முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமர்சனங்கள்


 05.01.2019

சபரிமலை விவகாரம் - தினகரன் இதழ் தலையங்கம்

கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது,  பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது,
பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள்  கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு  செல்லக்கூடாது  இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை.  

மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU  நடுப்பக்கத்தில்   அரபிக்கடலில் 
மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில்  மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் முரண்பட்டிருக்கிறோம். 

இது குறித்து பத்திரிகைகள்

பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்

அவர்கள் வழிபட மாதங்கள் தனியே ஒதுக்கலாம்

சீசன் காலமான இந்நேரத்தில் பெண்களை இத்தனை அவசரமாக அனுமதித்திருக்க வேண்டியதில்லை

முல்லைப்பெரியாறு விஷயத்தில் உச்சநீதி மன்றத்தை மதிக்காத கேரள அரசு இதை மட்டும் இத்தனை அவசரத்தில் நடைமுறைப்படுத்த காரணம் என்ன என்பதாக பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதியிருக்கின்றன.

கோவில் விசயத்தில் மட்டுமல்ல எத்துறையிலும்  பெண்களுக்கு சமத்துவம் நிலவ வேண்டும் என்பது என் விருப்பம். 

நேற்றைய தினம் மாலை முரசு என்கிற பத்திரிகை ' பிடிவாதம் பிடிக்கும் பினராயி அரசு ' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியிருந்தது. அத்தலையங்கம் முல்லைப்பெரியாறு - சபரிமலை இவ்விரு பிரச்சனைகளையும் உச்சநீதி மன்ற தீர்ப்பையொட்டி அமுல்படுத்தும் வேகத்தை மையமாக வைத்து எழுதியிருந்தது.

இன்றைய தினகரன் இதழில் ' அரசே துணை போவதா? ' என்கிற தலைப்பில் தலையங்கம். அதில் சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டுவது ஆளும் அரசு போன்றும் ஆண்கள் மது, போதை பிரச்சனையிலிருந்து விடுபட ஐயப்பன் தரிசனமே வழி என்பதைப் போலவும் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் மீது காட்டு விலங்குகள் தாக்குதல் தொடுக்காமல் காப்பது  ஐயப்பன் என்பதைப் போலவும் எழுதப்பட்ட தலையங்கத்தை வாசிக்கையில் நாத்திக - திராவிட - பகுத்தறிவு  இயக்க குடும்ப வழி பத்திரிகைதானா இது என ஒரு முறை கிள்ளிப்பார்த்துக்கொள்ள தோன்றியது. 'சபரிமலையிலுள்ள விலங்குகள் கூட ஐயப்பன் என்கிற சொல்லுக்கு கட்டுப்பட்டு யாரையும் துன்புறுத்தியது கிடையாது...' என்கிற வரிகளெல்லாம் தினகரன் இதழுக்கு அழகா, பொருந்துமா , ஏற்குமா..? என்று புரியவில்லை. அத்தலையங்கத்தின் வழியே அதே கேள்வியை இப்படி கேட்கத் தோன்றுகிறது. ஐயப்பன் கோயிலுக்குக் கட்டுப்பட்டு விலங்குகளே பக்தர்களைத் துன்புறுத்தாத பொழுது பக்திப்பெருக்கால் அக்கோயிலுக்கு வரும் பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது சரியா? 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...