓய மாட்டார்
காந்திஜீயின் துக்கம் குறுக்கே நிற்கிறதே...?”
காந்திஜீயின் துக்கம் மட்டுமா குறுக்கே நிற்கிறது. ஜின்னா - சுல்தான் ஒப்பந்தம் கூடதான் குறுக்கே நிற்கிறது
நாம் ஆதரவு தெரிவிக்காமல் ஜுனாகத்தை எப்படி பாகிஸ்தானிடம் இணைக்க முடியும்...?”
அரசன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழியாம்
ஜின்னாவின் சாணக்கியத்தனம் இந்த ஜுனாகத்தில் எடுபடாது
என்ன சொல்ல வருகிறாய்....?”
குடிமக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி என்கிறேன் நான்
உன் பேச்சு இந்தியா பக்கம் சாய்வதைப்போல இருக்கிறதே...”
ஆமாம்! நீ...?”
ஜுனாகத் தொடர்ந்து சமஸ்தானமாக  இருக்கவே விரும்புகிறேன்
நல்லா இருக்கிறது உன் பேச்சு ! வேடிக்கை, வினோதம்
எனக்கு இந்தியா மீது சந்தேகம் வருகிறது
ஏன்...?”
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என தன்னை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு என அறிவித்துக்கொள்ளவில்லையே....”
ஏன் அறிவிக்கவில்லை காந்திஜீ அறிவித்திருக்கிறாரே
அவரை உயிருடன் விட்டு வைக்கவில்லையே
“  நீ இஸ்லாம் என்பதால் உன் சந்தேகம் சரிதான்
அப்படியில்லை. நான் இந்துவாக இருந்திருந்தாலும் இந்தியா மீது சந்தேகப்படவே செய்திருப்பேன்
எப்படி...?”
பாகிஸ்தானில் மதம் மட்டும்தான் பிரச்சனை. இந்தியாவில் மதமும் பிரச்சனை சாதியும்  பிரச்சனை
மதம், சாதி இவற்றில் எது பெரியது...?”
சாதிதான்
என்னச்சொல்கிறாய்...?”
நீயும், நானும்  மதம் மாறலாம். ஆனால் சாதி மாற முடியாது
எனக்கு என்னவோ இந்தியாவை விட பாகிஸ்தானே கட்டுக்கோப்புடன் இருப்பதைப்போலத் தெரிகிறது
எப்படிச்சொல்கிறாய்...?”
பாகிஸ்தானில் ஜின்னா சொல்வதுதான் வேத வாக்கு. இந்தியாவில் ஆளுக்காள் நாட்டாமை
உனது கணிப்பு சரியன்று. இந்தியாவில் கருத்துச்சொல்ல சுதந்திரமிருக்கிறது.பாகிஸ்தானில் அது அன்று
இதெல்லாம் இருக்கட்டும்.  திட்டமிட்டபடி மக்கள் வாக்கெடுப்பு நடக்குமா....?”
சந்தேகம்தான்
ஏன்...?”
பாகிஸ்தான்  வாக்கெடுப்பு தேவை இல்லை என சொல்லிவருகிறது
ஏனாம்...?”
ஜுனாகத்தை இந்தியாவிற்கு தருகிறோம். காஷ்மீரை எங்களுக்கு கொடுங்கள் என  பங்குப்பேசுகிறது...”
இது நல்லாருக்கும் போலத்தெரிகிறதே...”
என்ன நல்லா இருக்கிறது. ஜுனாகத்தை இந்திய இராணுவம் அடித்து பிடிங்கிக்கொண்டதன் பிறகு அதைச்சொல்கிறது
இந்திய இராணுவம்தான் ஜுனாகத்தை பிடித்துவிட்டதே பின் ஏன் மக்கள் வாக்கெடுப்பு...?”
.நா மாமன்றம் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்க விரும்புகிறது
அப்படியானால் திட்டமிட்டபடி மக்கள் வாக்கெடுப்பு நடந்தே தீறும்
நடந்தால்தான் நமக்கு எதிர்காலம்
இப்படியாக ஜுனாகத் மக்களின் பேச்சுகள் நீண்டுக்கொண்டிருந்தன.
பிரிட்டிஷ் இந்தியாவை விஸ்தாரமாக விரித்து அதைச்சுற்றி வட்டம் கட்டினால் வட்டத்தின் மையம்தான் குஜராத்.அந்த குஜராத்திற்குள்தான் இருக்கிறது ஜுனாகத்.பூகோள ரீதியில் பார்ப்போமேயானால் ஜுனாகத் பாகிஸ்தான் எல்லையிலிருந்து சரியாக நானூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும்  இருக்கிறது. நீள்வெட்டுத்தோற்றத்தில் பார்த்தால் இந்தியத்தாயின்  வலது கை மூட்டு.
