வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நின்னை சரணடைந்தேன்


              அவன் எட்டையபுரம் சிவன் சன்னதியின் கடைசிப் படிக்கட்டில் உட்கார்ந்து கிழக்கு நோக்கிப் பார்த்திருந்தான். அவனுக்கு முன்னே , அவனுக்குள், அவனைச்சுற்றிலும் கண்ணம்மா பற்றிய றினைப்புதான்! புல்லின் நுனி பனித்துளியாக அவனுக்குள் கண்ணம்மா குவிந்திருந்தாள். அவளது எதற்கெடுத்தாலும் புன்னகை  கண் முன்னே நிறைந்து வழிந்தது.  
              தனித்திருத்தலும், காத்திருத்தலும்தானே காதல். கூண்டுக்கிளியினைப் போல் அவன் தனிமை கொண்டிருந்தான். அவளுக்காகக் காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் கதம்பம் போலக் கனத்தன. அந்தச் சுமையிலும் ஒரு சுகமிருந்தது. கனல் இருந்தது. அவளைப்பற்றிய ஒவ்வொரு நினைவிலும் பூச்சொரிந்து அலங்கரித்தது.
              சின்னஞ்சிறு கிளியே, செல்வக்களஞ்சியமே, பிள்ளைக் கனியமுதே, பேசும் பொற்சித்திரமே, எப்பொழுது நீ வருவாயடி கண்ணம்மா....அவனுக்குள் யாரோ பாடுவதைப்போலிருந்தது.
                     ‘ சிவ, சிவ, சிவ,....’,
              ‘ ஜீவ...ஜீவ...ஜீவ....’,
              ‘ தேவ...தேவ...’,
              ‘ கிலுகிலு கிலுகி......’,
              ‘ கிக்கீ....கிக்கீ.....’,
              ‘ கேக்க.....கேக்க.....’,
              ‘ கொக்கெக்கே.....கொக்கெக்கே.....’,
              ‘ குக்குக் குக்குக் குக்குக் குக்குக் குக்கூவே.......’ ,
              ‘ கீச்கீச்...கீச்கீச்.....’ ,
              ‘ கிசு...கிசு...கிசு....’ ,
              ‘ ரங்க...ரங்க....’ என்றவாறு பட்சிகளின் குதூகல ஒலியும், ஆடவர்களின் களியாட்டமும் இரண்டறக் கலந்து கேட்டுக்கொண்டிருந்தன. அத்தனை ஒலிகளுக்கிடையில் அவன் கண்ணம்மா அணிந்து வரும் கால் கொலுசின் சிணுங்கலை மட்டும் தனியே பிரித்தறியக் காத்திருந்தான்.
              கார்க்காலம் அது. மாலை நேரம் முடிந்து இரவு மேனியைப் போர்த்திருந்தது.
              விடிந்தால் சுப்பையாவிற்கு திருமண வைபோகம்.  அவனது வீட்டில் கெட்டிமேளம், நாதஸ்வரம் முழங்கிக்கொண்டிருந்தன. அவனது வீட்டின் ஆரவாரம் தெருவைத்தாண்டி, வானுயர மரங்கள் தாண்டி அவனுக்கு கேட்கத் தொடங்கியிருந்தன. உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் வேலைகளை வரிந்துக் கட்டிக்கொண்டு செய்து கொண்டிருந்தார்கள். அவனது வீட்டில் நண்பர்கள், உறவினர்கள் பேசிக்கொள்ளும் குதூகலம் அரவம் கூட கல்தூரம் தாண்டி அவனுக்கு கேட்டுக்கொண்டிருந்தன. சுப்பையா எதையும் பொருட்படுத்தவில்லை. சன்னதியில், கடைசி படிக்கட்டில், பின் வாசலில் உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்து தீர்த்தக் கரையில்  தெற்கு மூலையில் உட்கார்ந்தான்.
