முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போர் கலகமாகுமா....?

வீட்டுக்கொரு ஆண்மகன் நாட்டைக்காக்க புறப்படுக....’ என்றொரு நாடகம் ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் நடந்தது. ஒரு மாணவித்தாய் குழந்தையைப்பெற்று, வளர்த்து மன்னனையும், நாட்டையும் காக்க வீர வசனம் பேசி தன் மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பொழுது பார்வையாளர் தரப்பிலிருந்து ஒரு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்தாள். ‘அவனை நீ அனுப்பாதேடியாத்தா....போனவருசம் இதே நாள்ல ஒரு மகனை அனுப்பி வச்சேல்ல.....அது போதாதாக்கும்....’. அவள் அப்படிச்சொன்னதும் ‘ குபீர்’ ரென எழுந்தச் சிரிப்பொலி  அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
       ‘ என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை நான் அறியேன்..... ஒரு வேளை அவன் தோன்றக்கூடும் போர்க்களத்தில்.....’ என பெண்பாற்புலவர் காவற்பெண்டு காட்டும் புறநானூற்று தாய் முகத்தில் உண்மையில் வீரம் செறிந்திருக்குமா....? மகன்களை போரில் சிரித்துகொண்டு பலிக்கொடுக்குமளவிற்கு தாய் என்ன வெறும் சடம்தானா....?. ‘அய்யோ.....! நான் கொடுத்த பால் எல்லாம் இப்படி இரத்தமாக ஓடுகிறதே....’ என ஒரு திரைப்படத்தாய் பேசும் வசனத்தைப்போல போர்க்களத்தாய் பேசியிருக்க மாட்டாளா....? பெத்த வயிறு பித்து இல்லையா!
       சரி, அந்தப் பெண்பாற்புலவரிடமே கேட்டுவிடுவோமே....‘ மன்னனுக்காகவும், அவனது ஆட்சிக்காகவும் அவள் தன் மகனைப் பறிக்கொடுத்தாள். அவளுக்காக அம்மன்னன் எதைக் கொடுத்தான்.....?. தன் ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவளுக்காக் கொடுத்திருப்பானா....? புகழ்ந்து பாடிய புலவனுக்காக எதையெல்லாமோ கொடுத்த அம்மன்னர்கள் போரில் தன் மகனை இழந்த புத்திரச்சோகத்தில் இருந்த தாய்க்கு அவள் இறக்கும் காலம் வரைக்கும் சோறூட்டிருப்பானா....?’ என்கிற கேள்விக்கு இலக்கியத்தில் பதில் இல்லை.
       ‘கலிங்கப்போரினை சந்தித்தான் அசோகன். மாண்டுக்கிடந்த சிப்பாய்களைக்கண்டு மனம் வருந்தி, திருந்தி போரினை அறவே வெறுத்தான்’ என்கிறது வரலாறு. அதுவா உண்மை.....? கலிங்கப்போருக்குப்பிறகு மீண்டும் படையெடுத்து எதிராளியை வதம் கொள்ள அவனிடம் சிப்பாய்கள் ஏது....என்பது அல்லவா உண்மை!
       மற்றொரு புறநானூற்றுப் பாடலைப்பாருங்கள். ஒரு தாயிடம் ஓடி வந்த ஒருவன்.‘ உன் மகன் போர்களத்தில் மாய்ந்துக்கிடக்கிறான்....’ என்கிறான். அவள் அதற்காகப் பதற்றமடையவில்லை. ‘ காயம் மார்பிலா , முதுகிலா....?’ என்கிறாள். அவன் ‘ முதுகில் ’ என்கிறான். அதைக்கேட்டதும் அவளுக்கு வந்ததேக் கோபம்.... ‘ என் மகன் கோழையா...அவன் என் வயிற்றில்தான் பிறந்தானா.....’ என கையில்    வேலோடு போர்க்களத்திற்குச் செல்கிறாள். மகன் மார்பில் வேல் பாய மாய்ந்துக்கிடக்கிறான். தாய் அகம் மகிழ்கிறாள். ‘ அடடே..... இவன் அல்லவா மகன்.... அவன் அப்பனைப்போலவே வீர மரணம் எய்திருக்கிறான். அவனை இறுமாப்போடு மார்பில் அணைத்து ‘ கருத்தறிய பொய்ச் சொன்ன கயவன் எங்கே..., அவன் நாக்கு எங்கே... என் வாள் இங்கே....’ என வீர வசனம் பேசுகிறாள் என்றது இலக்கியம். இது ஒருபுறமிருக்க வரலாறு வேறொரு விதமான கருத்தை பதிவு செய்துள்ளது.  