ஒரு காலத்தில் சூடகாம ராஜபுத்திரங்களின் தலைநகரமாக இருந்தது இந்த ஜுனாகாத்.  ராஜபுத்திரர்கள் கட்டிய  கோட்டை அப்பெயரைக்கொண்டிருந்ததால் அதற்கு அப்படியொரு பெயர். ராஜபுத்திரர்களைத்தொடர்ந்து அந்நிலத்தில் முதலாம் பகதூர் ஹாஞ்சி காலூன்றி பாபி வம்சத்தை நிறுவினார்.பிரட்டீஷாரின் வருகைக்கு சற்று முன்னர் அது சுல்தான் கைக்கு மாறியிருந்தது.
பெரிய பசால்ட் பாறையிலான பூமி.சௌராஷ்டிர நிலம்.சுல்தான் மன்னனின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த தேசம்.கையடக்க சமஸ்தானம்.இப்போது அது இந்தியாவின் இராணுவத்தின் மடியில் இருக்கிறது. ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானின் பிடியில்....
ஜுனாகத் முழுமையும் சுவுரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கறுப்பு வெள்ளைகளான  சுவரொட்டிகள் அது. முதல் சுவரொட்டியில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது.அவருடைய  ஊசி வடிவ முகம் பௌர்ணமி போன்ற வடிவத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது. அவருடைய ஏறிய நெற்றியும் வளைந்த நாசியும் மக்களை வசீகரிக்கும்படி இருந்தது.அவரது படத்திற்கு அடுத்து லியாகத் அலிகானின் முகம் இருந்தது.முதல் முகத்தை விட இரண்டாவது முகம் சற்று சிறியதாகவும் தெளிவற்றுமிருந்தது.இடது ஓரம் ஒருவர் நின்றபடி கும்பிட்டுக்கொண்டிருந்தார்.அவர் ஜுனாகத் தேசத்து  மன்னன் சுல்தான். அவரது முகத்தில் கம்பீரமும் உடையில் ஆடம்பரமும் தெரிந்தன.தலையில் பெரிய குல்லா வைத்திருந்தார்.கழுத்தில் ,கையில், விரல்களில் ஆபரண்ஙகள் அலங்கரித்தன. அதற்கும் கீழாக இப்படியொரு வாசகம் எழுதப்பட்டிருந்தது.
மக்களே.... பாகிஸ்தான் நாட்டுடன் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.சாதி,மதம் பேதமற்ற ஆட்சியை பாகிஸ்தான் அரசால் மட்டுமே உறுதிசெய்ய முடியும். பச்சை பெட்டியில் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்
அதற்கும் சற்றே தூரத்தில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.அதில் பாபுஜீ, நேருஜீ, சர்தார் வல்லபாய் படேல் போன்றோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அதற்கும் கீழாகமக்களே...நீங்கள் பாரத தாயின் குழந்தைகள். பாரத மாதாவிற்கு  ஜெஎன எழுதப்பட்டிருந்தது.
ஜுனாகத் முழுமைக்கும் ஐம்பத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள்.ஆளுயுற துப்பாக்கியை ஏந்திக்கொண்டு, விடைத்த  தூண் போல நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சர்வதேச காவற்படையைச் சேர்ந்தவர்கள்.அவர்களின் உடையில் ஐக்கிய நாடுகள் சபை இலட்சினை இருந்தது.         
20.10.1948
பத்து மணி்க்கு வாக்களிக்கும் படலம் நடந்தேறியது.இந்தியாவுடன் இணைந்துக்கொள்ள விரும்புபவர்கள் சிவப்புப்பெட்டியிலும் பாகிஸ்தானுடன் இணைந்துக்கொள்ள விரும்புபவர்கள் பச்சைப்பெட்டியிலும் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினார்கள்.அன்றையத்தினமே வாக்குகள் எண்ணும் படலம் நிறைவேறியது.
கொஞ்சம் கொஞ்சமாக முடிவுகள் கசியத்தொடங்கின.
ஜு....ஜு.... ஜுனாகத்
ஜெய்...ஜெய்....ஜிந்தாபாத்....
பாரத மாதாவிற்கு ஜெ....
சர்தார்ஜீக்கு ஜெ............
ஜுனாகத் நகரம் முந்நூற்று அறுபது டிகிரியில்  விழாக்கோலம் கண்டது. எங்கும் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு.சௌராஷ்டிர மண்ணுக்குரிய கர்பா நடனம்....
ஜுனாகத் நிலப்பரப்பை துறைமுகக்கிராமம் என்பதா...நகரம் என்பதா...?.ஆனால் கொண்டாட்டத்தால் அது மாநகரமாக காட்சியளித்தது.எங்கும் பட,பட.....பட்டாசுகள். தபேலா மேளதாளங்கள்.கும்மாளம் , குதூகலம்.
