முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி.வி.ஆர் நினைவுச்சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை

ஆணி வேரும் சில சல்லிகளும்.....
      தன் குஞ்சுகள் மொத்தத்தையும் பருந்திற்கு கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்குமே கோழி அப்படியாகத்தான் அந்த வேப்பமரம் நின்றுகொண்டிருந்தது. அம்மரத்தின் மொத்த இலைகளும் பழுத்து, கருகி, உதிர்ந்துபோயிருந்தன. மரக்கிளைகள் கவிழ்ந்து தானாகவே ஒடிந்து அந்தரத்தில் தொங்கின. பித்த வெடிப்புகளைப்போல் வேர் வெடிப்புகள். தண்டுகள் பட்டைப்பட்டைகளாகத் தெரித்து உதிர்ந்துகொண்டிருந்தன. மரமெங்கும் கரையான்கள். சுள்ளெரும்புகள், சூவைகள்.
      எப்படி இருந்த மரமிது! ஊரின் பெரிய  வேப்பமரம் இதுதான். குடை ராட்டினம் போல நாலாபுறமும் கிளைப்பரப்பி கவிழ்ந்திருக்கும். சாணம் தெளித்ததைப்போல நிழல்கள் சொட்டைச் சொட்டையாக. சிலு..சிலு...வென இதமாகக் காற்று வீசிக்கொண்டிருக்கும். ஒரு குட்டி சோலைவனம் அது. பொழுது விடிந்தால், இருட்டினால் போதும். பறவைகளின் குதூகலத்தால் மரம் ஆர்ப்பரிக்கும்.
      ‘ கீக்...கீக்...கீக்....’
      ‘ கொக்...கொக்...கொக்....’
      ‘ கிரீச்...கிரீச்....’
     
மரத்தில் காய்த்துத் தொங்கும் வேப்பங்காய்களை எண்ணிவிடலாம். பறவைகளை எண்ணமுடியாது. கூட்டம் கூட்டமாகப் பறவைகள். சரம் சரமாக வண்ணத்துப்பூச்சிகள்.
       மரத்தின் உச்சி காக்கைகளுக்கு. கிளைப்பரப்பு குருவிகளுக்கு. தண்டும், பொந்துகளும் அணிற்பிள்ளைகளுக்கு. ஐந்தறிவு சமுதாயத்தின் உறைவிடமாக இம்மரம் இருந்தது. மரத்தின் உச்சியில் நான்கைந்து காக்கைகள் கூடுகட்டியிருக்கும். இப்பொழுது அக்கூடுகள் இல்லை. இரவு நேரங்களில் மின்மினிப்பூச்சிகள் ஆலவட்டமடிக்கும். அவைகள் போனத்திசை தெரியவில்லை. பட்சிகளின் வீடுகளாக இருந்த மரத்தில் இப்பொழுது உட்காருவது ஆந்தையும், பருந்தும்தான். என்ன நடந்து விட்டது இம்மரத்திற்கு....? யார் செய்த வினை இது...? யார் கண் பட்டதோ....?
      இம்மரத்தை ஏறிட்டுப்பார்த்த அப்பத்தாள் சொன்னாள் ‘ மரதிற்கு உசிரு இல்ல. பட்டுப்போயிருச்சு...’. அப்படிச்சொல்கையில் அவளுடைய கண்கள் குளமாக இருந்தன. தாத்தா ‘கொல்’லெனச் சிரித்தார். அப்பத்தாளின் முகத்தில் அறைவதைப்போல அவரது சிரிப்பு இருந்தது. ‘ அடியே.....அசடு...அசடு.....உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு....ம்.....? இலயுதிர் காலமடி இது.....ஒரு மாசம் கழிச்சுப்பாரு. உதிர்ந்த அத்தன இலயும் துளிர்த்திருக்கும்....’ தாத்தா இதை அவருக்கே உரித்தான மேதாவித்தனத்தில் கேலியும், கிண்டலும் கலந்து சொல்லியிருந்தார். சொல்லவாச் செய்தார். அப்பத்தாள் தலையில் ‘நங்’கென ஒரு கொட்டு கொட்டச்செய்தார்.