              பொழுது நகர, நகர சன்னதியில், தீர்ததக் கரைதனில் ஆளரவம் மெல்ல கரைந்துகொண்டிருந்தது. சிலைக்கு அபிஷேகம் செய்யும் அய்யர்வாள் இல்லை. சன்னதியைச் சுற்றி வரும் பெண்கள் இல்லை. குழந்தைகள் இல்லை. பெண்களின் துணை, இணை, தந்தை பேச்சுக்கொடுக்க,.... என அவனைச்சுற்றிலும் யாருமில்லை.
              சுப்பையாவின் இதயம் துடிக்கும் ஓசை உரல் இடிக்கும் சப்தமாக அவனுக்குள் கேட்டுக்கொண்டிருந்தன. அவனது மேனிக் கொதித்தது. விடைக்கும் நரம்புகள் துழன்றது. கண்களை உருட்டித் திரட்டி அவள் வரும் திசையைப் பார்த்தான். ஒத்தையடிப் பாதைகள் துடைத்துக்கிடந்தது.
              ‘இன்று வருவதாகச் சொல்லிருந்தாளே... வருவதாக இருந்தால் இந்நேரம் வந்திருப்பாளே....வரவில்லையே......’ அவனுக்குள் சொல்லிக்கொண்டு திசைகளைச் சுற்றும்முற்றும் பார்த்தான். அவள் நின்ற இடங்கள், பார்த்த இடங்கள் அவளைப் போலவே தெரிந்தது.
              ‘ வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!’ அவனுக்குள் பாடிக்கொண்டான். தீர்த்தக் கரையின் கடைசிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவன் மெல்ல எழுந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். சன்னதியை ஒரு சுற்று சுற்றி வந்தான். சன்னதியை நோக்கி வரும் வட, தென் , கீழ், மேல் ஒத்தையடிப் பாதைகளைப் பார்த்து நின்றான்.
              ‘ கண்ணம்மா...கண்ணம்மா....’
              அவளது பெயரை அவன் உச்சரிக்கையில் அவனுக்குள் தேன் வந்து பாய்வதைப்போலிருக்கிறது. வந்தே மாதரம் சொல்லுகையில் அவனுக்குள் பாயும் உயிர் போல ஓர் உருவமற்ற பாய்ச்சல் அவனுக்குள் பாய்ந்தது. கண்களை மூடுவதும் திறப்பதுமாக இருந்தான்.  நேற்றைய தினம் அவளை நினைத்து எழுதியப் பாடல் அப்பொழுது அவனது நினைவிற்கு வந்தது. காற்றில் அலாவி கைகளை வீசிக்கொண்டு உரத்தக்குரலில் பாடினான்.
.             ‘ காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
              காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
              தூற்றினை யொத்த இதழ்களும்...’
              ‘ ம்..... இதழ்களும்....?’ 
              ஒரு கிளிப்பேச்சு அவனது காதிற்குள் நுழைந்தது. பாடிக்கொண்டிருந்தவன்  பாடலை நிறுத்தி கண்களை மெல்லத்திறந்தான்.
              ‘ சுப்பையா...’
              அவளது பிம்பம் விழித்திரையில் விழுவதற்கும் அவளது கொஞ்சும் மொழி அழைப்பு செவிதனில் நுழைவதற்கும் சரியென இருந்தது.
              ‘ கண்ணம்மா....’ அவன் அவளது கரத்தைப் பற்ற நெருங்கினான்.
              ‘ வேணாம்....’ என்றாள் அவள்.
                     சுப்பையாவின் முகத்தை அவள் குறுகுறுவெனப் பார்த்தாள். அரும்பிக்கொண்டிருந்த மீசையை ரசித்தாள். அவனது தலையில் கட்டியிருந்த முண்டாசை ரசித்தாள். அவனது ஏறிய நெற்றி, நிமிர்ந்த நெஞ்சு, குவிந்த இதழ்கள், ஏறு போல நடை, குன்றென நிமிர்ந்து நின்றதை கண்கொள்ள ரசித்தாள். மெல்ல சிரித்தாள்.
              ‘ நல்லா இருக்கிறது சுப்பையா....’
              ‘ என் பாட்டைத்தானே சொல்கிறாய்....’ என்றான் அவன்.