       சோழர்கள் பாண்டிய சிப்பாய்களை கைது செய்து அவர்களை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அவர்களது விழிகளை பிடுங்குகிறார்கள். ஒரு தாய் மறைவிடத்தில் மறைந்திருந்தவாறு தன் மகனின் விழிகள் பிடுங்கப்படுவதைப் பார்க்கிறாள். அவளால் புறநானூற்றுத் தாயைப்போல அகம் மகிழ முடியவில்லை. ‘ நீங்கள் ஆள வம்சமற்று போவீர்கள் ’ என சோழர்களுக்கு எதிராக சாபம் விடுகிறாள்.  
       ஒரு குமரி வீரப்பெண்மணியாக இருக்கலாம். ஆனால் தன் மகனை இழந்து நிற்கும் தாய் ஒருபோதும்  வீராங்கணையாக இருக்க முடியாது. ‘புத்திரன் மரணத்தை விடவும் ஒரு தாய்  வாழ்வில் வேறொரு கொடுமை உண்டோ!’
       கிரேக்க மொழி புராணம் இலியட். அகமெம்னன் , அக்கிலஸ் இருவரும் உடன் பிறந்தவர்கள். அக்கிலஸ் பாரிஸ் மன்னன் மீது போர்த்தொடுக்க அண்ணன் அகமெம்னன் உதவியை நாடுகிறான். அகமெம்னன் தன் தம்பிக்கு அறிவுரைச் சொல்கிறான் ‘ என் உடன்பிறப்பே.... ஒரு முறை நான் பாரிஸ் மன்னனிடம் பேசிப்பார்க்கட்டுமா....?’ அக்கிலஸ் துள்ளிக்குதிக்கிறான் ‘ சீச்சீ..... பேச்சுவார்த்தையா.... யாரிடம் யார்....?’. போர் தொடங்குகிறது. முடிவு....? முந்தையப்போரில் தோல்வியைத் தழுவியிருந்த பாரிஸ் இந்த முறை அக்கிலஸின் உயிரை பறித்துவிடுகிறான்.
       அமெரிக்கா - வியாட்நாம், அமெரிக்கா - கியூபா கடந்த நூறாண்டில் வெற்றித்தோல்வி தெரியாமல் முடிந்துப்போயிருந்த போர்கள் அவை. ஏன் அமெரிக்கா போரிலிருந்து திடீரென பின் வாங்கியது....? போரின் வெற்றிக்குப்பிறகு கிடைக்கப்போகும் இலாபத்துடன் ஒப்பிடுகையில் அதுவரைக்கும் அந்நாடு சந்தித்திருந்த இழப்பு அதிகமாக இருந்தது. கோலார் தங்கவயலில் கிடைக்கும் தங்கத்தை விடவும் அதனை வெட்டியெடுக்க ஆகும் செலவு அதிகம் என்பதைப்போல.....
       ஒரு போரின் போக்கினைத் தீர்மானிப்பது வெற்றியோ, இலாபமோ அல்ல, இழப்பீடுதான். அமெரிக்கா ஐ.எஸ் மீது தொடுக்கும் போருடன் ஒப்பிடுகையில் ஐ.எஸ் முதலாளித்துவ நாடுகளின் மீது தொடுக்கும் போருக்கு ஆகும் செலவு மிக, மிகக்குறைவு. ஓர் உதாரணத்தைப்பாருங்களேன். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தலிபான் தீவிரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்தினார்கள். இந்தியா பெரிய விலைக்கொடுத்து அவ்விமானத்தை மீட்டு வந்தது. இவ்விரு தரப்பில் தீவிரவாதிகளுடன் ஒப்பிடுகையில் அரசு தரப்பு இழப்பு மிக அதிகம் இல்லையா! அப்படித்தான். ஒரு பிரச்சனையைவிடவும் அதற்கான தீர்வு மிகக்குறைந்த பொருட்செலவில் கிடைத்திட வேண்டும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று. தீவிரவாதம் முற்றிலுமாக அழிக்க முடியாமைக்கு இதுவொரு காரணம்.  