      ‘ என்ன மனிசனோ நீங்க....இது கூடவா நான் தெரியாம இருப்பேன். கொழி பொரிக்காம விட்ட கூமுட்டயைப் போலல்ல என்னை நீங்க நினைச்சிட்டீங்க.....நான் பிள்ளையா நினைச்சு வளர்த்தெடுத்த மரமுங்க இது....நீங்க இந்த எடத்தில ஒரு குழியத் தோண்டி ஒரு வேப்பமரக்கன்ன வச்சத்தோடு சரி. இதுக்கு நான் வேலிக்கட்டி, தண்ணீ ஊத்தி, வேண்டாத கிளைகளை வெட்டி வளர்த்தெடுத்த எனக்குத் தெரியாதா....இது எப்ப இலயக் கொட்டும். பூ பூக்கும்... காய்க்கும்...பழுக்குமென.....?. வேர்ல உசிரு இல்ல... மரம் செத்துப்போச்சு...’
      அப்பத்தாள் வார்த்தைகளுக்கிடையில் அப்பா முரட்டுத்தனமாக நுழைந்தார். அப்பா எப்பொழுதும் ‘தாம்...தூம்’ பேர்வழி. அதுவும் அப்பத்தாளிடம் பேசுகையில் விறகுக்கட்டைகளை உடைப்பதைப்போலதான் பேசுவார். ‘ என்னம்மா நீ....உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு... வருசா வருசம் கொட்டுற இலயத் தானே கொட்டிட்டு நிற்கிது. மரம் செத்துப்போச்சு, செத்துப்போச்சுனு மூச்சுக்கு முன்னூறு தடவச் சொல்ற.....வாழுற வீட்ல வயசானவ இப்படியாப் பேசுவா... அபசக்குணமா....? வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டே நீ.....’ அப்பா தொண்டை அதிரக் கத்தியதும் அப்பத்தாள் திறந்திருந்த வாயை ‘சட்’டென மூடிக்கொண்டாள்.
      அடுத்து அம்மா அவள் பங்கிற்கு, ‘அத்தே....மரம் நல்லாதான் நிற்குது....உங்க கண்ணுதான் சரியில்ல....எந்நேரமும் அதெயே சொல்லிக்கிட்டு இருக்காமே....கம்மென இருங்க....’ சொன்னதோடு பாத்திரத்தைத் தரையில் ‘நங்’கென்று வைத்தாள். அவள் சொல்லாமல் விட்ட மிச்ச, சொச்சத்தை அவள் வைத்த பாத்திரம் சொன்னது.
      தாத்தா, அப்பா, அம்மா மூன்று பேருக்கும் பதில் சொல்லியாக வேண்டிய நிலைக்கு அப்பத்தாள் உள்ளாகி இருந்தாள். முகத்தை ‘உம்’மென வைத்துகொண்டு சுருக்குப்பையை எடுத்து விலக்கி அதற்குள் சுண்ணாம்புப் புட்டியைத் தேடிக்கொண்டு அப்பாவிடம் சொன்னாள் ‘ஏலேய்....உனக்கு இந்த மரத்தைப்பத்தி என்னடாத் தெரியும்.....நீ வயித்துக்குள்ள இருக்கையில வச்ச கன்னுடா இது. உனக்கு ரெண்டு மாசத்துக்கு மூப்பு இது. எனக்கு மூத்தப்பிள்ள நீ இல்ல. இந்த மரம்தான். இது எப்ப இலைகளக் கொட்டும்....பூக்கும்...காய்க்குமென எனக்குத் தெரியாதா.....? பெரிசா எனக்கு பாடம் கற்பிக்க வந்துட்டே....மரத்துக்கு என்னவோ ஒரு சீக்கு வந்திருக்கு.....எனக்கு வந்திருக்கிற சீக்கோ...என்னவோ....இந்த மரத்தில ஒர நாளைக்கு  எத்தனைப் பட்சிக வந்து உட்காரும்... இப்ப ஆந்தை, பருந்தைத் தவிர வேறெந்த பட்சியும் வருதானுப் பார்த்தீயா....’ என்றவாறு அவள் மரத்தை ஒரு கணம் ஏறிட்டுப்பார்த்தாள். அவளுடன் சேர்ந்து நாங்கள் அத்தனைப்பேரும் பார்த்தோம். மரத்தில் ஓரே ஒரு  ஆந்தை மடடும் உட்கார்ந்துகொண்டு திருட்டு முழி விழித்துக்கொண்டிருந்தது.