              அவள் திடுக்கிட்டாள். ‘ ஆம்...ஆம்..... ஊகூம்.... இல்லை இல்லை.....’ என்றவாறு நீள் கிடை வாக்கில் தலையாட்டினாள்.
              ‘ கண்ணம்மா....உனக்கு நான் எழுதிய பாட்டு இது. பிடிக்கவில்லையா....?’
              ‘ பிடித்திருக்கிறது....ஆனால் ....’
              ‘ ஆனால்......?’
              ‘ பிடிக்கவில்லை....’
              ‘ என்ன சொல்கிறாயடி கண்ணம்மா...?’
              ‘ உன் பாடலில் பிழை இருக்கிறது சுப்பையா...’
              ‘ இருக்காது கண்ணம்மா....’ என்றவாறு அவன் குன்றென நெஞ்சை நிமிர்த்தினான்.
              ‘ பிறகு என்ன நான் பொய் சொல்கிறேன் என்கிறாயா....?’
              ‘ சரி...சரி.... கற்றதொழுகு. என்னப்பிழை...?’
              ‘ பொருட்பிழை...’
              ‘ இருக்காது. நீ சொல்வது பொய்....’
              ‘ மெய். வேண்டுமானால் இன்னொரு முறை உன் பாடலைப்பாடேன்....’
      அவன் கண்களை இறுக மூடிக்கொண்டு பாடினான்.
                     ‘ காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்...’
              ‘ நிறுத்தும் சுப்பையா’
              அவன் விகற்பத்தோடு தான் பாடியதை நிறுத்தினான். ‘ பிழை தெரிகிறதா இல்லையா....?’
              ‘ என்னப் பிழை....?’
              ‘ உன் பாடலில் இருக்க வேண்டியது கண்ணம்மா இல்லை செல்லம்மா...’
              ‘ கண்ணம்மா என் காதலி ’
              ‘ செல்லம்மா உன் வாழ்க்கைத் துணைவி. காற்று வெளியிடை செல்லம்மா - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன்....இப்படித்தான் உன் பாடல் இருந்திருக்க வேணும் ’
              ‘ கண்ணம்மா.... இது உனக்கு நான் எழுதியப்பாட்டு’
              ‘  எனக்கு நீ பாட்டு எழுத வேண்டாம் என்கிறேன் நான்’
              ‘ கண்ணம்மா....! வானமழை நீ எனக்கு , வண்ணமயில் நானுனக்கு; பானமடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு’
              ‘ சுப்பையா..... உன்னை கும்பிடுகிறேன். போதும்...போதும்....’
              ‘ மாட்டேனடி கண்ணம்மா..... காதலடி நீ எனக்கு காந்தமடி நானுக்கு ; வேதமடி நீ எனக்கு, வித்தையடி நானுக்கு’
              ‘ அய்யோ... என்னை உன் எதிர்காலத்துடன் உதைத்து விளையாடும் பந்தாக்கி விடாதே... நான் உன்னைப்போல ஆண் அல்ல....’
              ‘ கண்ணம்மா.... பேதம் பார்க்காதே... காதலில், களவில், கற்பில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. கற்பென்று வைத்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்பவன் நான்’
              ‘ சுப்பையா....நான் உன் குலத்தாள் இல்லை....’
              ‘ பார்ப்பானை ஐயரெனடற காலமும் போச்சே ! பாடியிருக்கிறேன் கண்ணம்மா....’
              ‘ போச்சு! போச்சு! உன்னால் என் நிம்மதியெல்லாம் போய்விட்டது’ கண்ணம்மா அதை இடத்தில் உட்கார்ந்து மடிக்குள் தலையை புதைத்துகொண்டு மேனி குலுங்கினாள்.
              ‘ கண்ணம்மா.... என்ன செய்கிறாய்... எங்கே உன் முகத்தைக்காட்டு’ அவள் மடியிலிருந்து தலையை நிமிர்த்தினாள். அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியிருந்தது. அவளது கன்னத்துளியை விரல்களால் துடைத்தான். ‘ அழாதடி கண்ணம்மா... அழாதே..... உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி.....’