        முதல் உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தக் காலக்கட்டம் அது. ஜெர்மனியில் ஒரு வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறத்தொடங்கியிருந்தது. போரின் போக்கு, போரினைத் தலைமையேற்று நடத்தும் அரசன், நெருக்கடி, இளைஞர்களின் ஆவேசம், மக்களின் கோபம், தாயின் பரிதவிப்பு இத்தனையையும் ஒருங்கிணைய  அரங்கேற்றமான அந்த நாடகம் ‘மதர் கரேஜ்’ ( தாயின் நெஞ்சுரம்). இந்நாடகத்தை எழுதி அரங்கேற்றம் செய்தவர் ஜெர்மன் நாடகாசிரியர் பெர்த்தோல்டு பிரேஷ்டு.
       அந்த நாடகத்தின் சாராம்சம் இதுதான். ஓர் அரசன் போரினை முன் நின்று நடத்துகிறான். போர் ஒரு முடிவும் தெரியாமல் அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. போரினை முன்நின்று நடத்த ஆண் மகன்கள்  தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். மன்னன் மக்களிடம் ஒரு கருத்துரையைப் பரப்புகிறான். ‘ மக்கள் சுதந்திரமாக வாழ வகையிலானப் போர் இது. வருங்காலத்தில் இனி போர்களே இல்லாமல் செய்யும் உலகின்  கடைசிப்போர் இது.’ இந்த அறிவிப்புடன் போர்ப்படைக்கு ஆள்ளெடுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு தாயும் குழந்தையைப் பெற்று எடுத்து வளர்த்து போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். ஒரு தாய் தான் பெற்ற நான்கு குழந்தைகளையும் போர்க்கு அனுப்பி நால்வரையும் இழந்து அனாதையாக தனித்து நிற்கிறாள். மகன்களது ஏக்கத்தின்பால் ஆழ்ந்து இறந்து விடுகிறாள். ‘ போர் யாருக்கானது......?’ என்கிற கேள்வியுடன் நாடகம் முடிகிறது.
       ‘போர் யாருக்கானது.....?’. முதல் உலகப்போரில் ஆங்கில இராணுவத்திற்கு ஆதரவாக போரில் குதித்து தன் இன்னுயிர்களை இழந்த வீரர்களுக்காக ஆண்ட ஏகாதிபத்திய அரசு தலைநகர் டெல்லியில் ஒரு நினைவு வாயிலை ( இந்தியா கேட்) எழுப்பியதைத் தவிர வேறென்ன செய்தது...?. இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இழந்த நம் சிப்பாய்களின் குடும்பத்தைப்பற்றி ஆட்சியாளர்கள் எப்பொழுதேனும் கவலைப்பட்டிருக்கிறார்களா....? . அவர்கள் வாரிசுகளின் கதி என்ன....?  
       ‘த டேல் ஆப் டூ சிட்டிஸ் ’ உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று . லண்டன், பாரிஸ் இவை இரண்டும் அந்த நாவலில் இடம்பெரும் முக்கிய நகரங்கள். பாரிஸ் நகரத்தினை வாசிக்கையில் ஒரு  சம்பவத்தை எதிர்க்கொள்ள நேரிடும். ஒரு பால்ய வயதுடையோன் போர்க்கைதி என்கிற சந்தேகத்தின் பேரில் மிகத்தாழ்ந்த கூரையுடைய ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டு ஐம்பது வருடத்திற்குப்பிறகு ஒருநாள் விடுவிக்கப்படுவான். முதுகு கூன் விழுந்துபோய்,  நீண்ட தாடி  வளர்ந்து, செம்பட்டைத் தட்டிப்போய்,... சிறையிலிருந்து வெளியே வருபவன்,  அரை நூற்றாண்டு கடந்து அவன்  வெளிச்சத்தைப்பார்க்கையில் அவனுக்குள் பயம் தொற்றிக்கொள்ளும். என்னவோ ஒரு பயங்கரம் நடக்கப்போகிறது என்று மீண்டும் அவன் அந்த இருட்டறைக்குள் நுழைந்துகொள்வான்.  இப்படியொரு பயத்தைதான் இன்றைய இளையத்தலைமுறைகள் எதிர்கொள்கிறார்கள். .
       ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் வெற்றியை நோக்கி நடைபோடுகையில் அவனது மீசையைப்போல வைத்துகொண்டு மிடுக்கு நடை நடந்தவர்கள் ஏராளம். சார்லி சாப்ளின் மட்டுமே ஹிட்லரைப்போல மீசை தறித்துகொண்டு அவனையும், அவன் மாதிரி மீசை கொண்ட அவர்களையும் கோமாளியாக கேலி செய்தான். ஒரு படத்தில் , போருக்குப்பிறகு வீரர்கள் துள்ளிக்குதித்து வெற்றியைக் கொண்டாடுவார்கள். சாப்ளின் அழுது கொண்டிருப்பார். அவரது அழுகை இறந்த வீரர்களுக்கானது. மக்களுக்கானது. ஜனநாயகத்திற்கானது.  