ஒரு புள்ளியில் தொடங்கியிருந்த இந்தக்கொண்டாட்டம் ஒளியின் திசைவேகத்தில் இந்திய தேசம் முழுமைக்கும் பரவத்தொடங்கின. ஜுனாகத் நகரத்தின் தெற்கு,மேற்கு எல்லைகளாகக்கொண்ட அரபிக்கடலின் ஆரவார அலைகளை விடவும் பெரிய ஆர்ப்பரிப்பை அந்த ஜுனாகத் நகரம் கொண்டிருந்தது. அந்நகரத்திலிருந்து இருபது டிகிரி குறுங்கோணத்தில் இருக்கும் போர்ப்பந்தரிலும் அந்தக்கொண்டாட்டம் இருந்தது.இதிகாச பூமி குஜராத் பரப்பைத்தாண்டி டெல்லியில் மையம் கொண்டது.இந்திய பாராளுமன்றம், அரசியல் நிர்ணயச் சபை, சட்டவரைவுக்குழு ,ஆனந்த பவன், செங்கோட்டை,.. என  வாயைத்திறந்தால் எழுவாய், பயனிலை ,செயப்படுப்பொருள் ஜுனாகத்தான்!
பாபுஜீ  படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. அவர் சிந்திய உதிரம் இன்னும் காயவில்லை.அதற்குள் இந்தியாவில் ஒரு விழாக்கோலமா...? திடீர் திடீர் கொண்டாட்டமா...?கொண்டாடலாமா...? வேண்டாமா....? யாரும் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை.மொத்த இந்தியாவின் ஹார்மோன்களிலும் ஆனந்தக்களியாட்டம் சுரந்துக்கொண்டிருந்தது.சுதந்திரத்தினத்தன்றுக்கூட இப்படியொரு கொண்டாட்டத்தை கடகரேகையின் வடபுலம் கண்டிருக்கவில்லை.
பாபுஜீ மூன்று தோட்டாக்களுக்கு இரையான அன்று இடைக்கால பிரதமர் நேருஜீ சொல்லிருந்தார்.அரசாணையாக ஒரு சுற்றறிக்கையும் விட்டிருந்தார்.பாபுஜீயின் துக்கத்தை ஒரு வருடக்காலம் துக்கத்தினமாக அனுசரிக்கப்படும்.இதை அவர் கண்ணீர் கோர்க்க, நா தழதழக்க, உதடுகள் பரிதவிக்கச் சொல்லிருந்தார்.அரசு விழாக்கள் எதுவும் விமரிசையாக நடைபெறாது.விழாக்கள் கூடாது..... அத்தனையும் ஜுனாகத் விசயத்தில் தண்ணீர் மேல் எழுதிய எழுத்தாகிப்போனது.
சர்தார் வல்லபாய் படேல், மனதளவில் உடைந்துப்போய் உட்கார்ந்திருந்தார்.அவர் முன் குவியலாக வாழ்த்துகள்.குன்றுகளாக தந்திகள்.
சர்தார்ஜீ வாழ்த்துகள்
ஜுனாகத்தை வென்றெடுத்த படேலுக்கு வணக்கங்கள்...”
முதல் தந்தி பிரதமர் ஜவஹர்லால் நேருவிடமிருந்து வந்திருந்தது.அவர் முன் எத்தனையோ தந்திகள்.ஒவ்வொரு தந்தியையும் அவர் தலைப்புச்செய்தியாகத்தான் படித்தார்.வாழ்த்துகளை பெற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.
இந்தியத்தலைவர்கள் எதிர்ப்பார்த்திருந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய தேசத்துடன் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் 1,90,870 பேர்
இந்தியத்தலைவர்களின் முதுகெலும்பு நிமிர்ந்தது.தண்டுவடம் சிலிர்த்தது.
சர்தார் வல்லபாய் படேல் கொண்டாட்டத்தில் தன்னை உட்படுத்திக்கொள்ளவில்லை.கண்களை மூடி அமைதியில் உட்கார்ந்திருந்தார். அவருடைய முழு கவனமும்  இந்தியாவிற்கு எதிரான வாக்குகளின் எண்ணிக்கையை  அறிந்துக்கொள்வதில்  இருந்தது.
இந்தியா நாடு அல்லவே.... துணைக்கண்டம்! பல இனங்களின் அருங்காட்சியகம்.இத்தகைய இந்தியாவை விரும்பாத ஜுனாகத் மக்களும் இருப்பார்களா...? இந்தியாவிற்கு எதிராகவும்வாக்குகள் விழுமா..? அப்படி விழுவது எதிர்கால இந்தியாவிற்கு நலமா...? எத்தனை வாக்குகள் விழும்...? இந்தியாவை ஏன் அவர்கள் வெறுக்கிறார்கள்...? அமையப்போகும் மதச்சார்பற்ற அரசில் அவர்களுக்கு  வலுவான சந்தேகம் வருகிறதோ...? அந்தச்சந்தேகசத்தை எப்படி நான்  போக்குவது...? எனக்குப்பிறகு யார் போக்குவது...? எதிர்கால ஆட்சியாளர்கள் அவர்களுக்குஅச்சுறுத்தலாக இருப்பார்களோ...?”
சர்தார் எதிர்நோக்கியிருந்த இந்தியாவிற்கு எதிரான வாக்குகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுடன்  இணைத்துக்கொள்ள விரும்பாதவர்கள் தொண்ணூற்றொரு பேர்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...