              கண்ணம்மா சட்டென அழுகையை நிறுத்தினாள். முந்தாணையால் முகத்தைத் துடைத்துகொண்டான். இருவரும் சோலையைத் தாண்டி மரம் செடி கொடிகளின் பூக்களைக்கிள்ளி ஒருவர் மீது ஒருவர் விட்டெறிந்து கொண்டு நடந்தார்கள்.
              ‘ சுப்பையா...போதும்.... எனக்கு விடைகொடு. நான் விடைபெறுகிறேன்...’
              ‘ மாட்டேன்.....நீ என் கூடவே இருக்க வேண்டியவள்....’
              அவள் நின்று நிதானித்து சுப்பையாவை நேருக்கு நேர் பார்த்து முறைத்தாள். ‘ என்ன சுப்பையா விளையாடுகிறாயா.... நாளை உனக்கும் செல்லம்மாவிற்கு திருமணம் மறந்து விட்டாயா.....?’
              ‘ உன்னை மறக்க முடியவில்லையே கண்ணம்மா...’
              ‘ நீ என்னை மறந்துதான் ஆக வேண்டும்....’
              ‘  நான் ஏன் உன்னை மறக்க வேண்டும்....?’
              ‘ நீயோ பிராமணன். நானோ உங்கள் குலத்திற்கு தொண்டுழியம் செய்பவள். நான் உனக்கு காதலியாக இருக்கலாம். துணைவியாக இருக்க முடியாது’
              ‘ சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திர மேதுக்கடீ? ஆத்திரங் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திர முண்டோடீ? ’
              ‘ நான் ஒன்றும் சாத்திரம் பேசவில்லை. சாதிதர்மம் அப்படியாக இருக்கிறது என்றுதான் சொல்கிறேன்’
              ‘ சாதிகள் இல்லையடி பாப்பா என பாடியவன் நான்....’
              ‘அட பைத்தியக்காரா.....பாப்பாவிற்குத்தானே பாடியிருக்கிறாய்....தாத்தாகளுக்கு இல்லையே...’ என்றவாறு அவள் ஒரு பூச்சொரிந்த மரத்தின் தூணில் முகம் பதித்தாள்.
              ‘ கண்ணம்மா... நீ வாய்ச்சொல்லில் வீரரடீ....’ என்றவாறு அவன் அவளது முகத்தைத் திருப்பி  அவளது நிலா முகத்தைப் பார்த்தான். அவளது வேதத்திருவிழி தேன்சிட்டின் சிறகைப்போல அடித்துகொண்டிருந்தன. அவளது தேனிதழ் வறண்டு துடித்தன. அவளது நகை புதுரோஜா பூ, விழி இந்திர ரோஜாப் பூ, முகஞ்செந்தாமரைப் பூ ...
              ‘உன்னை நான் விடப்போவதில்லை....இப்படி வா. என் மடியில் உட்கார்....’
              ‘ நான் மாட்டேன் சுப்பையா.... மாட்டேன்....’
              ‘ அப்படியானால் நீ என்னை இத்தனை நாளும் காதல் செய்யவில்லை அப்படித்தானே....?’
              ‘ என் காதலுக்கு முன்னால் உன் காதல் மண்டியிட வேணுமடா....’
                     ‘ என்னை விடவும் நீ அதிகமாகக் காதலித்தாய் என்கிறாயா....?’
              ‘ பின்னே இல்லையா....?’
              ‘ எப்படி சொல்கிறாய்...!’
              ‘ நீ என்னை மட்டுமா காதலித்தாய்.....?’
              ‘ பிறகு....!’
              ‘ நீ கவிதையை காதலித்தவன். இந்திய சுதந்திரத்தைக் காதலித்தவன். பத்திரிக்கைகளைக் காதலித்தவன். எழுத்தைக் காதலித்தவன். அதோ....அங்கே ஓடுகிறதே வெள்ளை நிறத்திலொரு பூனை அதைக்கூட விட்டு வைக்காதவன். இத்தனையையும் காதலித்து மிச்சம் நேரமிருந்தால்தானே என்னை நீ காதலித்தாய்.... ஆனால் நான் என்ன அப்படியா....! எனக்கு சக நேரமும் உன் நினைப்புதான்!’