      ஓரிரு மாதங்கள் கழித்துப்பார்க்கையில் அப்பத்தாள் சொன்னதுதான் சரியென இருந்தது. உதிர்த்த இலைகள் மறுபடியும் துளிர்க்கவில்லை. திருப்பதிக்கு சென்று வந்த பக்தனைப்போல மரம் மொட்டையடித்து நின்றது. மரம் நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே வந்தது. மொத்தப்பட்டைகளையும் உதிர்த்துவிட்டு அதோகதியில் நின்றது. கரையான்கள் மரத்தில் சாரை சாரையாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தன. மரத்தின் வேர்களில் கட்டெரும்புகளும், சுள்ளான்களும் மொய்த்தன. மரப்பட்டைகளின் வெடிப்புகளுக்குள் பூரான் பூச்சிகள் அடைந்தன.   வீட்டு வாசலின் வலது புறம் இம்மரமிருந்தது. அப்பாவை விடவும் இரண்டு மாதங்கள் மூப்பு என்றால் மரத்திற்கு வயது எப்படியும் ஐம்பதிற்கு குறையாது. தாத்தா வெளிக்குப் போன இடத்திலிருந்து ஒரு மரக்கன்றை பிடுங்கி வந்து வாசலில் ஊன்றியிருக்கிறார். அவரது வேலை அத்தோடு சரி. இதை முழுவதுமாக வளர்த்தெடுத்தது அப்பத்தாள்தான். ஆட்டிற்கு தழை, பல் துலக்கக் குச்சி, ஊஞ்சல் கட்டி விளையாட கிளை, கோயில் திருவிழாவின் போது வெப்பங்கொத்து,...என எந்தச் சடங்கிற்கும் அந்த மரத்தை அவள் விட்டுக்கொடுத்ததில்லை.  வேப்பமரமாக இருந்த அம்மரத்தை சாமி மரமாக மாற்றியப் பெருமை அம்மாவையேச் சாரும். அம்மா அப்பாவை திருமணம் செய்துகொண்டு வந்த மறுமாதம் அப்பா வாங்கிவந்த பூச்சரத்தில் ஒரு முழத்தை அம்மரத்தின் ஒரு கிளையில் தொங்கவிட்டிருக்கிறாள். அதன்பிறகு அம்மரம் சாமிமரமாகி விட்டது. பொங்கல், கார்த்திகை தீபம், ஆடி பதினெட்டு, ஆவணி ஞாயிற்றுக்கிழமை, சித்திரை பௌர்ணமி,...என விசேச நாட்கள் வந்தால் அம்மரத்திற்கு எப்படியும் ஒரு முழம் பூ  கிடைத்துவிடும். வேரிடத்தில் ஒரு சொம்பு மஞ்சள் தண்ணீர் தெளிப்பாள். மார்கழி பிறந்தால் வாசலுக்கென கோலம் போடுகிறாளோ இல்லையோ மரத்திற்கென ஒரு ரங்கோலி எப்படியும் போட்டுவிடுவாள். எனக்கு அம்மை நோய் பார்த்திரிக்கையில் அதன் தழைகளை ஒடித்துதான் அப்பத்தாள் எனக்கு வீசி விட்டாள். வெள்ளை வேட்டியை விரித்து அதன் மீது அமம்மரத்தின் வேப்பந்தழைகளை பரப்பி என்னைப் படுக்க வைத்தாள்.