       தமிழ் இலக்கியத்தில் பரணியை கொண்டாடிய அளவிற்கு நாம் ஒப்பாரியை கொண்டாடவில்லை. பரணி மன்னனுக்கானது . ஒப்பாரி மக்களுக்கானது. டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ புதினத்தில் போர் பகுதிகளைப் படிக்கையில் இருக்கிற விறுவிறுப்பு அமைதிப்பகுதியைப் படிக்கையில் இல்லை என பலரும்  சொல்ல கேட்க முடிகிறது. அட....! சண்டைக்காட்சிகள் இல்லாத திரைப்படம் ஒரு படமா....? என்பதைப்போன்றது அது.
       விடுதலைப்புலிகள்  - சிங்களப்பேரின வாதம் இவர்களுக்கு இடையிலான பிரச்சனையை மனமுகந்து  மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளை நார்வே அரசாங்கம் நடத்தியது. கடைசிக்கட்ட பேச்சு வார்த்தையில் இவ்விரு குழுக்களும் பின்வாங்கின. முடிவு என்னவானது.....தன் மக்களில் பாதியை இழந்து  நிற்கிறது ஈழத்தமிழினம். ‘ 13வது சட்டத்திருத்தத்தை அமுல் படுத்தமாட்டேன் ’ எனக்கொக்கறித்த சிங்கள பேரின வாதம் உலக நாடுகளின் முன் மறுபடியும் அதே சட்டத்திருத்தத்தை எதிர் நோக்கி நிற்கிறது..
       இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா தலையிட வேண்டியதில்லை எனச்சொல்லும் நம் அரசு , சீனா - இந்தியாவிற்கு இடையிலான மக்மோகன்  எல்லைக்கோடு பிரச்சனையில் ஐ.நா பெருமன்றத்தைத் தலையிட கேட்டுக்கொள்கிறது. அரிஸ்டாட்டில் சொன்னார் இல்லையா ‘ பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும்’ என்று. பாகிஸ்தானைப் பொறுத்தவரைக்கும் இந்தியா பெரிய மீன். சீனாவிடம் ஒப்பிடுகையில் இந்தியா நெத்திலிப்பொடி.
       இது வரை இரண்டு உலகப்போர்கள் நடந்திருப்பதாக வரலாறு பேசுகிறது. அப்படியென்றால் அதற்குப்பிறகு நடந்திருக்கும் போர்களுக்கு என்னப்பெயராம்....?. கரையான் கட்டுகிற புற்றுக்குள் முதலில் கரையான் குடியேறும். அதனைத்தின்ன எறும்புகள், எலிகள் என ஊடுறுவும். பின் கருநாகம் நுழையும். இன்று உலக நாடுகளில் என்ன நிகழ்கிறது...? கருநாகம் இடத்தில் அமெரிக்காவைப் பார்க்க முடிகிறது. அமெரிக்கா ஈராக்கிற்குள் நுழைந்தப் பிறகுதானே ஐ.எஸ் தீவிரவாதம் தலைத்தூக்கி இருக்கிறது.
       இன்றைய உலகப்பிரச்சனையில் மிகப்பெரியப் பிரச்சனை சிரியா பிரச்சனைதான். இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை என்பது இரண்டு இன வாதப்பிரச்சனை. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் பிரச்சனைகள் கூட அப்படித்தான். ஆனால் சிரியாவில் சன்னி, ஷியா, கிறித்தவம், யூதம் என பல இனப்பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இன்றைய தீவிரவாதத்தின் குவியமாக அத்தேசம் திகழ்கிறது. அத்தேசத்தின் மீது முதலாளித்துவ நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவர்களின் ஊடுறுவல் மற்ற நாடுகளை நோக்கியே இருக்குமே தவிர அழிவிற்கு ஆட்படப்போவதில்லை.

       இன்றைய உலகத்தை ஆட்டி வைப்பவர்கள் இரண்டு பேர். அவர்கள் பொதுவுடைமைவாதிகள், முதலாளித்துவவாதிகள். பொதுவுடைமைவாதிகள்  கலகம் செய்பவர்கள். முதலாளித்துவாதிகள் போர் புரிபவர்கள். கலகம் பிறந்தால் ஒருவேளை வழிப்பிறக்கலாம். போர் புரிந்தால்.....? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...