              சுப்பையா கண்ணம்மாவின் பேச்சை மெய்மறந்து ரசித்தான். ‘ அப்பப்பா.... ஒரு பல்லவியையே மூச்சு விடாமல் ஒப்பித்து விட்டாயே.... நல்லாப் பேசுகிறாயடீ கண்ணம்மா....’
              ‘ நீ எனக்கு எழுதி தரும் காதல் கவிதைகளைப்படித்து இதைக்கூட பேசாவிட்டால் என்னவாம்!’
              இருவரும் பேசிக்கொண்டே சன்னதியை ஒரு சுற்று சுற்றி வந்தார்கள். எப்பொழுதும் கண்ணம்மா முன்னே நடக்க சுப்பையா பின்னால் நடந்து வருவான். அன்றையத்தினம் சுப்பையாவை முன்னே நடக்க விட்டு அவள் பின்னால் நடந்தவளாக இருந்தாள்.
              ‘ சுப்பையா...நான் ஒன்று கேள்விப்பட்டேன் உண்மையா...?’
              ‘ சொல்லடி கண்ணம்மா....?’
              ‘ உன்னை இப்பொழுது யாரும் சுப்பையா என்று அழைப்பதில்லையாமே....?’
              ‘ நீ அப்படித்தானே என்னை அழைத்து வருகிறாய்....?’
              ‘ என்னை விடும்..மற்றவர்களைச் சொல்கிறேன்....’
              ‘ சுப்பையா என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்கிறார்களாம்....?’
              ‘ சுப்பிரமணியம் என்றும் பாரதி என்றும் அல்லவா  அழைக்கிறார்களாம்.’
              ‘ நீ என்னை என்றும் சுப்பையா என்றே அழை கண்ணம்மா....’
              ‘ நான் மாட்டேன்....’
              ‘ ஏன்....?’
              ‘ நான் உன்னை அப்படி அழைக்க நான் உன் இல்லத்தாள் செல்லம்மாளா என்ன...?’
              அவள் அப்படி சொன்னதும் சுப்பையாவின் முகம் சூரியக்கதிர் பட்டு உடையும் பனித்துளியைப் போல உடைந்தது. அவன் அவளை செல்லமாக அறையாக கையை ஓங்கினான். அவள் அவனிடமிருந்து தப்பித்து ஓடினாள். அவன் அவளை துரத்தினான். மான் மானைத் துரத்துவதைப்போலதான் இருவரும் சன்னதியைத் தாண்டி தெப்பக்குளத்தைத்தாண்டி அந்த சோலை வனத்திற்குள் ஓடினார்கள். அவள் அவனிடம் பிடிகொடுக்கவில்லை. காதலனிடம் பிடிபடாத ஆனந்தம் அவளுக்கு. அவளை வெற்றியடைய வைத்துவிட்ட திருப்தி அவனுக்கு. மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க இருவரும் ஓடி  கூப்பிடும் தூரத்தில் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு நின்றார்கள்.
              சுப்பையா கண்ணம்மாவை அழைத்தான் ‘ வெற்றிகொண்ட கையினாய் வா வா வா’
              கண்ணம்மா பதிலுக்கு அவனுடைய பாடலையே பதிலாகப் பாடினாள் ‘ வலிமையற்ற தோளினாய் போ போ போ’
              அவன் அவளைப்பார்த்து சிரித்தான். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.       .
                     ‘ நீ ஏன் என்னைத் துறத்துகிறாய்....?’ கேட்டாள் கண்ணம்மா.
              ‘ கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ....?’
              ‘அட...கண்ணில் தெரிகிறது வானம். அதற்காக வானம் உன்னிடம் வசப்படலாகுமோ...?’
              ‘கண்ணின் மணி போன்றவளே....கட்டியமுதே....கண்ணம்மா.....நீ என் தீராத விளையாட்டுப்பிள்ளை’
              ‘ இனி அந்த இடத்தில் செல்லம்மாள் என்கிறேன்’
              ‘ சகியே.... உன்னை என்னால் மறக்க முடியாது....’