      எங்கள் வீட்டில் நான் உட்பட அம்மரத்தை அழைப்பது சாமி மரம் என்றுதான். ஒருநாள் கோடாங்கி வந்து ‘ வீட்டு வாசலில் மாரியாத்தாள் குடியிருக்கிறாள். நல்ல நாள், கிழமைக்கு அதுக்கு தீபம் ஏத்து...’ எனச் சொல்லிவிட்டுப்போன மறுநாள் முதல் அம்மா வெள்ளி, செவ்வாய்க்கு தவறாது தீபம் ஏற்றவும் தொடங்கிவிட்டிருந்தாள். நான் தேர்வு எழுத போகும் காலங்களில் அதன் வேரிடத்தில் ஒரு சூடம் ஏற்ற நான் மறந்ததில்லை. துக்கத்திற்கு சென்று வரும் அப்பா அந்த மரத்தின் வழியே வரமாட்டார். ஒரு வேளை வந்தால் அம்மா அவரை வசைபாடியே கொன்றுவிடுவாள். வேரிடத்தில் மஞ்சத்தண்ணீர் தெளித்து பாவமன்னிப்பு கேட்கத் தவறமாட்டாள். எப்பொழுதேனும் அப்பா உடல் நலம் குன்றி கட்டிலில் படுத்தால் ‘ அன்னைக்கு சாவு வீட்டுக்குப் போயிட்டு சாமி மரம் வழியா வந்தீங்கள்ல.... அந்தக்குறைதான் இப்ப உங்க குடுமியைப் பிடித்து ஆட்டுது....’.எனக் குத்திக்காட்ட மறக்கமாட்டாள். அப்பா அக்மார்க் நாத்திகவாதி.‘ போடி இவளே....’ எனச் சொல்லி அவளது வாயைச் சட்டெனத் தைத்துவிடுவார்.
      ஒரு நாளிற்கு மூன்று வேளை அம்மரத்திற்கு நாங்கள் தண்ணீர் ஊற்றி வந்தோம். உரமென்ன, எரு என்ன...?  மரம் துளிர்விடுவதாக இல்லை. பசு மாட்டுச்சாணங்களைக் கொண்டுவந்து அம்மா அதன் வேரில் கொட்டினாள். அப்பத்தாள் வெள்ளாடு புழுக்கைகளை பொறுக்கி வந்து வேரிடத்தில் இருக்கும் பொந்துகளின் வழியே கரைத்து ஊற்றினாள். மரத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து அந்தரத்தில் தொங்கிக்கிடந்தன.
      ‘ சாமி மரம் பட்டுப்போயிருச்சு.....’ என்பதை ஊர்க்காரர்கள் பரவலாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். சிலர் ‘ அந்த வீட்டுக்கு என்னவோ ஒரு சோதனைக் காட்டிக்கிட்டு இருக்குது..’ என்றார்கள். சிலர் பொத்தம் பொதுவாக ‘ சாமிக்குத்தம் ’ என்றார்கள்.
      கோடாங்கி ஒரு நாள் இரவு வீட்டு வாசலில் நின்று நாய் குரைப்பிற்கிடையில் சொல்லிவிட்டுப்போனான். ‘ஊருக்குள்ள துஷ்டன் நுழைந்திருக்கிறான். சாமினு நினைச்சு வளர்தெடுத்த மரம் பட்டுப்போயிருக்கு. ஊர்க்குள்ள அடுத்தெடுத்து கெட்டது நடக்கப்போகுது. பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடப்போகுது......’ என வரிசையாக என்னென்னவோ சொல்லி ஊர்க்காரர்களின் மொத்த அமைதியையும் அள்ளிக்கொண்டு போனான். விடிந்ததும் நெல் வாங்க வந்த கோடாங்கியை மறித்துக் கேட்டாள் அப்பத்தாள். ‘ ஊர்க்குள்ள துஷ்டன் நுழைஞ்சதுக்கும் எங்க வீட்டு மரம் பட்டுப்போறதுக்கும் என்ன சம்மந்தம்...?’
      ‘ஊர்ல  மரத்த பணமாப்பார்க்கிறாங்க. விறகாகப்பார்க்கிறாங்க. நிழலாப் பார்க்கிறாங்க. நீங்க மட்டும்தானே தாயீ சாமியாப்பார்க்கிறீங்க....அதனாலதான் அவ்ளோ மரத்தையும் விட்டுட்டு சாமி மரத்தில சோதனைக்காட்டுது...ஊர்ல ஒத்துமை இல்ல... யார்க்கெட்டால் நமக்கென்ன என இருக்குறாங்க. ஊர்க்குள்ள துஷ்டம் நுழைஞ்சு ஒரு வருஷம் ஆகுது.... அதை சாமிமரம் மூலமாகக் காட்டுது....ஊர்சனம் ஒன்னுகூடி அதைத் தடுக்கணுமெனச் சொல்றாள் இந்த ஜக்கம்மா...குடுகுடுகுடு....’
      ‘ இதுக்கு என்ன பரிகாரம் செய்யணும்......?’
      ‘ஊர் ஒத்துமைக்கு வரணும்...அப்பத்தான் துஷ்டனை ஊரைவிட்டு விரட்டலாம்....’
      ‘ இந்த சாமி மரத்த பிழைக்க வைக்க வழி எதுவும் இருக்கா...?’
      ‘ ஊர் ஒத்துமை ஒன்னுதான் வழி.....’
      இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் அப்பா வீட்டிற்கு வந்தார். வந்ததும் ‘ சாமியாவது...பூதமாவது....ஆயுள் முடிந்து மனுசன் சாகுறான். ஆடு, மாடு சாகுது. அதுபோல இந்த மரமும் சாகுது....இதுல என்ன வேண்டிக்கிடக்கு சாமிக்குத்தம்....’
      குடுகுடுப்பை எடுத்து அவரது பைக்குள் வைக்கப்போன கோடாங்கி அப்பாவைப் பார்த்து சொன்னார் ‘ அப்படியெல்லாம் சொல்லாதீங்க அய்யா. ஜக்கம்மா பொறுக்க மாட்டாள்....’
      ‘ என்ன செய்வாளாம்.....?’
      ‘ ஊர்க்கூடி ஊர்க்குள்ள நுழைஞ்சிருக்கிற துஷ்டத்தக் விரட்டலைன்னா ஊர் விலங்காது. ஒவ்வொருத்தரா சாகுவாங்க. மரங்க அதுவாகவே தீப்பிடிச்சி எரியும். வெள்ளாம்மை விளங்காது. ஊர்க்குள்ள பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும். தண்ணீகூட நஞ்சாகும்....’
       கோடாங்கி சொன்னதைப்போலவே மறுநாளுக்கும் மறுநாள் நாங்கள் வளர்த்த வீட்டு நாய் செத்துப்போனது. மறுவாரம் அப்பத்தாள் படுத்தப்படுக்கையில் இறந்துக்கிடந்தாள். அவரை அடக்கம் செய்து வந்த மூன்றாம் நாள் வடக்குத்தெரு குமரிமுத்து தோட்டத்தில் ஆழ உழுகையில் பூதம் தாங்கி செத்துப்போனான்.
       ஊர் துக்கத்தில் மிதந்தது. அந்தி சந்தி தெருக்களில் ஆள் நடமாட்டமில்லை. கிழக்குத் தெருக்களில் கோழிக்கழிச்சல் வந்து மொத்தக்கோழிகளையும் வாறிக்கொண்டு போனது. கூடவே மேலத்தெரு சின்னத்தம்பி வீட்டு கோயில்காளையும் வேலுத்தம்பியோட பசு மாடும் கால்களை உதைத்துகொண்டு மாண்டுப்போயின. இதையெல்லாம் விடவும் மரப்பாச்சி தோட்டத்திற்குளிலிருந்த ஆலமரம் தானாகத் தீப்பிடித்து எரிந்தது.
       அப்பத்தாள் இறந்தத் துக்கத்தில் தாத்தா படுத்தப்படுக்கையாகி விட்டார். அம்மா மாமியார் இறந்த துக்கத்தை விடவும் சாமி மரம் பட்டுப்போனத் துக்கம்தான் அவரை பெரிதும் பிடித்து ஆட்டியது. நாத்திகம் பேசிக்கொண்டுத் திரிந்த அப்பா குருசாமியின் ஆலோசனைப்படி ஐயப்பன் சாமிக்கு மாலையிட்டிருந்தார். பெண்கள் சமயப்புரத்தாளுக்கும் இன்னும் சிலர் ஓம் சக்திக்கும் மாலை அணிவித்துக்கொண்டனர். ஊரில் ஒரு வாரக் காலம் பக்தியும் பஜனையுமாக இருந்தது.