              ‘ சுப்பையா.... மறக்க வேண்டாம். நினைக்காமல் இருக்கச் சொல்கிறேன்....’
              ‘ சுப்பையா கண்ணம்மாவின் கரத்தைப்பற்ற எத்தனித்தான்.  அவள் அவனிடமிருந்து விலகி விலகி தூரத்திற்குச் சென்றாள்.
              ‘ சுப்பையா.... நான் சொல்வதைக் கேள். இனி நாம் ஒருவரையொருவர் மறந்துவிடுவோம்...’
              ‘ கண்ணம்மா...என்னிடம் நீ. விளையாட்டுக் காட்டாதே....’
              ‘ நான் விளையாட்டுக் காட்டவில்லை. சுப்பையா.... நாளை முதல் நீ இன்னொருத்தியின் கணவன் என்பதை நினைவுபடுத்துகிறேன்’
              ‘ அதற்காக....’
              ‘ காதல் வேண்டாம் என்கிறேன்’
              ‘ காதல் போயிற் காதல் போயிற் சாதல் சாதல் சாதல் தெரியும்தானே......?’
              ‘ கூடல், கூடல், கூடல் கூடிப்பின்னே குமரன் போயில் வாடல் வாடல் வாடல் இது நீ சொன்னதுதானே....’
                     இருவரும் ஒருவரையொருவர் நெருங்கிவந்தார்கள்.
              ‘ உன்னை நான் பார்த்துகொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது கண்ணம்மா.....’அவன் அவளது கையைப்பிடித்தான். அவள் மெல்ல விசும்பினாள்.
              ‘  நீ என்னை பார்த்துகொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதானே.... இங்கே வா....’ என்றவாறு அவனை அவள் சன்னதியின் படித்துறைக்கு அழைத்துச்சென்றாள்.
              ‘ இப்படி உட்கார் ’ என்றாள்.
              அவன் உட்கார்ந்தான்.
              அவனது முன்னே அவள் நின்றாள். ‘ என்னைப் பார்....’ என்றாள். அவன் அவளைப் பார்த்தான். பார்த்துகொண்டே இருந்தான்.
              ‘ இப்பொழுது உன் கண்களை இறுக மூடு’ என்றாள்.
              அவன் இறுக மூடினான்.
              ‘ என்னை உன் மனதிற்குள் ஓட விடு’
              ‘ ஆம்.... ஓட விடுகிறேன்...’ என்றான்..
              ‘ நான் தெரிகிறேனா....?’
              ‘ இம்....தெரிகிறாயடி கண்ணம்மா...’
              ‘ நல்லாத் தெரிகிறேனா.....?’
              ‘ ஆம்.... நன்றாகவேத் தெரிகிறாய்...’
              ‘ கண்களைத் திறக்காமல் என்னையே பார்த்துகொண்டிரு....’
              சுப்பையா கண்களை இறுக மூடி கண்ணம்மாவை உள்ளூர பூசித்தான். மனதிற்குள் பூரித்தான். அவளது நினைப்பில் ஆகாயத்தில் மிதந்தான். அவளால் நிரப்பப்பட்ட மனதால் அவன் நீண்ட நேரம் தன்னை மறந்திருந்தான்.
              ‘ கண்ணம்மா.... கண்ணம்மா......!’ மெல்ல அழைத்தான். அவளடமிருந்து ஓர் அரவமுமில்லை.
              கண்களைச் சட்டெனத் திறந்தான். அவன் எதிரே அவள் விட்டுச்சென்ற வெட்டவெளிதான் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்தான். நாலாபுறமும் அவளைத் துலாவினான். கண்ணம்மாவை அப்பொழுதே பார்க்க வேண்டும் போலிருந்தது. கண்களை இறுக மூடினான். தன்னிலை மறந்து பாடினான்.
              ‘ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
              நின்னைச் சரணடைந்தேன்!’                                                         -


1 கருத்து:

  1. நின்னைச் சரணடைந்தேன்... என்றும் ஆழப்பதிந்திருக்கும் சொற்றொடர்.

    பதிலளிநீக்கு