       ‘ கடவுளே....ஆத்தா....ஊர்க்குள் பேய், பிசாசு வரக்கூடாது.....ஊர்ல இருக்கிற எல்லாரையும் நல்லப்படியா  வச்சிக்கிறணும்....’ வெள்ளி, செவ்வாய்க்கு சிறப்பு அபிஷேகங்களும் , பஜனைகளும், தீப வழிபாடுகளும் நடந்தேறின.
       ஊருக்குள் பெயர்  கொடுக்காத ஒரு புது நோய் ஒன்று வாட்டி எடுத்தது. பெரியவர்கள் கக்...கக்...’ என இருமிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு முச்சுத்திணறல் வந்தது. சிலர் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார்கள். கண் எரிச்சல் ஊரின் பொது வியாதியானது.
       ஊர் இளைஞர்கள் ஐநூறு ஆயிரம் வரி சேர்த்து ஒரு கோடாங்கியை அழைத்து வந்து ஊரைப்பிடித்திருக்கும் துஷ்டத்தை  விரட்ட வேண்டும் என முடிவெடுத்தார்கள். ஒரு நாள் ஊர் கோயில் எல்லைக்குள் ஆண்களும், பெண்களும் கூடினார்கள். உடுக்கடிப்புகளும், சாமி ஆட்டமும் நடந்தேறியது.
       கோடாங்கி சொன்னார் ‘ ஒரு வாரத்திற்கு ஊர்க்குள்ள யாரையும் விடக்கூடாது...யாரும் ஊரை விட்டு வெளியூர் போவக்கூடாது....’
       ‘ சரிங்க.....’
       ‘ ஊர்க்குள்ள யார் யார்க்கூட முறப்பாடு வச்சிருக்கீங்களோ அவங்க இன்றைக்கே திருநீறு பூசி அன்னம் தண்ணீ புழங்கி முறப்பாட்டத் தீர்த்துக்கணும்.....’
       ‘ சரிங்க...’
       ‘ அடுத்து சொல்லப்போறது...முக்கியம்.......’
       ‘ சொல்லுங்க சாமீ.....’
       ‘ ஊர்க்குள்ள எங்கெல்லாம் பட்டுப்போன மரங்க இருக்கோ அதுகள வேறோடக் களையணும்..... மண்ணுக்குள்ள ஒரு இஞ்சி வேர இருக்க விடக்கூடாது....’
       கூட்டம் களைந்தது. யாரும் ஊரைவிட்டு போக இல்லை. பங்காளிகள் திருநீறு பூசிக்கொண்டு அன்னம் தண்ணீர் புழங்கி முறப்பாடுகளைத் தீர்த்துகொண்டார்கள்.  ஊர் ஆண்கள், பெண்கள் அத்தனைப்பேரும் ஒன்றுக்கூடி பட்டுப்போன மரங்களை வெட்ட அரிவாள், கோடாரியுடன் இறங்கினார்கள். முதலில்  சாமி மரத்தை வெட்டினார்கள். அம்மா ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து சாமி உண்டியலில் வைத்தாள். ‘ மாரியாத்தா.....மன்னிச்சிக்கோடியம்மா.....’
       ‘ கரிச்...கரிச்....’
       ‘ டடக்...டடக்.....’
       ‘ டடாச்.....’ அறுப்பதும், வெட்டுவதும், முறிப்பதுமாக இருந்தார்கள்.
       ‘ எங்கே இழு....இந்தா இழு......’ மரம் அடியோடுக் கீழே சாய்ந்தது. நீ, நானென மரத்தின் குச்சிகளை விறகுக்காக ஒடித்தார்கள். முறித்தார்கள். பொறுக்கி அடுக்கினார்கள்.
       ‘ இது மண்வெட்டிப்பிடிக்காகும்.....’
       ‘ இது களைக்கட்டுப்பிடி...’
       ‘ இது கட்டில் காலுக்காகும்.....’ என விறுவிறுவெனக் கிளைகளை அறுத்தெடுத்தார்கள்.
       அம்மா மாரியாத்தாளைக் கும்பிட்டபடி நின்றாள். அப்பா அறுபட்ட தண்டுகளை எடுத்து விறகடியில் அடுக்கினார். தாத்தா பச்சையாக இருக்கும் பொழுது வெட்டியிருந்தால் கதவு, சன்னலுக்கு ஆகியிருக்கும்...எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்.
       சற்று நேரத்திற்குள் மரம் வெட்டி அறுத்து சுத்தம் செய்தாகி விட்டது. வேர் களைவது ஒன்று மட்டும் மிச்ச வேலையென இருந்தது. அதற்கான வேலையில் மக்கள் இறங்கினார்கள். ஒருவர் பாறையால் குழித் தொண்டினார். ஒருவர் மண்வெட்டியால் மண்ணை அள்ளினார். இன்னொருத்தர் கோடாரியால் வேர்களைக் களைந்தெடுத்தார். வேர்கள் நாலாப்பக்கமும் ஓடிக்கிடந்தன.
       ஒரு வேர் எங்கள் மாட்டுக்கொட்டகைக்குள் ஓடிக்கிடந்தது. அதன் போக்கில் சென்று அதை ஒருவர் களைந்து, அறுத்து, ஒரு சாரைப்பாம்பைப் போல எடுத்து வெளியில் விட்டெறிந்தார். இன்னொரு வேர் பக்கத்து வீட்டு அடுப்படிக்குள் ஓடியிருந்தது. அதையும் இரண்டாக அறுத்து எடுத்தார்கள். மூன்று பேர் ஆணி வேர்களைக் களைந்துகொண்டிருந்தார்கள். ஆணி வேர் அதிலப்பாதாளத்திற்குள் சென்றிருந்தது.
       ‘இம்...இம்.....’ என்றவாறு ஒருவர் தொண்டிக்கொண்டிருந்தார். பாதாளத்திற்குள் சென்ற வேர் சட்டெனக் கிழக்குப்பக்கமாகத் திரும்பி வடக்கு நோக்கித் திரும்பியது.
       ‘ என்னய்யா இது.....ஆச்சரியமாக இருக்கு....! வேர் என்ன இவ்ளோ தூரமாப் போகும்.....?’ என்றார் ஒருவர். மற்றொருவர் ‘ இது என்ன சாதாரண மரமா.... சாமி மரமய்யா...’ என்றார். இன்னொருத்தர் ‘ களைங்கய்யா....இந்த வேர் எங்கேதான் போகுதெனப் பார்ப்போம்.....’ எனக் களைந்துகொண்டிருந்தார்கள். வேர், ஊர் குடியிருப்புகளைத் தாண்டி மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாரியைத் தாண்டி மேட்டில் ஏறி ஓரிடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.
       அந்த இடத்தை மெல்லக் களைந்தார்கள். அடர் கறுப்பு நிறத்தினாலான இரும்பு குழாய் ஒன்று அதற்குள் புதைக்கப்பட்டிருந்தது. அதைச்சுற்றியிருந்த புற்கள், புதர்கள், செடிகள், கொடிகள் யாவும் கறுகிப்போயிருந்தன. அதற்குளிலிருந்து நெடியுடன் கூடிய புகை வெளிவந்தது. அது துர்நாற்றத்தையும் கண்ணெரிச்சலையும் கொடுத்தது.
      
ஊர்மக்கள் நாசியையும், வாயையும் இறுகப் பொத்திக்கொண்டு அக்குழாயை வெறிக்கப் பார்த்தார்கள். எரிவாயுக் குழாய் அது. அதில் ‘ கெயில் ’ என எழுதப்பட்டிருந்தது.

                                                

கருத்துகள்

  1. பரிசு பெற்ற கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...